தனி ஒருவனுக்கு உணவு இல்லை யெனில் இந்த ஜகத்தினை அழித்துவிடுவோம் என்றார் மகாகவி பாரதியார். ஆனால், ஒவ்வொரு நாளும் இந்த உலகில் பட்டினியால் மக்கள் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டும். எட்டுத் திக்கும் பசியைப் போக்குவதே இளம் தலைமுறையின் லட்சியமாய் இருக்க வேண்டும்” என்கிறார் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஏ.ஆர்.ஹரிணி. பதினேழு வயதிலேயே ஓர் அறக்கட்டளையை உருவாக்கி, ஏராளமானோரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இம்மாணவியை, நியூயார்க்கில் நடைபெற்ற அகில உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் கௌரவித்துள்ளனர்.
கல்வி, விளையாட்டு, கலை என அனைத்துத் துறைகளிலும் வெற்றி வாகை சூடியுள்ள இந்த மாணவியை, கோவை சித்தாபுதூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். “பெற்றோர் ஏ.ராஜேந்திரன்-ஆர்.மேனகா. அப்பா பிரிண்டிங் தொழிலில் இருந்தாலும், பாரம்பரியமாய் நாங்கள் விவசாயக் குடும்பம்தான். விடுமுறை நாட்களில் எல்லாம் அன்னூர் அக்கரைசெங்கப்பள்ளியில் உள்ள தாத்தா அருணாசலத்தின் விவசாயத் தோட்டத்துக்குச் சென்றுவிடுவேன். இதனாலேயே வேளாண்மையின் மீது எனக்கு ஆர்வம் அதிகம்.
10-ம் வகுப்பு வரை சுகுணா பிப் பள்ளியில் படித்தேன். தற்போது எஸ்.எஸ்.வி.எம். சர்வதேசப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே பிச்சைக்காரர்களைப் பார்த்தால், மனது வலிக்கும். சாப்பாடு கூட இல்லாமல் பிச்சையெடுக்கிறார்களே என்று வேதனையாய் இருக்கும். அப்பா-அம்மாவிடம் காசோ, சாப்பாடோ வாங்கி அவர்களுக்குக் கொடுத்தால்தான், மனம் நிம்மதியடையும். ஏதாவது ஒரு அமைப்பை தொடங்கி, ஏழை, எளியவர்களுக்கு உதவலாம் என்ற எண்ணம் உருவானது. அப்பாவை நச்சரித்து, `ராசி அறக்கட்டளை’ என்ற அறக்கட்டளையை உருவாக்கினேன். கிராமப்புற ஏழை மக்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு உணவு, உடை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை என, எங்களால் முடிந்த வரை உதவினோம். புயல், வெள்ளம் என இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று, உணவு, மருந்து என உதவினோம். சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுடனும் இணைந்து, பணியாற்றினேன்.
இந்த நிலையில்தான், ஐக்கிய நாடுகள் சபையின் நட்புறவுத் தூதர் அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற அகில உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டேன்.
இதில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 16 முதல் 25 வயதுக்கு உட்பட்ட 900 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டோம். இந்தியாவில் இருந்து 5 பேர் பங்கேற்றோம். ஒவ்வொரு நாட்டிலும் சிறந்த மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, இந்த மாநாட்டில் கௌரவித்தனர்.
வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் அழித்து, இந்த பூமியை பாதுகாப்பற்ற உலகமாக மாற்றி வருகிறோம். வாழத் தகுதியற்ற உலகை எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்வது எந்த வகையில் நியாயமாகும்? எனவேதான், ஐக்கிய நாடுகள் சபை, 2030 என்ற இலக்கை முன்வைத்து, 17 குறிக்கோள்களை அடையத் திட்டமிட்டுள்ளது. மக்களின் பசி, வறுமையைப் போக்குதல், அனைவருக்கும் கல்வி, பாலின சமத்துவம், புவி வெப்பமயமாதலைத் தடுப்பது, இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவையே அந்த 17 குறிக்கோள்கள்.
இதை முன்வைத்து நடத்தப்பட்ட சர்வேதச இளம் தலைவர்கள் மாநாட்டில், பொருளாதாரத்தில் பின் தங்கிய நாட்டில் வாழும் குழந்தைகளின் நலன், நோயற்ற வாழ்வு, தரமான கல்வி, சுத்தமான குடிநீர், ஆற்றல் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, தொழில் துறை முன்னேற்றம், தரமான பொருட்கள் தயாரிப்பை ஊக்குவித்தல், விவசாயத்தில் புதிய யுக்திகள், அவசரகால மருத்துவ உதவி, இளம் தலைமுறையின் பாதுகாப்பு, உலக வெப்பமயமாதல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து சென்றவர்களுடன் மட்டுமின்றி, இத்தாலி, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மாணவ, மாணவிகளுடனும் பேச வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில்தான் ஏழ்மை, வறுமை, பசி, நோய் என பிரச்சினைகள் அதிகம் என அதுவரை கருதிக் கொண்டிருந்த எனக்கு, நம்மைக் காட்டிலும் மோசமான நிலையில் இருக்கும் நாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக, சாப்பாட்டுக்குக்கூட வழியின்றி பலரும் உயிரிழக்கும் நாடுகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.
எனது செயல்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்த உறுதிபூண்டுள்ளேன். பிளஸ் 2 முடித்துவிட்டு, பி.எஸ்சி. விவசாயம் படிக்கத் திட்டமிட்டுள்ளேன். எதிர்காலத்தில், வேளாண்மை சார்ந்த தொழிலைத் தொடங்கி, உணவு உற்பத்தியை அதிகரித்து, மக்களின் பசியைப் போக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதையே எனது லட்சியமாகக் கொண்டுள்
ளேன். வேளாண் சார்ந்த பல்வகையான பொருட்களை உற்பத்தி செய்வதே இலக்கு. முடிந்தவரை மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவேன்” என்றார் நம்பிக்கையுடன்.
குதிரையேற்றத்தில் சாதனை
படிப்பிலும் மாணவி ஹரிணி சுட்டிதான். கட்டுரை, பேச்சுப் போட்டிகள், நாட்டியம், ஓவியம், புகைப்படம் எடுத்தல் என பலவற்றிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். “6-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே குதிரையேற்றம் பயின்று வருகிறேன். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். போபாலில் நடைபெற்ற தேசிய குதிரையேற்றப் போட்டியில் 8-ம் இடத்தைப் பிடித்தேன். போர்ச்சுக்கல்லில் நடைபெற உள்ள அகில உலக குதிரையேற்றப் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதே எனது லட்சியம். நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டத்தில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளேன். துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றுவருகிறேன். அதேபோல, வனம் சார்ந்த புகைப்படக்கலையான `வைல்டு ஃலைப் போட்டோகிராஃபி`யையும் கற்று வருகிறேன். பெற்றோர், எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான டாக்டர் மணிமேகலை மோகன் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் ஊக்குவித்து வருகின்றனர்” என்றார் மாணவி ஹரிணி.
டிவி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என நேரத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மத்தியில், பசியைப் போக்கும் லட்சியத்துடன், படிப்பு, விளையாட்டு, கலை என அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் செலுத்தி வரும் மாணவி ஹரிணியைப் பாராட்டிவிட்டு, சமூகத்தைப் பாதுகாக்க எதிர்கால சந்ததி இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டோம்.
மாணவி குவித்த விருதுகளும், பதக்கங்களும்...
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு, கலைப் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும், பதக்கங்களையும் குவித்துள்ளார் மாணவி ஹரிணி. பாரதியார் கல்வி மேம்பாட்டு மையத்தின் `இலக்கியத் திலகம்’ விருது, கோவை ரோட்டரி சங்கத்தின் `இளம் சாதனையாளர்’ விருது, சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் `இளம் கொங்கு சாதனையாளர்’ விருது, கோவை ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத்தின் `இளம் சாதனையாளர்’ விருது, அகில உலக கொங்கு மையம் வழங்கிய `சாதனைப் பெண்’ விருது, எஸ்.எஸ்.வி.எம். பள்ளி வழங்கிய `டைனமிக் அச்சீவர்’ விருது, அகில உலக கொங்கு மாநாடு வழங்கிய `கொங்கு எக்ஸலன்ஸ்’ விருது என பல்வேறு விருதுகளும் இவரை நாடி வந்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago