பொன்விழா கண்ட பறவைக் காதலர்!

By ஆர்.கிருஷ்ணகுமார்

பறவைகளை படமெடுக்க பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம். உங்களுக்கு நல்ல படம் வேணுங்கறதுக்காக கல் வீசுறது, குச்சி வீசுறதுனு பறவைகளை தொந்தரவு செய்யதீங்க” என்கிறார் 50 ஆண்டுகளுக்கு மேலாக படமெடுத்துக் கொண்டிருக்கும் பறவை ஒளிப்படக் கலைஞர் டிஆர்ஏ.அருந்தவச்செல்வன். வயது 70-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் விவசாயம் செய்துகொண்டு, இன்னமும் காடு காடாகச் சுற்றி பறவைகளைப் படமெடுத்துக் கொண்டிருக்கிறார். ஏறத்தாழ 50 ஆண்டுகளாக வன விலங்குகள், பறவைகள், இயற்கையைப் படமெடுத்ததுடன், பறவைகள் குறித்த பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது படங்கள் சர்வதேச, தேசிய அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளதுடன், உலகப் பிரசித்தி பெற்ற இதழ்களிலும் வெளியாகியுள்ளன. கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

“என்னோட பூர்வீகம் சத்தியமங்கலம் அருகேயுள்ள தூக்கநாயக்கன்பாளையம். விவசாயக் குடும்பம். அப்பா சின்ன வயசுலேயே இறந்துட்டாரு. அம்மா கோயம்புத்தூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவங்க. அதனால, கோயம்புத்தூர் மணி மேல்நிலைப் பள்ளியில 11-ம் வகுப்பு முடிச்சேன். பிஎஸ்ஜி-யில பியுசி-யும், அரசு கலைக் கல்லூரியில பி.ஏ.வும் படிச்சேன். சின்ன வயசுல எங்க வீட்டிலேயே புறா, மான், முயல்னு நிறைய பிராணிகளை வளர்த்தோம். வீட்டுக்குப் பக்கத்துலயே

காடு. இதனால, சின்ன வயசுல இருந்தே இயற்கை, விலங்குகள், பறவைகள்னு விருப்பம் அதிகம். அப்பவே வீட்டுல ஒரு கேமரா இருந்தது. அதுல படமெடுக்க ஆரம்பிச்சேன். பறவைங்க, யானை, குரங்குனு நிறைய படமெடுத்தேன்.

பிரிட்டிஷ் மேஜரிடமிருந்து பெற்ற கேமரா!

ஒருமுறை குன்னூர்ல டிரக்கிங் போனப்ப, பிரிட்டிஷ் மேஜர் ஒருத்தரு, எஸ்.எல்.ஆர். கேமராவை விக்கறதா ஒரு ஸ்டுடியோவுல போர்டு போட்டிருந்தாரு.  நான் உள்ள போனப்ப, ஸ்டுடியோகாரங்க 4, 5 பேர் இருந்தாங்க. சின்னபையன், உனக்கெல்லாம் இது கிடைக்காதுனு சொல்லி வெளியில துரத்திட்டாங்க. கடைக்கு வெளியில நின்னுக்

கட்டிருந்தப்ப, மேஜரோட ஆர்டர்லி என்னையப் பாத்துட்டு, என்னடா தம்பி வேணும்னு கேட்டாரு. கேமாரா வாங்க வந்தேன், விரட்டறாங்கனு சொன்னேன். அவரு என்னை மேஜர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனாரு. மேஜர் என்னையப் பாத்துட்டு, எதுக்கு கேமரா வேணும்னு கேட்டாரு. வைல்டுலைஃப் போட்டோகிராபி எடுக்க எஸ்.எல்.ஆர். கேமரா வேணுமுன்னு சொன்னேன். நீ எடுத்த போட்டோவை காட்டு. நல்லா இருந்த இந்தக் கேமராவை உனக்கே கொடுக்கறேன்னு சொன்னாரு. உடனே ஊருக்குத் திரும்பி, நான் எடுத்த போட்டாவையெல்லாம் கொண்டுகிட்டுப் போய், அவர்கிட்ட காட்டினேன். நல்லா படமெடுக்கறனு சொல்லி, அந்தக் கேமராவை என்கிட்டயே கொடுத்துட்டாரு. இது என்னோட வாழ்க்கையில ஒரு திருப்புமுனையா அமைஞ்சது.

ஒருமுறை நிலத்துல களைகொல்லி தொடர்பா படமெடுத்துக்கிட்டிருந்த சீனிவாசனை சந்திச்சேன். அவரு ஸ்லைடு ஃபிலிம் பத்தி சொன்னாரு. அது ரொம்ப காஸ்ட்லியான பிலிம். பாம்பேல இருந்துதான் வரும். நாம படமெடுத்தவாட்டி, பிராசிங் செய்ய அனுப்பனும். பிராசஸ் செஞ்சி வந்ததுக்கப்புறம், அதைப் பயன்படுத்தலாம். க்வாலிட்டி ரொம்ப நல்லா இருக்கும். அதனால, நான் ஸ்லேடு ஃபிலிம்லயும் படமெடுக்கத் தொடங்கினேன். 1970-க்கு அப்புறம் கலர் ஃபிலிம்ல படமெடுத்தேன்.

விவசாயம் பாத்துக்கிட்டிருந்ததால, நிறைய நேரம் கெடச்சது. அந்த நேரத்தையெல்லாம் படமெடுக்கப் பயன்படுத்திக் கொண்டேன். பள்ளிக்கூடம் படிக்கும்போதே,  மருதமலையில ரெண்டு கருப்பு ஆடு முட்டற மாதிரி படமெடுத்து, ஆஃபா ஃபிலிம் போட்டிக்கு அனுப்பிவெச்சேன். அந்தப் படத்துக்கு விருது கிடைச்சது.

இதுதான் எனக்கு கிடச்ச முதல் விருது. அந்தக் காலத்துல `தி கேரவன்’ மேகசின்ல என்னோட படங்கள் வெளியாகியிருக்கு. அதுக்கப்புறம் `பெட்டர் போட்டோகிராபி’னு நிறைய புத்தகங்கள்ல என்னோட படங்கள் வெளியானது.

பறவைகள், விலங்குகள், இயற்கைனு படமெடுக்கறது மட்டுமில்லாம, பல்வேறு விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டேன். பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பறவை ஒளிப்படக்கலை, இயற்கை பாதுகாப்புனு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்தேன். வேளாண்மைக் கல்லூரி, வனக் கல்லூரி மட்டுமில்லாம, மலைவாழ் பழங்குடி மாணவர்கள் படிக்கற பள்ளிக்கூடங்களுக்கும் சென்று, வகுப்புகளை நடத்தினேன். ஏன்னா, மலைவாழ் மாணவர்கள், கிராமத்து மாணவர்கள் உண்டி வில், கல்லைக் கொண்டு, பறவைங்க, பிராணிகள்னு நிறைய உயிர்களக் கொன்னுக்கிட்டிருந்தாங்க. அதுங்களோட முக்கியத்துவத்தை அவர்களுக்கு புரியவெச்சேன்.இந்தியாவுல இருக்கற எல்லா காடுங்க, மலைங்க, வன உயிரின சரணாலங்கள்னு சுத்தியிருக்கேன். ஆப்பிரிக்கா காடுகளுக்கும் போய் படமெடுத்திருக்கேன்” என்றார் அருந்தவச்செல்வன்.

தமிழகத்தில் சிறந்த கானுயிர் ஒளிப்படக் கலைஞரில் ஒருவரான இவர், இரவு நேரத்தில் பிராணிகள், பறவைகளைப் படமெடுப்பதில் வல்லவர். சாமா, மஞ்சள் தொண்டைச்சிட்டு, என அரிய வகையிலான பறவைகளைப் படமெடுத்துள்ளார். இயற்கை குறித்த புகைப்படப் போட்டிகளில் இவரது 600-க்கும் மேற்பட்ட படங்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இயற்கை புகைப்படக் கலையில் ஓர் அங்கமான ‘பறவை ஒளிப்படக்கலை’ தொடர்பாக இவர் எழுதிய நூல், பேர்ட்ஸ் போட்டோகிராபி தொடர்பான அரிய தகவல்களைக் கொண்டது. இயற்கை வனங்கள், கானுயிர்களைப் பாதுகாப்பது, அவற்றின் வளர்ச்சிக்கான சூழல் தொடர்பாக, பல்வேறு நாளிதழ்கள், மாத இதழ்கள், புத்தகங்களில் ஏராளமான கட்டுரைகளை  எழுதியுள்ளார்.

“ஒரு கட்டத்துல ஃபிலிம் பிராசசிங் இல்லாமயே போயிடுச்சு. இதனால 10 வருஷத்துக்கு முன்னாடி நானும் டிஜிட்டல் போட்டோகிராபிக்கு மாறிட்டேன். ஃபிலிம் கேமராவை நாம ஹேண்டில் செய்யனும். டிஜிட்டலைப் பொருத்தவரைக்கும் எல்லாமே சுலபம். அதேசமயம், துல்லியம், ஸ்பீடுனு பல நன்மைகளும் உண்டு. போன மாசம்கூட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்போய் படமெடுத்துக்கிட்டு வந்தேன். கூகை ஆந்தை முட்டை வெக்கிறதுல இருந்து, பறக்கற வரைக்கும் 128 நாட்கள் காத்திருந்து படமெடுத்தேன். இதேமாதிரி, கருடனை படமெடுக்கவும் ரொம்பவும் கஷ்டப்பட்டேன்.

நீர்நிலைகள் பாதுகாப்பு!

கிட்டத்தட்ட 50 வருஷத்துக்கு மேலாக வனப் பகுதிகள்ல சுத்திக்கிட்டிருக்கேன். அப்பல்லாம் காட்டுல நிறைய தண்ணீர் இருக்கும். ஆறு, அருவி, ஓடை, குட்டைனு தண்ணீருக்குப் பஞ்சமே இருக்காது. வனப் பகுதியும் செழிப்பா இருக்கும். இதனால, விலங்குகள் காட்டுக்குள்ளதான் இருக்கும். இப்பவெல்லாம், வனப் பகுதிங்க வறண்டு போயிடுச்சி. இதனால தண்ணீரும், உணவும் இல்லாம தவிக்கும் விலங்குகள், ஊருக்குள் நுழையுதுங்க. மனித-விலங்கு மோதல் ஏற்படுது. இதனால், நீர்நிலைகளைப் பாதுகாக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேணும். நாட்டுக்குள்ள மட்டுமில்ல, காட்டுக்குள்ளேயும் தண்ணீர் இருக்கனும். அப்பதான், விலங்குகள் அதுங்களோட வசிப்பிடத்துல, நிம்மதியா இருக்கும்.

பழங்குடியினரின் கஞ்சா பழக்கம்!

என்னோட பொண்ணு டாக்டர். அவங்க மூலமா பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில மருத்துவ முகாம் நடத்தினோம். அப்ப, நிறைய பேருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதுக்கு காரணம், அவங்க அதிகம் கஞ்சா புகைக்கறது காரணம்னு தெரிஞ்சது.

இது தொடர்பாக ஒரு ஆவணப்படம் எடுத்தேன். ஊட்டி ஆனைகட்டி பகுதிக்கு படமெடுக்க போனப்ப, யானைக் கூட்டத்தைப் பார்த்துட்டு, நானும், என்னோட வந்த 4 பேரும் பள்ளத்துல இறங்கி நின்னோம். அப்ப, 40, 45 அடி தூரத்துல ஒரு புலி வந்தது. ஓடலாம்னு ஒருத்தர சொன்னப்ப, கூடாதுனு சொல்லிட்டு, ரொம்ப அமைதியா, சப்தம் போடாம நின்னோம். எங்களை உத்துப்பாத்துட்டு, வேற பக்கமா போயிடுச்சு. இதுமாதிரி, யானைங்ககிட்ட இருந்து பலமுறை தப்பிச்சிருக்கோம்” என்று சிரித்தபடி கூறி விடைகொடுத்தார் 70 வயது பேர்ட்ஸ் போட்டோகிராபர்

பொறுமையும், நிதானமும் போட்டோகிராபருக்கு அவசியம்...

“இப்ப நிறைய பேரு வைல்டுலைஃப் போட்டோகிராபி, பேர்ட்ஸ் போட்டோகிராபினு ஆர்வமா படமெடுக்கறது மகிழ்ச்சியாக இருக்கு. ஆனா, பறவைகளை தொந்தரவு செஞ்சி, படமெடுக்கறாங்க. பறவை பறக்கற வரைக்கும் காத்திருக்க முடியாம, கல் வீசுறது, குச்சி எடுத்து வீசுறதுனு தொந்தரவு செய்யறாங்க. வாழப்பாடிகிட்ட ஒரு அரிய வகை

ஆந்தை இருக்குனு கேள்விப்பட்டு, தேடிப் போனேன். அங்க இருந்த பாட்டி, சொன்ன தகவல் அதிர்ச்சியா இருந்தது. கார்ல வந்த சில பசங்க, ஆந்தையை படமெடுக்கறதுக்காக கல் வீசியிருக்காங்க. அதுல ஒரு ஆந்தை செத்துப்போச்சி. இன்னொரு ஆந்தையை நாங்க மாலையில பாத்தோம். நிதானம், பொறுமை, ஓசையில்லாம நடப்பது, இடத்துக்கு ஏற்ற வண்ண உடையணிவது, கூடுகளை முறையாக அணுகுவது, அதிகாரிகள்கிட்ட பர்மிஷன் வாங்கறது, தக்க துணையோட காட்டுக்குள்ள போறது, தேவையின்றி பேசக்கூடாது, வாசனை தரும் பொருளை பயன்படுத்தக்கூடாது, காட்டுல சிகரெட், மது அருந்தக்கூடானு, கூட்டமா போகக்கூடாதுனு நிறைய விஷயங்களைக் கடைப்பிடிக்கணும்” என்றார் அருந்தவச்செல்வன்.

படங்கள் : டிஆர்ஏ.அருந்தவச்செல்வன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்