பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய சாதனங்களின் கண்காட்சி: சென்னை ஐஐடியில் நடந்தது

By செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர்கள் தாங்களாகவே உருவாக்கிய பல்துறை பொறியியல் சாதனங் களின் கண்காட்சி சென்னை ஐஐடியில் நேற்று நடந்தது.

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களின் கை வண்ணத்தில் உருவாகும் சாதனங்களை மற்ற மாணவர்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்கள் கண்டுகளிக்கும் விதமாக ஆண்டு தோறும் சிறப்பு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி சென்னை ஐஐடியில் உள்ள கண்டு பிடிப்புக்கான மையத்தில் நேற்று நடந்தது. ஐஐடியில் படிக்கும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பயோடெக்னாலஜி, உள்ளிட்ட துறைகளை சேர்ந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இதில் வாழைப்பழத்தை கொண்டு கீ-போர்டு வாத்தியம் இசைக்கும்படியாக உருவாக்கப் பட்டிருந்த விக்கி மிக்கி கீபோர்டு, சூரிய மின்சக்தியால் இயங்கக்கூடிய ரிக்‌ஷா, ஆழ்கடலில் சிக்கியிருப்பவற்றை மீட்கின்ற ஏயுவி அமோக் என்னும் ரோபோ உள்ளிட்ட அதி நவீன சாதனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆம்னி டைரக்‌ஷனல் ரோபோட் சிறந்த ரோபோவாக அறிவிக்கப்பட்டது. இந்த ரோபோவின் மூலம் பெரிய பொருட்களையும் எந்த திசையில் வேண்டுமானாலும் குறுக்கும் நெடுக்குமாக நகர்த்த முடியும்.

இந்த ரோபோவை உருவாக்கிய குழுவில் ஒருவரான விஜித் என்பவர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “ஒரு காரினை ஒன்று முன்னே நேராக ஓட்டி செல்ல முடியும் இல்லையென்றால் பின்னே ஓட்டி செல்ல முடியும். காரினை பக்கவாட்டிலும் குறுக்காகவும் நகர்த்த முடியாது. இந்நிலையில் ஒரு காரினை எப்படியும் நகர்த்தும் அளவில் நாங்கள் இந்த ஆம்னி டைரக்‌ஷனல் ரோபோவினை உருவாக்கியுள்ளோம்” என்றார். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE