கோயிலும், ஆஸ்பத்திரியும்தான் மனுசனுக்கு நம்பிக்கையையும், மன நிம்மதியையும் கொடுக்கற இடங்கள். நோய் வந்தா சாமியும், டாக்டரும்தான் கடவுளா தெரிவாங்க. இப்படி, சாமிய கும்பிடறவங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தனும். எம்பிபிஎஸ் படிச்சா டாக்டராகிவிடலாம். ஆனால, நல்ல டாக்டரா, கடவுள் மாதிரி கும்பிடற அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த டாக்டரா மாறணும். மருத்துவம்ங்கற பேர்ல வியாபாரம் செய்யக் கூடாது. நோயாளிங்க துன்பத்தையும், பிரச்சினையையும் தன்னோடதா கருதி, அதை தீர்க்க முயற்சி செய்பவர்தான் தெய்வீகத் தன்மை வாய்ந்த டாக்டரா மாறுவாரு” என்கிறார் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம். ஒரு சிறிய கிராமத்திலிருந்து புறப்பட்டு, இன்று மருத்துவ அடையாளங்களில் ஒன்றாய் மிளிரும் மாறியிருக்கும் கோவை கே.ஜி. மருத்துவமனையின் தலைவர்.
மருத்துவத் துறை அனுபவத்தில் பொன் விழாவைக் கண்டுள்ள கே.ஜி.பக்தவத்சலத்துக்கு வயது 76 என்றால் நம்புவது கொஞ்சம் கடினம்தான். இப்போதும் காலையிலேயே மருத்துவமனைக்கு வந்துவிடுகிறார். காலை 7 மணிக்கு டாக்டர்களுக்கு பயிற்சி வகுப்பு, அதற்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை. தொடர்ந்து, மருத்துவப் பணிகள். இடையில் கொஞ்ச நேரம் மட்டும் ஓய்வு. பல்வேறு மருத்துவப் பணிகளுக்கு இடையிலும் சமூகப் பணிகள், நிகழ்ச்சிகள், மருத்துவக் கருத்தரங்குகள், பொதுநல அமைப்புகளுக்கான பங்களிப்பு என ஓடிக்கொண்டே இருக்கிறார்.
கோவையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்னூர்தான், இவரது சொந்த ஊர். பெற்றோர் கோவிந்தசாமிநாயுடு, ருக்மணி அம்மாள். ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட கோவிந்தசாமிநாயுடு, ருக்மணியின் தங்கை சீதாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். ஐந்து மகன்கள், 2 மகள்கள் என பெரிய குடும்பம். சிறிய கிராமத்திலிருந்து தொடங்கிய வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார் ஜி.பி. என்றழைக்கப்படும் கே.ஜி.பக்தவத்சலம்.
“ஆரம்பத்துல மளிகைக் கடையில வேலை செஞ்ச அப்பாவுக்கு மாதச் சம்பளம் ரூ.9. இப்படியே இருந்தா குடும்பத்தை நடத்தறதுகஷ்டம்னு, கான்ட்ராக்ட் வேலைங்கள எடுத்து செஞ்சாரு. அதுல கொஞ்சம் வருமானம் வந்தது.அப்புறம் ஜின்னிங் பேக்டரி நடத்தினாரு. 5-வது மட்டுமே படிச்சிருந்தாலும், நம்பிக்கை அதிகம். கடவுள் பக்தியும் அதிகம்.
அப்பாவின் டாக்டர் கனவு
1945-ல எனக்கு ரெண்டு வயது. திடீர்னு தீராத வயிற்றுப்போக்கு. நல்லாயிட்டா, டாக்டருக்குப் படிக்க வைக்கிறேன்னு சங்கல்பம் எடுத்துக்கிட்டாரு அப்பா. இப்படி,
என்னோட டாக்டர் கனவு, ரெண்டு வயசுலேயே தொடங்கிடுச்சு. அன்னூர் அரசுப் பள்ளியில எஸ்எஸ்எல்சி வரைக்கும் படிச்சேன். சில நாட்கள் செருப்பில்லாமகூட பள்ளிக்கு நடந்து போயிருக்கேன். அப்புறம், ஒரு சைக்கிள் கிடச்சது. குரங்குபெடல் போட்டுக்கிட்டே பள்ளிக்கூடத்துக்குப் போவேன். அப்ப நிறைய குறும்பு செய்வேன். மதில் சுவர்ல இருந்து விழுந்ததுல, மண்டை ஒடஞ்சிபோச்சி. வீட்டுக்கு வந்த மருத்துவர், தலையில தையல் போட்டாரு. இன்னமும் அந்த தழும்பு இருக்கு.
8-வது படிக்கும்போது ஒரு நாள் அம்மா ருக்மணி, கிணற்றில் தவறி விழுந்துட்டாங்க. முதுகு, மண்டையில அடிபட்டு 6 மாதம் ஆஸ்பத்திரியில இருந்தாங்க. ‘நீ நல்லா படிச்சி பெரிய டாக்டராகி, நிறைய பேருக்கு சிகிச்சை தரணும்’னு அப்பா திரும்பவும் சொன்னாரு. அதுக்கப்புறம் பிஎஸ்ஜி-ல பியுசி படிச்சேன். இன்டர்மீடியட்டா இருந்து பியுசி-யாக மாறிய கல்வி முறையில நாங்க முதல் பேட்ச்.
பியுசி-யில நல்ல மார்க். அப்பா ஆசைப்படி, டாக்டருக்குப் படிக்க முடிவு செஞ்சேன். இன்டர்வியூ சென்னையில. நானோ, அப்பாவோ அதுவரைக்கும் சென்னை போனதேயில்லை. ஷேர் புரோக்கர் கைலாச முதலியார் எங்களை சென்னைக்கு அழைத்துப் போனாரு. இன்டர்வியூல செலக்ட் ஆனேன். முதல் வருஷம் திருச்சி செயின்ட் ஜோசப். அங்க இங்கிலீஷ், விலங்கியல் எல்லாம் கத்துக்கொடுத்தாங்க. ஒரு வருஷம் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். இடையில கடுமையான காய்ச்சல். அப்பா திருச்சிக்கு வந்து, அன்னூருக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு. உடம்பு நல்லா ஆனதுக்கப்புறம் திரும்பவும் திருச்சிக்கு வந்தேன். அப்புறம் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல மருத்துவம் படிச்சேன்.
`ஒத்தைக்கண்` மாணிக்கமும், ஸ்டிரைக்கும்...
பேராசிரியரா இருந்த கூப்பர் ஆறரை அடி உயரம். பார்சிகாரரு. அருமையா சொல்லிக் கொடுத்தாரு. மறக்கவே முடியாது. அண்ணாமலை, ராமச்சந்திரன், ரத்தினவேலு சுப்பிரமணியன்னு நல்ல பேராசிரியருங்க நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. இறுதி ஆண்டுல வார்டன் அண்ணாமலையோட ஆளு `ஒத்தைக்கண்` மாணிக்கம், எங்களை ரொம்ப மிரட்டினாரு. அதனால, வார்டனுக்கு எதிரா ஸ்டிரைக் செஞ்சோம். வார்டன் பெயர் இருந்த போர்டுக்கு தார் பூசினோம். காலேஜ்ல இருந்து வெளியே வந்து, சாலையோரம் உட்கார்ந்து போராடினோம். அப்ப தமிழக முதல்வரா இருந்த காமராஜர், எங்களை அழைத்துப் பேசினாரு. அடுத்த நாளு சுதந்திர தினம். ஆனா, நாங்க சுதந்திரமில்லைனு புகார் செஞ்சோம். `போய் ஒழுங்கா படிங்க`னு சொல்லி அவரு அனுப்பிட்டாரு. போராட்டம் பிசுபிசுத்துப் போச்சி” என்றார் சிரிப்புடன்.
முதல் பேஷன்ட் ஆட்டுக்குட்டி?
“படிக்கும்போது யாரையாவது காதலிச்சீங்களா?” என்று நாமும் சிரிப்புடன் கேட்டோம். “நான் கிராமத்து பையன். பெரிய பர்சனாலிட்டி கிடையாது. இங்கிலீஷ் தெரியாது. கிரிக்கெட் ஆட வராது. யாரைப் போய் காதலிக்கிறது. ஆனா, நான் பாடத்தை காதலிச்சேன். எம்பிபிஎஸ் முடிச்சதுக்கப்புறம், கொருக்குப்பேட்டையில சின்னதா கிளீனிக் ஆரம்பிச்சேன். முதல் 4 நாளு பேஷன்ட் வரலை. ஐந்தாவது நாள் ஒரு பேஷன்ட் வந்து, வயிற்றுப்போக்குனு சொன்னாரு. சரி, பரிசோதனை செய்யறேனு சொன்னப்ப, `எனக்கில்லை, என்னோட ஆட்டுக்குனு சொன்னாரு`. அடப்பாவி, நான் மனுசங்களுக்கு வைத்தியம் செய்யற டாக்டர்டானு சொன்னேன். `பரவாயில்லை மருந்து கொடுங்க`னு சொன்னாரு. அப்புறம் அவரை சமாளிச்சி அனுப்பிவெச்சேன். அடுத்தடுத்த நாட்கள்ல சில பேஷண்டுங்க வந்தாங்க. மூணு மாசத்துக்கு அப்புறம் எம்.எஸ். படிக்கப் போயிட்டேன். இடையில, கொஞ்ச நாள் அன்னூர்ல அப்பா கட்டிய சிறிய ஆஸ்பத்திரியிலும் பேஷன்டுகளை பார்த்தேன். சும்மா 5 பெட் மட்டும் அங்க இருந்தது. மருந்து, மாத்திரை மட்டும் கொடுத்தேன்.
இதுக்கு நடுவுல எங்க உறவினர் பொண்ணு தனலட்சுமியோட கல்யாணம் நடந்துச்சி. சென்னை மயிலாப்பூர்ல ரூ.125 வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். குழந்தைங்க வசந்தி, அசோக் பிறந்தாங்க. எம்.எஸ். தேர்வுல நான் ஃபெயிலாயிட்டேன். அதனால, தற்காலிகமா பாடி பகுதியில் இருக்கற காசநோய் மருத்துவமனையிலே வேலைக்கு சேர்ந்தேன். அங்க பேராசிரியர் கதிரேசன் நிறைய கத்துக்கொடுத்தாரு. ஆறு மாசத்துக்கு அப்புறம் எம்.எஸ். தேர்ச்சியடைஞ்சேன்.
குருவை தேர்வு செய்ய பிடிவாதம்
அந்த சமயத்துல, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு உட்பட்ட ராயப்பேட்டை மருத்துவமனையில, பேராசிரியர் சரத் சந்திரா டாக்டராகப் பணியாற்றினாரு. நல்ல ஆசிரியர்கள்தான் நல்ல மாணவர்களை உருவாக்கறாங்க. விவேகானந்தர், அப்துல்கலாமையெல்லாம் உருவாக்கினது நல்ல டாக்டருங்கதான். அதனால, சரத் சந்திராகிட்ட வேலை செய்யணுமுன்னு முடிவு செஞ்சி, ரெக்கமன்டேஷனுக்கு அலைஞ்சேன். அப்ப சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சாதிக்பாஷாவை அணுகி, ராயப்பேட்டை மருத்துவமனையில வேலை வேணும்னு கேட்டேன். அவரு, மருத்துவக் கல்வி இயக்குநரா இருந்த ஜனார்த்தனத்தை கூப்பிட்டு, என்னைப் பத்தி சொன்னாரு. கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனையில போஸ்டிங் போடறேன்னு அவரு சொன்னாரு. நான் கேக்கலை. சரத் சந்திராகிட்டத்தான் வேலை செய்வேனு பிடிவாதமா இருந்தேன். இதனால, என்னைய ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போட்டாங்க.
என்னைய பாத்த பேராசிரியர் சரத் சந்திரா, `எம்.எஸ். படிச்சிருக்கீங்க, எத்தனை ஆபரேஷன் செஞ்சிருப்பீங்க`னு கேட்டாரு. ஒரே ஒரு பைல்ஸ் ஆபரேஷன் மட்டும்தான் செஞ்சிருக்கேனு சொன்னேன். அவரு சிரிச்சிக்கிட்டே, பரவாயில்லை, நான் சொல்லித் தர்ரேனு சொல்லி, என்னை சிறந்த அறுவைசிகிச்சை நிபுணரா மாத்தினாரு. அவர்கிட்டதான் நிறைய கத்துக்கிட்டேன்.
ஒருத்தரு எத்தனை ஆபரேஷன் செஞ்சிருக் காருங்கறது மட்டும் முக்கியமில்ல. எத்தனை அறுவைசிகிச்சை நிபுணர்களை உருவாக்கியிருக்காருங்கறதும் முக்கியம். அந்த வகையில, ஏராளமான அறுவைசிசிக்சை நிபுணர்களை உருவாக்கியவரு சரத் சந்திரா. அதனால்தான், நானும் நிறைய டாக்டர்களை உருவாக்கினேன். அறுவை சிகிச்சை நிபுணர்கள் மட்டும் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கேன். என்கிட்ட படிச்சவங்க, பல பெரிய மருத்துவமனைகளை நடத்தறாங்க” தனது பேராசிரியரைப் பற்றிப் பேசும்போது டாக்டர் பத்கவத்சலம் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார். குரு மீது இன்னமும் அவருக்குள்ள பக்தி, வியப்பை ஏற்படுத்தியது.
கோவைக்கு மாறுதல்
“ராயப்பேட்டை மருத்துவமனையில மட்டும் 150-க்கும் மேற்பட்ட ஆபரேஷன்களை செஞ்சிருப்பேன். குறிப்பா, நிறைய பித்தப்பை ஆபரேஷன் செஞ்சேன். அப்பவெல்லாம் அது பெரிய ஆபரேஷன். ஒரு வருஷத்துக்கு அப்புறம், கோயம்புத்தூருக்கே வந்துடுனு அப்பா சொன்னாரு. மீண்டும் அமைச்சர் சாதிக்பாஷாவை பாத்து, கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டேன். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையா இருந்த கோவை மருத்துவமனை, 1968-ல கோவை மருத்துவக் கல்லூரி மருத்துமனையா மாறியது.
1969-ல அங்க உதவிப் பேராசிரியரா (அறுவைசிகிச்சை) பணிக்குச் சேர்ந்தேன். அங்க டாக்டர் வாசுதேவன், நிறைய சொல்லிக்கொடுத்தாரு. 1972 வரைக்கும் 3 வருஷம் அங்க வேலை பார்த்தேன்.
அப்ப ஆயிரக்கணக்கான அறுவைசிகிச்சைகளை செய்தேன். அதுமட்டுமில்லா, கோவை கிராஸ்கட் ரோட்டுல சின்னதா கிளீனிக்கும் நடத்தினேன். எங்க குடும்பமும் அன்னூர்ல இருந்து கோவைக்கே வந்துட்டாங்க. குழந்தைகள் பள்ளிக்குப் போக ஆரம்பிச்சாங்க. இப்படியே அரசு டாக்டராகவே வாழ்க்கையை ஓட்டிடலாம்னு நெனச்சிக்கிட்டிருந்தேன்.
அமெரிக்க வாழ்க்கை!
அப்பதான், என்னோட ஃபிரண்டு மூலமா அமெரிக்காவுல டாக்டர் வேலைக்கு வாய்ப்புக் கிடச்சது. ஏற்கெனவே, வெளிநாட்டுல வேலை செய்யறதுக்கும், படிக்கறதுக்கும் தகுதி கொடுக்கும் இசிஎஃப்எம்ஜி (எஜுகேஷன் கமிஷன் ஃபார் ஃபாரின் மெடிக்கல் கிராஜுவேட்ஸ்) எக்ஸாமும் எழுதி, தேர்ச்சி பெற்றிருந்தேன். மனைவி, குழந்தைங்களோட அமெரிக்கா போக முடிவு செஞ்சேன். அதுக்கு ரூ.22000 தேவைப்படும். ஆனா, அப்பாகிட்ட ரூ.12 ஆயிரம்தான் இருந்தது. அதனால மனைவியோட தங்கச் சங்கிலியை வித்து, ரூ.10 ஆயிரம் திரட்டினேன். நாலு பேரும் சிகாகோ போனோம். சிகாகோவுல இருக்கற மவுன்ட் சினாய் மருத்துவமனையில வேலைக்குச் சேர்ந்தேன். அங்க இருந்து பென்சில்வேனியா மாகாணத்துல இருக்கும் அல்ட்டூனா மருத்துவமனைக்கு மாறினேன்.
சிகாகோ கொஞ்சம் முரட்டு ஊரு. ஆனா, பென்சில்வேனியா நல்ல ஊரு. இதுக்கு நடுவுல பொண்ணு மட்டும் இந்தியாவுக்கு திரும்பிப் போயிடுச்சி. மகனுக்கும், மனைவிக்கும் அமெரிக்கா ரொம்ப பிடிச்சிப் போச்சி.
என்ன முடிவெடுப்பது?
அப்பதான், அப்பாகிட்ட இருந்து போன் வந்தது. `உன்னைய பாக்காம என்னால இருக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்பப்பா திரும்பி வரப்போற’னு கேட்டாரு. `6 மாசம் ஆகும்பா`னு பதில் சொல்லிட்டேன். மூணு நாள் கழிச்சி, அம்மா போன் பண்ணாங்க. `ஏம்ப்பா, எங்களுக்கும், நம்ம ஊர்க்காரங்களுக்கும் சிகிச்சை கொடுப்பேனுதான உன்ன டாக்டருக்குப் படிக்க வெச்சாரு உங்க அப்பா. ஆனா, அமெரிக்காவுல இருக்கறவங்களுக்கு சிகிச்சை கொடுத்துக்கிட்டு இருக்கற. அப்பா, ராத்திரி முழுக்க உன்னாட பேர சொல்லிக்கிட்டு இருக்காரு. ஊருக்கே வந்துடு கண்ணு’னு உருக்கமா பேசினாங்க. அந்த அளவுக்கு அப்பா-அம்மாவுக்கு எம்மேல பாசம் அதிகம். அவங்க பேசினது என்னை யோசிக்க வெச்சது. ஒரு பக்கம் வெளிநாடு, நல்ல வேலை, மனைவி, மகனுக்கு பிடிச்ச ஊரு, இன்னொரு பக்கம் அப்பா பாசம், சொந்த ஊரு. என்ன முடிவு எடுக்கறதுனு சிக்கலான நிலைமை. வேலையா, அப்பாவானு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம்! என்ன செஞ்சேன்....
அப்பா, நண்பர், குரு எல்லாமே ஜி.பி.தான்...
கே.ஜி. மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார் கே.ஜி.பக்தவத்சலத்தின் மகள் வசந்தி. “ஆரம்பத்துல இருந்தே அப்பா கடுமையான உழைப்பாளி. அதிகாலையிலேயே எழுந்துடுவாரு. எங்களையும் எழுப்பிடுவாரு. ஒழுக்கமா, நேர்மையா இருக்கணும். கடினமா உழைக்கணுமுன்னு சொல்லுவாரு. இது பிற்காலத்துல எனக்கும், தம்பிக்கும் ரொம்ப உதவியாக இருந்தது. நல்லா படிக்கவும், நிர்வாகம் தெரிஞ்சிக்கவும் உதவியா இருந்தது. இப்ப கே.ஜி. மருத்துவமனையை நான் நிர்வகிச்சிட்டு வர்ரேன். தம்பி அசோக், மிகப் பெரிய தொழில் நிறுவனம் நடத்தறாரு. அவருக்குப் பொறந்ததுக்கு நாங்க ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும். குடும்பத்தினரிடம் எந்த பாகுபாடும் காட்ட மாட்டாரு. அதேமாதிரி, தொழிலாளர்களையும் தன்னோட குடும்பமாதான் பார்ப்பாரு. எல்லாத்தையும் நம்பறீங்க. யதார்த்தமா எடுத்துக்கிறீங்கனு சில சமயம் நானே அப்பாகிட்ட சொல்லுவேன். `நீ எந்தக் கண்ணாடிய வெச்சிக்கிட்டு பாக்கறியோ, அப்படித்தான் எதிர்ல இருக்கறவரும் தெரிவாரு. நல்ல கண்ணாடிய வெச்சிக்கிட்டுப் பாரு. நல்லவரா மாறிடுவாரு’னு
அப்பா பதில் சொல்லுவாரு.
இப்படி தினமும் வாழ்க்கைங்கற பாடத்தை கத்துக்கொடுப்பாரு. இன்னிக்கு வரைக்கும் சொல்லிக்கொடுத்துக்கிட்டே இருக்காரு. ஆனாலும், எங்களைவிட, ஆஸ்பத்திரியில இருக்கறவங்க கூட நிறைய நேரம் செலவிடுவாரு. நிறைய அன்பும் உண்டு, கண்டிப்பும் உண்டு. நல்ல நண்பர், நல்ல அப்பா, நல்ல குரு எல்லாமே ஜி.பி.தான். நல்ல குடும்பத்தை எனக்குக் கொடுத்த கடவுளுக்கு தினமும் நன்றி சொல்வேன். தப்பு செஞ்சா, சரியான அட்வைஸ் கொடுப்பாரு. இப்ப எனக்கு
54 வயசாகுது. இப்பவும் எங்கேயாவது போனா, அப்பா உடனே கையில் பணத்தை கொடுத்து, செலவுக்கு வெச்சிக்கனு சொல்லுவாரு. பக்கத்துலதான் எங்க வீடு. அப்பா வீட்டுக்கு வந்துட்டு, இரவு திரும்பும்போது, பல டிரைவர்கள் இருந்தாலும், அவரே காரில் ஏத்திக்கிட்டுப்போய் என் வீட்டுல விடுவாரு. அந்த அளவுக்கு இன்னமும் என்னை சின்ன குழந்தையாகத்தான் பார்க்கிறாரு” என்றார் பெருமித்ததுடன்.
இடைவேளை... நாளை வரை...
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago