கானல் நீராகும் நீரா?- விற்பனை குறைவு, தொடர் இழப்பால் பரிதவிக்கும் விவசாயிகள்

By எம்.நாகராஜன்

தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் ஒருவகை பானம்தான் ‘நீரா’.  சீவப்பட்ட தென்னம்பாளைகளில், அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ் பெட்டிகளைக் கட்டிவைக்க வேண்டும். ஐஸ் பானைகளில் சேகரமாகும் நீராவை இறக்கி, தயாராக உள்ள ஃப்ரீசர் பொருத்தப்பட்ட வேனில் ஏற்றி, கூலிங் சென்டர் எனப்படும் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டுசென்று,  அங்குள்ள டேங்கரில் நிரப்ப வேண்டும். பிறகு,  அதை பாட்டிலில் அடைத்து, விற்பனை செய்கின்றனர்.  இவற்றைப் பாதுகாக்க ஐஸ் பெட்டிகள் அவசியம்.

`நீரா’ என்பது பதநீருக்கும், கள்ளுக்கும் இடைப்பட்ட பானம். கடந்த 4 ஆண்டுகளாக கேரளா மாநில மக்களிடையே இது அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அருந்தியவுடன் புத்துணர்வு கிடைக்கும் நீராவை, குழந்தைகள் முதல் பெரியவர் வரை பருகலாம்.  நீராவை,  பதநீர்போல இறக்க முடியாது.  5 டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் அது எப்போதும் இருக்கவேண்டும்.ஒரு தென்னை மரத்தில் இருந்து நாளொன்றுக்கு 5 லிட்டர் நீரா பானம் இறக்க முடியும். ஒரு மரத்தில்  6 மாதங்கள் தொடர்ந்து நீரா இறக்கி,  விற்கலாம். கேரள மாநிலத்தில் ஒரு விவசாயி,  ஆண்டுக்கு 25 மரங்களில் மட்டும் நீரா பானம் இறக்கி விற்க, அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 50 மரங்களுக்கு அதிகமாக வைத்துள்ள விவசாயிகள், சுழற்சி முறையில் ஆண்டு முழுவதும் நீரா பானம் இறக்க முடியும்.

இந்த நிலையில், கேரளா அரசின் முறையைப்  பின்பற்றி, தமிழகத்திலும் நீரா பானம் இறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக நீரா பானம் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள,  உடுமலைப்பேட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் எஸ்.செல்வராஜ் கூறும்போது, “2018-ல்  தமிழக அரசு  நீரா பானம் இறக்க அனுமதி அளித்தது. தமிழகத்தில் 8 தென்னை உற்பத்தியாளர்  நிறுவனங்கள் நீரா பானம் இறக்க அனுமதி பெற்றுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் இரு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முறையான அனுமதிக்குப் பின்,  தற்போது சோதனை முறையில் 50 மரங்களில் இருந்து மட்டும் நீரா இறக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மரத்தில் 2 லிட்டர் வீதம், 50 மரத்தில் இருந்து தினமும் 100 லிட்டர் நீரா கிடைக்கிறது. இவற்றை சரியான குளிர்நிலையில் பாதுகாத்து,  உடனடியாக சந்தைப்படுத்த வேண்டும். 48 மணி நேரத்துக்குமேல் பாதுகாக்க  முடியாது. மக்களிடையே போதிய விழிப்புணர்வும்,  விற்பனை மையங்களும் இல்லாததாலும்,  எதிர்பார்த்த விற்பனை இல்லை. அதனால் தினமும் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.

நீரா பானத்தை உரிய முறையில் பாதுகாப்பதன் மூலம, பிற உணவுப் பொருட்களைப்போல 15 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும். அதற்கான தொழில்நுட்ப உதவிகளை,  காசர்கோட்டில் உள்ள சிசிஆர்ஐ,  தஞ்சாவூரில் உள்ள ஐஐஎம்டி நிறுவனங்களில் கோரியுள்ளோம். நீராவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, தென்னை வளர்ச்சி வாரியம் உதவ வேண்டும். மேலும்,  மாவட்டத்துக்கு ஒன்று வீதம் பாட்லிங் யூனிட்டுகள் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடையே, நீரா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் நீரா விற்பனை மையம் அமைக்க வேண்டும். பேருந்து நிலையங்களிலும்  விற்பனை மையம் அமைக்க அரசு உதவ வேண்டும்.

பல ஆண்டுப் போராட்டத்துக்கு பின், நீரா பானம் இறக்க அரசு அனுமதி அளித்திருந்தபோதிலும்,  பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக, தென்னை விவசாயிகள் நீராவை சந்தைப்படுத்த முடியவில்லை. எனவே, தேவையான உதவிகளை செய்ய, அரசோ அல்லது சுதேசி ஆதரவு அமைப்புகளோ முன்வர வேண்டும்”  என்றார்.

பயிற்சியை எதிர்நோக்கும் தென்னை விவசாயிகள்!

நீராவில் இருந்து மதிப்புக்கூட்டும் பொருட்களாக, சர்க்கரை, சாக்லெட், பிஸ்கெட் போன்றவற்றை உற்பத்தி செய்து, தென்னை விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும். பன்னாட்டு நிறுவன குளிர்பானங்களுக்கு போட்டியாக, கேரளாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் நீராவுக்கு, தமிழக மக்களிடையே போதுமான ஆதரவு இல்லாததால், தொடங்கிய வேகத்திலேயே  இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், நீரா உற்பத்தியும், அதை சார்ந்த தொழில்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.கொச்சியில் இயங்கும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம்,  பல ஆண்டுகளாக நீரா பானம் இறக்கும் பயிற்சி அளிப்பதுடன், பதப்படுத்தும் தொழில்நுட்பக் கல்வி,  மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றுவது உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகளை, ஊக்கத்தொகையுடன் வழங்குகிறது. எனவே, தமிழக விவசாயிகளுக்கு இதுபோன்ற பயிற்சி அதிக அளவில் வழங்க வேண்டும். சந்தை வாய்ப்புகள் தொடர்பாக, தேவையான வழிகாட்டுதல் வேண்டும் என்பதே  தென்னை விவசாயிகளின் கோரிக்கையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்