வெள்ளந்தி மனிதர் சூலூர் கனகராஜ்: அதிரடி கருத்துகளால் பிரபலமானவர்

By மு.அப்துல் முத்தலீஃப்

சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் இன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார். அதிரடி கருத்துகளால் பிரபலமானவர் கனகராஜ். யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலாக மனதில் பட்டதைப் பேசியதால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.

அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை ஒரே குரல்தான் ஒலிக்கும். அது ஜெயலலிதாவின் குரல் மட்டுமே. கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்கூட பேட்டி அளிக்க அஞ்சுவார்கள். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஏன் பேசுகிறார்கள் எனும் அளவுக்கு அதிமுகவினர் அனைவரும் பேசித் தீர்த்துவிட்டனர்.

ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்வது, இவர் கருத்தை அவர் மறுப்பது, சில கருத்துகளை சொந்தக் கருத்து என்பது போன்ற பல விஷயங்கள் நடந்தன. இதில் வெள்ளந்தியாக அதிரடியாக கருத்துகளைக் கூறும் பிரபலங்களும் அதிமுகவில் இருந்தது வெளிப்பட்டது.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் தங்கள் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்தினர். இதை சிலர் விமர்சித்தாலும் அவர்களது வெள்ளந்தியான மனதை எண்ணி அதையும் ஏற்று ரசித்தனர்.

படிப்படியான மதுவிலக்கு குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்து விமர்சிக்கப்பட்டாலும் பலரும் அதில் உண்மை இல்லாமலா இருக்கிறது என்கிற கேள்வியை எழுப்பினர். இதேபோன்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மோடியின் பேரன் ராகுல் என கூறியது பரபரப்பாக பேசப்பட்டாலும் அதைக் கடுமையாக யாரும் விமர்சிக்கவில்லை.

காரணம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பண்பு. அப்படியா பேசினேன் அது தப்பாச்சே என்று எளிதாகக் கடந்துவிடுவார். அதேபோன்று அமைச்சர் செல்லூர் ராஜூவும் பொது இடங்களில் சாதரணமாக கருத்தை வைப்பார். நட்பாக அந்த விஷயத்தைக் கடந்துவிடுவார்.

இதேபோன்றுதான் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜும் பிரபலமானவர். வெள்ளந்தியான அவரது பேச்சு, அதிரடியாகப் பேசுவது, யாரைப்பற்றியும் அஞ்சாமல் மனதில்பட்ட கருத்தைச் சொல்வது, தொகுதியில் மக்களோடு ஒன்றிப்போனது என அவர் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஊடக வெளிச்சத்திற்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்களில் கனகராஜ் பிரபலம். இவ்வளவு நாள் இவர் எங்கே இருந்தார் என கேட்கும் அளவுக்கு கடந்த 2 ஆண்டுகளில் பேசித் தீர்த்துவிட்டார். அவரே ஒருமுறை நான் இவ்வளவு பேசுகிறேன். ஜெயலலிதா இருந்தால் பேச முடியுமா? இவர்கள் இப்படி நடக்க முடியுமா? அடுத்த கணம் கட்சியைவிட்டு நீக்கிடுவாங்க என்று பேட்டி அளித்திருந்தார்.

அதிமுக இரண்டாகப் பிரிந்திருந்தபோது கட்சி ஒன்றாகவேண்டும், அல்லது ஆட்சியைக் கலைத்துவிட்டு மக்களைச் சந்திக்கலாம் வாருங்கள் என அதிரடியாகப் பேசினார். இரண்டு அணிகளும் ஒன்றாக இணையும் வரை யார் அணியிலும் நான் இல்லை, இருந்தால் ஒன்றாக இருந்து ஆட்சி செய்யுங்கள் அல்லது கலைத்துவிட்டு மக்களைச் சந்தியுங்கள் என்று கூறிய அவர், ஜெயலலிதா இருக்கும்போதே 100 எம்.எல்.ஏக்கள் தோற்றுப்போனார்கள், நாமெல்லாம் எம்மாத்திரம் என்று கேள்வி எழுப்பினார்.

தொகுதியில் கல்குவாரி அனுமதியின்றி செயல்படுகிறது, அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம், இழுத்து மூடினால் அரசுக்கு லாபம் வரும், மூடாவிட்டால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என பகிரங்கமாக பேட்டி அளித்தார்.

அமைச்சர்கள் ஒருவர்கூட தொகுதிக்கு எதுவும் செய்வதில்லை. கல்யாணம் காட்சிக்கு என்று போனால் மக்கள் எங்களைத்தான் கேள்வி கேட்கிறார்கள் என செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதிமுக பாஜக கூட்டணி வரும் என்பதை முன்கூட்டியே ஒரு விழாவில் கூறினார்.

கோலப்போட்டி ஒன்றில் கலந்துகொண்ட கனகராஜ், தாமரை, இரட்டை இலையுடன் கூடிய ரங்கோலி கோலம் போட்ட பெண்ணை அழைத்துப் பாராட்டி முன்கூட்டியே சூசகமாக தாமரையும், இரட்டை இலையும் சேரப்போகுது என்று உணர்த்தும் விதத்தில் கோலம் போட்டிருக்கிறீர்கள் என் பரிசாக இரண்டாயிரம் சொந்தப் பணத்தைத் தருகிறேன் என்று கொடுத்தார்.

இதேபோன்று தொகுதியில் செயின் பறிப்பு அதிகமானதை அடுத்து தனது தொகுதியில் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை விரட்டிப்பிடிக்கும் இளைஞர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தருவதாக அறிவித்தார்.

கடைசியாக பிரேமலதா அளித்த பேட்டிக்குப் பதிலளித்தார், ஜெயலலிதாவை தைரியமாக சட்டப்பேரவையில் எதிர்த்தவர் விஜயகாந்த் என பிரேமலதா அறிவிக்க, அதற்கு கூட்டணி என மற்றவர்கள் பதிலளிக்கத் தயங்க, கனகராஜ் தயங்காமல், ''தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அரசியல் நாகரிகம் இன்றி விஜயகாந்த் எதிர்த்துப்பேசி நாக்கை துருத்தியதால்தான் அவர் அரசியல் வீழ்ச்சியைச் சந்தித்தார். ஜெயலலிதா இல்லாவிட்டால் தேமுதிக 29 இடங்களைப் பிடித்திருக்காது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவே வந்திருக்க முடியாது. தேமுதிக தொகுதிக்கு 1000 ஓட்டுகள், 500 ஓட்டுகள் வைத்துள்ள கட்சி''என்று விமர்சித்தார்.

பொதுவெளியில் அரசியல் கருத்துகளைக் கூறும் கனகராஜ், கடைசிவரை கட்சியை விட்டுக்கொடுக்காமல் இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்