துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி ஏப்.13ம் தேதி தேனி வர உள்ளார். மூத்த பாஜக வேட்பாளர்களைவிட பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் அமைச்சர்களின் செயல்பாடுகள் முன்னிறுத் தப்படாமல் இருந்தது. ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு அமைச்சர்களின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர் வுகள் மத்திய அரசை நோக்கி இருந்தது. இவர் ஏற்கெனவே முதல்வராக இருந்தபோதே டெல்லி வரை தொடர்புகள் இருந்தன. இந்நிலையில் பதவி பறிபோய் அதிமுகவிலும் தொடர முடியாத நிலை ஏற்பட்டபோது, பிரதமரிடம் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து பிரிந்த அணிகள் மீண்டும் இணைந்தன. இதன்மூலம் டிடிவி தினகரன் தனிமைப்படுத்தப்பட்டார். முதல்வராக பழனிசாமி இருந்தாலும் மோடியிடம் தனிப்பட்ட தொடர்புகளும், செல்வாக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே இருந்தது. இதனால் அரசியலிலும், ஆட்சியிலும் முதல்வர் தரப்பில் இருந்து ஓபிஎஸ்.சுக்கு பெரிய அளவில் அழுத்தம் தர முடியாத நிலை இருந்து வந்தது.இதைப் பல்வேறு விதங்களிலும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஓபிஎஸ் ஒரு கட்டத்தில் தனது மகனை தேனி தொகுதியில் களம் இறக்கவும் முடிவு செய்தார். இதற்கு கட்சிக்குள் முதலில் எதிர்ப்பு இருந்தது. இருப்பினும் இவரது மகனுக்கே சீட் ஒதுக்கப்பட்டது. மகனின் பிரச்சாரத்தில் ஓபிஎஸ் மும்முரமானார்.
இதுவரை ஜெயலலிதா சுட்டிக்காட்டியவரையும், தனக்கு விசுவாசமானவர்களையும் ஜெயிக்க வைத்தே பழக்கப்பட்டவருக்கு மகனை வெற்றி பெற வைத்தே தீர வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தேனி தொகுதியில் பல்வேறு வியூகங்களை வகுக்கத் தொடங்கினார். அமைச்சர் உதயகுமார் போன்றவர்களை தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதுடன், களப்பணியில் பண விஷயத்திலும் தாராளமாக நடந்து வருகிறார்.
இந்நிலையில் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது அதிமுகவுக்குள் சின்ன அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, காங்கிரஸ் சார்பில் ஆரூணுக்குப் பதிலாக ஈவிகேஎஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மூத்த தலைவர், வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்ற இவரது பல்வேறு சிறப்புகள் அதிமுகவுக்கு மேலும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதால் பிரச்சாரப் பணிகள் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். வைகோ, உதயநிதி, குஷ்பூ போன்றவர்களும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
எனவே இதே பாணியில் நட்சத்திரப் பேச்சா ளர்களின் பிரச்சாரங்கள், விவிஐபிக்களின் வரு கை இடம் பெறும் வகையில் பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாகத்தான் பிரதமர் மோடி தேனி தொகுதி பிரச்சாரத்துக்கு ஏப்ரல் 13-ம் தேதி வர உள்ளார்.
பாஜக சார்பில் சிவகங்கையில் எச்.ராஜா போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அக்கட்சியின் பிரபலத் தலைவர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களது தொகுதிகளைவிட ஓ.பன்னீர்செல்வம் மகன் தொகுதிக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பலரிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் பன்னீர்செல்வம் தரப்போ, பிரதமரின் பிரச்சாரம் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பிரம்மாண்டமான கூட்டம், திட்ட அறிவிப்புகள், சாதனை விளக்கங்கள் என்று களைகட்டும். தேசிய அளவிலான கவனத்தையும் தேனி ஈர்க்கும். இது தங்கள் வெற்றிக்குப் பெரும் வாய்ப்பாக அமையும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறியதாவது:பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதே மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தார். அரசியல் ரீதியாக பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டபோது மோடியுடன் மனம் விட்டுப் பேசியுள்ளார். இதனால் மோடியிடம் மேலும் நெருக்கம் ஏற்பட்டது. அந்த வகையில் பன்னீர்செல்வத்துக்காக தேனியை மோடி தேர்வு செய்திருக்கலாம் என்றனர்.
பாஜகவினர் கூறுகையில், கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு முக்கியத்துவம் தந்து பிரச்சாரம் செய்வது நல்ல நடைமுறைதான். கன்னியாகுமரிக்கு அண்மையில்தான் மோடி வந்தார். எனவே தேனியைத் தேர்வு செய்திருக்கலாம். பிரதமரின் பிரச்சாரம் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். அதன் மூலம் எங்கள் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றனர். பொதுவாகப் பிரதமர்களின் தேர்தல் பிரச்சாரம் தேனி பகுதிகளில் அதிகம் நடைபெற்றதில்லை. அப்படியே இருந்தாலும் வாகனம் மூலம் தேனி வழியே செல்லும் வகையிலே பிரச்சாரத் திட்டங்கள் அமைந்திருக்கிறது. ஆனால் தேனியை மையப்படுத்தி நடைபெறும் பிரதமரின் பிரச்சாரக் கூட்டம் இப்பகுதி மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago