வெண்மைப் புரட்சினு சொல்லி, நாட்டு மாடுகளை அழிச்சாங்க. மொதல்ல, வெளி நாட்டு மாடுங்க வந்தது; இப்ப வட நாட்டு மாடுங்க. இதையெல்லாம் மீறித்தானுங்க கொங்க மாட்ட கட்டிக் காப்பத்தறோம். அதேசமயம், நாட்டு மாடு வளர்த்தா யாரும் வீணாப்போயிட மாட்டாங்க. நாட்டு மாடு வளர்ப்புல நிறைய லாபமும் உண்டுங்க. தைரியமா நாட்டு மாடுங்கள வளத்துங்க” என்று நம்பிக்கையூட்டுகிறார் மாதம்பட்டி சண்முகம்(38).
மாடு மேய்ப்பதை சிலர் இழிவாய்ப் பார்க்கும் நிலையில், பட்டதாரியான இவர், நல்ல வருவாய் கொடுத்துக்கொண்டிருந்த தங்க நகை தொழிலை விட்டுவிட்டு, இன்று நாட்டு மாடுகளை வளர்த்து, அதில் கிடைக்கும் பொருட்களை விற்று வருகிறார். வேளாண் விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கும் சூழலில், நாட்டு மாட்டுப் பொருட்களுக்கு தானே விலை நிர்ணயம் செய்து, நல்ல விலைக்கு விற்று வருவதாக தெரிவிக்கிறார் இவர்.
கோவையிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதம்பட்டி குப்பனூருக்கு அவரைத் தேடிச் சென்றபோது, “அய்யாசாமி மலையடிவாரத்துல மாடு மேய்ச்சிக்கிட்டு இருப்பாரு, போய் பாருங்க” என்றனர் கிராம மக்கள். “வாங்க, வாங்க, கொஞ்சம் நாட்டுப் பால் குடிங்க” என்று உபசரித்த சண்முகத்திடம், அவர் நாட்டு மாடுகள் வளர்க்கத் தொடங்கிய வரலாற்றைக் கேட்டோம்.
“பெற்றோர் திருமூர்த்தி-ராஜேஸ்வரி. விவசாயக் குடும்பம். கிக்கானி பள்ளிக்கூடத்துல பிளஸ் 2 படிச்சிட்டு, தனியார் காலேஜுல பி.ஏ. படிச்சேன். அப்புறம் பாரதியார் பல்கலைக்கழகத்துல எம்.பி.ஏ. படிச்சேன். எங்க வீட்டுல நிறைய கோழி, ஆடு, மாடுங்க இருக்கும். பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே, அய்யாசாமி மலைக்கு மாடுங்கள கூட்டிக்கிட்டுப்போய் மேய்ப்பேன். மத்திப்பாளையம் பெருமாள் கோயில் ஒரத்திமலை அடிவாரத்துக்கு ஆடு, மாடுங்கள கூட்டிக்கிட்டுப்போய் தண்ணி காட்டுவோம்.
அப்பல்லாம் மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், முகாசிமங்கலம், விராலியூர், வெள்ளிமலைப்பட்டினம், நரசிபுரம், மங்கலபாளையம்னு எல்லா இடத்துலேயும் கொங்க மாடுங்களைத்தான் வளர்ப்பாங்க. பாலுக்கு மட்டுமில்லாம, உழவுக்கு, கட்ட வண்டி, ரேக்ளா ஓட்டறதுக்கும் உதவும்.
கலப்பின மாடுகள் வருகை
இந்த சமயத்துலதான், வெண்மைப்புரட்சினு சொல்லி வெளிநாட்டு மாடுங்களை கொண்டுவந்தாங்க. நம்ம மண்ணுக்கு சம்பந்தமே இல்லாத, ஐரோப்பியவைச் சேர்ந்த ஹெச்.எஃப்., ஜெர்சி, ஸ்விஸ் பிரவுன், கரண் ஸ்வின், ரெட் டேண்னு கலப்பின வகைகளை இறக்குமதி செஞ்சாங்க. அதிக பால் கொடுக்குதுனு நம்ம விவசாயிங்களும் கலப்பின மாடுங்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இதனால, நம்ம ஊரு நாட்டு மாடுங்க எல்லாம் அடிமாட்டுக்குப் போக ஆரம்பிச்சது.
ஆனா, கலப்பின மாடுகளைப் பராமரிக்க செலவு அதிகமாச்சு. அடிக்கடி நோய் தாக்கி, டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போய் ஊசி போட்டங்க. எதிர்ப்பு சக்தி குறைந்த, கலப்பின மாடுங்க, நம்ம ஊர் சூழலை எதிர்கொள்ள முடியலை. இதையெல்லாம் நம்ம கால்நடை உற்பத்தியாளர்கள் உணர்வதற்குள், நிலைமை கைமீறிப் போயிடுச்சு. ஆரம்பத்துல எங்க ஊரைச் சுத்தி இருக்கற 4 கிராமங்களில் கிட்டத்தட்டஒரு லட்சம் கொங்க மாடுங்க இருந்தது. அதெல்லாம் மொத்தமா அழிஞ்சது.
இதுக்கு நடுவுல, நான் கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு, தங்க நகை பட்டறையைத் தொடங்கினேன். நல்ல லாபம் கிடச்சது. ஒரு நாள் காந்திபார்க் பகுதியில போனப்ப, ஒருத்தரு 50 நாட்டு மாடுகளைக் கூட்டிக்கிட்டுப் போனாரு. எங்கெங்க போறீங்கனு கேட்டேன். `இதுங்களை துடியலூர் சந்தையில அடிமாட்டுக்கு விக்கப் போறேன்`னு அவரு சொன்னாரு. ஆடிப் போயிட்டேன். சின்ன வயசுல எங்க அம்முச்சி (பாட்டி) கொங்க மாட்டுப்பால்தான் கொடுப்பாங்க. நாங்க வளர்த்தது எல்லாம் கொங்க மாடுங்கதான். கொஞ்ச நஞ்சம் மீதிமிருக்குற கொங்க மாடுங்களும் அடிமாட்டுக்குப் போறதை நெனச்சப்ப, கண்ணீர் வந்தது.
கொஞ்ச நாள்ளயே தங்க நகை பட்டறையை மூடிவிட்டு, நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு யோசிச்சேன். சுத்துவட்டார கிராமங்கள நாட்டு மாடு இருக்கானு விசாரிச்சப்ப, ஜெர்சி மாடுங்களைத்தான் நாட்டு மாடுன்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு விவசாயிங்களோட மனநிலை மாறிப் போயிருந்தது. அப்புறம், துடியலூர், பொள்ளாச்சினு மாட்டுச் சந்தைகளுக்குப் போய்த் தேடினேன். கடைசியா, பொள்ளாச்சி சந்தையில, ஒரு கொங்க மாடு கிடச்சது. அந்த மாடு சினையே பிடிக்கலைனு, வெட்டுக்கு விக்க கொண்டுவந்திருந்தாங்க. அந்த வியாபாரிகிட்ட இருந்து அந்த மாட்டை நான் வாங்கிட்டுப் போனேன். அடர்தீவனத்தால கொழுப்பேறிக் கிடந்த அந்த மாட்டை, மருத்துவம் பாத்து, வேலை கொடுத்து சரி செஞ்சோம். அப்புறம் இயற்கை முறையில நாட்டுக் காளையோட இணை சேர்த்து, சினை பிடிக்கச் செய்தோம். அந்த மாட்டுல கிடச்ச பாலை, எங்க வீட்டுக்குப் பயன்படுத்திக்கிட்டோம். அதுவரைக்கும் வாங்கிக் கிட்டிருந்த பாக்கெட் பாலை நிறுத்தினோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு மாடுங்களை வாங்கத் தொடங்கினேன்.
கரடிமடையைச் சேர்ந்த துரைசாமியோட கொங்க மாடுங்களோட, எங்க மாடுங்களையும் பட்டி போட்டு, கரடிமடையிலேயே கூட்டுப்பண்ணையம் தொடங்கினோம். கிட்டத்தட்ட 50 வருஷமா மாடு மேய்ப்பதுதான் துரைசாமியோட வேலை. 2012-ல ஒரு மாட்டுல ஆரம்பிச்ச எங்களோட பட்டியில இப்ப கொங்க மாடுங்க மட்டும் 200 இருக்குது. வேற எந்த ரக மாடுகங்களையும் அந்தப் பட்டியில சேக்கலை.
நாட்டு மாட்டுப் பாலை லிட்டர் ரூ.80 முதல் ரூ.100 வரை விக்கறோம். நாட்டுப் மாட்டுப் பால் (ஏ2 ரகம்) நல்ல கொழுப்புச் சத்தும், எளிதாக கரையக்கூடிய, உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்தும் கொண்டது. ஊட்டச்சத்து மிகுந்த நாட்டு மாட்டுப் பால், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஆனா, கலப்பின மாட்டுப் பாலில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அதுல இருக்கற பிசிஎம்-7-ங்கர புரொட்டீன், மனித உடலுக்கு ஏற்றதல்ல. அதே மாதிரி, நாட்டு மாட்டுப் பால்ல இருந்து தயிர் எடுத்து, சிலுப்பி மோராக்கி, அதில் கிடைக்கும் வெண்ணெயை உருக்கி, நெய்யாக மாத்தி விக்கிறோம். அதுமட்டுமில்லா, நாட்டு மாட்டு சாணத்தை, இயற்கை விவசாயம் செய்யறவங்க, டிராக்டர் ரூ.3500-னு வாங்கிக்கிறாங்க.
மீதமிருக்கும் சாணத்தை, பாரம்பரிய முறையில விபூதி தயாரிச்சி, கோயில், வீடுங்களுக்கு விற்பனை செய்யறோம். ஒரு சிமென்ட் தொட்டி கட்டி, கோமியத்தை சேகரித்து, பூச்சி விரட்டி, பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம்னு இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுத்தறோம்” என்றார் பெருமிதத்துடன்.
“மாடுங்களுக்கு உணவா என்ன கொடுக்கிறீர்கள்” என்று கேட்டோம். “எங்க மாடுங்களுக்கு தவிடு, புண்ணாக்கு, மாட்டுத்தீவனம்னு எதுவும் தர்றதில்லை. இயற்கையா மலையடிவாரம், வனப் பகுதிகள்ல மேய்ச்சலுக்குப் போகுதுங்க. அங்க இருக்கற இலை, தழை, மூலிகைச் செடிகள்தான் அதுங்களோட உணவு.
இந்த இடத்துல நான் ஒண்ணு சொல்லனும். 2002-ம் ஆண்டுக்கு அப்புறம், வனப் பகுதியில மாடுகள் மேய்க்க அனுமதி மறுக்கறாங்க. இதனால, மாடு மேய்க்கும் தொழில் ரொம்ப பாதிச்சது. அதேபோல, மாடுங்க மலையடிவாரத்துல மேய்ஞ்சப்ப, வன விலங்குகள் ஊருக்குள்ள நுழையாது. யானை, சிறுத்தை, காட்டுப்பன்றினு எதுவுமே பயிர்களை சேதப்படுத்தலை. கிராம மக்களுக்கும் எந்த தொந்தரவும் இல்லை. ஆனா, இப்ப விலங்குகளால ரொம்ப பிரச்சினை.
கால்நடை மேய்ப்பாளர்களுக்கு பட்டி பாஸ் கொடுக்கறத வனத்துறை நிறுத்துனதுல இருந்துதான் வன விலங்குகள் ஊருக்குள் நுழையறது, அளவுக்கு மீறி செம்மண் அள்ளுவது, ஆசிரமம், கேளிக்கை விடுதி, பள்ளிக்கூடம், காலேஜுன்னு ஆக்கிரமிப்பு அதிகரிச்சது. இதனால், மேய்ச்சல் நிலங்கள் பறிபோனது. வளர்ச்சியை நாங்கள் எதிர்க்கவில்லை. அதேசமயம், காஞ்ச நெலத்தை பசுமையாக்குங்க. பசுமையான நிலத்தை அழிக்காதீங்கனுதான் சொல்லறோம். அதனால, வனத் துறை மாடு மேய்ப்பதற்கு பட்டி பாஸ் கொடுத்து, நாட்டு மாட்டையும், வனத்தையும் காப்பாத்தணும்” என்றார்.
ஜல்லிக்கட்டும். கொங்க காளையும்...
“ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கினத்துக்கப்புறம், கொங்கு மண்டலத்துலேயும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்குது. இதனால, கொங்க காளைகளை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்த, நிறைய பேர் வாங்கறாங்க. அதுலயும் லாபம் வருது. காளைகள் வெட்டுக்குப் போறதும் தடுக்கப்படுது. கோயம்புத்தூர்ல நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில, நான் வளர்த்த `மாதம்பட்டி காரி’ காளை வெற்றி பெற்றுள்ளது” என்றார் பெருமிதத்துடன்.
மண்ணுக்கேத்த மாடுங்களை வளர்க்கனும்...
“நோய் எதிர்ப்பு சத்து குறைவாக உள்ள சீமைப் பசு வளர்ப்பதற்குப் பதிலாக, நாட்டு எருமைகளை வளர்க்கலாம். நாட்டு எருமைப் பாலில் கொழுப்புச் சத்தும் அதிகம். இதனால, கூட்டுறவு சங்கத்துல நல்ல விலை கிடைக்கும். கடைகள்லயும் எருமைப் பால் விக்கலாம். எருமைப் பாலும் ஏ-2 வகையைச் சேர்ந்தது. உடலுக்கு ரொம்ப நல்லது.
அதேமாதிரி, ஒவ்வொரு பகுதிக்குமான பாரம்பரிய மாடுகளைத்தான் நாம் வளர்த்தணும். மதுரைக்காரங்க புலியகுளம், காங்கயம்காரங்க காங்கயம் மாடு, சேலம், தருமபுரிகாரங்க ஆலாம்பாடினு அந்தந்த மண்ணுக்கேத்த மாடுங்களை வளர்த்தால், நாட்டு மாட்டு இனங்கள் பாதுகாக்கப்படும். அதேசமயம், பால் விற்பனையோட நிறுத்திவிடாமல், சாணம், கோமியத்தை மையமாக வைத்து இயற்கை உரம் தயாரித்து, விற்பனை செய்து, லாபமும் அடையலாம்” என்று கால்நடை வளர்ப்போருக்கு வேண்டுகோள் விடுக்கிறார் சண்முகம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago