200 பெண்கள், 1000 வீடியோக்கள், பெரிய நெட் ஒர்க் என்றெல்லாம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் பாலியல் வீடியோ விவகாரப் போராட்டங்களில் கொடிகட்டிப் பறப்பது தேர்தல் கால அரசியல்தான். ‘பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்ற விதிமுறையை காவல்துறை மீறிவிட்டது’ என்ற குற்றச் சாட்டுதான் இதன் மையப்புள்ளி.
பாலியல் கும்பல் மீது தாக்குதல்
இதற்குள் நுழையும் முன்பு இந்த விவகாரத்தை சுருக்கமாக நினைவில் கொள்வோம். 12.02.2019-ல் பாலியல் துன்புறுத்தல் நோக்கத்தோடு காரில் கடத்தப்பட்ட பெண், போராடி தன்னை விடுவித்துக் கொள்கிறார். 10 நாட்கள் சென்ற பிறகே இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்கிறார்.
அப்பெண்ணின் சகோதரன், நண்பர் களுடன் சேர்ந்து தனது தங்கையை மான பங்கப்படுத்த முயற்சித்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை ஒரு தோட்டத்து வீட்டுக்கு கடத்திச் சென்று அடிக்கிறார்கள். அப்போது அக்கும்பலி டம் இருந்த செல்போனை வாங்கிப் பார்த்தபோதுதான் நிறைய பெண்களை இவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோக்கள் இருந்ததை கண்டுபிடிக் கிறார்கள். அதில் இவர்களுக்கு தெரிந்த பெண்களும் இருக்க அதிர்ச்சியாகி அதில் உள்ள சில வீடியோ பதிவுகளை தன் செல் போனில் பதிவேற்றிக் கொண்டு விட்டு விடுகிறார்கள்.
‘வாட்ஸ் அப்’பில் நல்லவன்
இந்த விவகாரத்தில் புகார் தெரிவிக் கப் போனவர்களை போலீஸார் வழக்கம் போல் இழுத்தடிப்பு செய்ய, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலையீட்டில் 4 பேர் மீது 24.02.2019-ல் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 25.02.2019-ல் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருநாவுக்கரசு தலைமறைவாகிறார்.
அவர் சில நாட்கள் கழித்து, தான் பேசுகிற மாதிரி ஒரு வீடியோவை பரப்புகிறார். ‘தான் ரொம்ப நல்லவன் என்றும், குறிப்பிட்ட பெண்ணுக்கும் தனக்கும் நீண்ட கால பழக்கம் என்றும், அவள் விருப்பத்தின் பேரிலேயே அவளுடன் சென்றதாகவும், அதை அந்த பெண்ணையே முறையாக விசாரித்தால் தெரியும்’ என்றும் அதில் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் இந்த விவகாரம் அரசியல் கட்சிகளிடம் குறிப்பாக எதிர்க்கட்சிகளிடமும், மாதர் சங்கங்களிடமும் அறிக்கைகளாக ஆரம்பித்து போராட்டமாக தீவிரமடைந் தது.
இந்த போராட்டங்களின் தீவிரத்தின் பின்னணியில் 5.3.2019-ல் திருநாவுக்கரசு கைது செய்யப்படுகிறார். அப்போது கோவை மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அலுவலகம் கொடுத்த பத்திரிகையாளர் செய்திக்குறிப்பில் புகார் தாரரான பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டு கொடுத்துள்ளனர். அப்படியிருந்தும் பத்திரிகை, தொலைக் காட்சிகள் அப்பெண்ணின் பெயரை வெளி யிடவில்லை. எனினும், சில வலைதளங் களில் இது வெளியாக பாதிக்கப்பட்ட தரப்பு பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. ‘பெண் ணின் பெயரை வெளியிட்டால் பாதிக்கப் பட்ட யாரும் புகார் தர வரமாட்டார்கள் என்ற உள் நோக்கத்தோடு, ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இதை போலீஸ் செய்ததாக’ எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட நாள் இரவு, பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளான பெண்ணின் வீடியோ ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியாக, இந்த விவகாரம் பெரிய அளவில் பிரச்சினையானது. குறிப்பாக இதில் வந்த 1,100 வீடியோ, 200-க்கும் மேற்பட்ட கல்லூரி பெண்கள் பாதிப்பு, பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு தொடர்பு என தகவல்கள் பரவின. அதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.
அதிமுக வாக்குகளே பாதிக்கும்
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் அரசு உத்தரவில் அந்த பெண்ணின் பெயர், அவர் படித்த கல்லூரி யின் பெயரும் இடம்பெற பிரச்சினை மிகவும் மோசமடைந்தது.
‘‘பாலியல் வழக்குகளில் புகார் தந்த பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவே இருக்கு. அதையும் மீறி அதை செய்திருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இப்படி பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர வந்தால் நிலைமை இன்னும் பதற்றமாகிவிடும். ஆளுங்கட்சி பிரமுகர்கள் தொடர்புடைய அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டி வரும்.
இந்த புகார் தந்த சமூகமும் சரி, கைது செய்யப்பட்டுள்ளவர்களும் சரி, இன்னமும் இதில் வர வேண்டிய புகார் மற்றும் கைது நடவடிக்கைகளும் சரி இருவேறு பெரும்பான்மை சமூகத்தை (ஜாதியை) சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அந்த சமூகத்தவர்களின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு சாதகமானவை. இதனால், திமுக கூட்டணி லாபமடையும். எனவேதான் இதை இப்படி அரசியலாக்கி பாதிக்கப்பட்ட மற்றவர்களை புகார் தரவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றார் வழக்கறிஞர் ஒருவர்.
ஜெயராமன்தான் உதவினார்
புகார் தந்த பெண்ணின் தரப்பில் பேசிய போது, ‘‘எங்க பொண்ணு பாதிக்கப்பட்டது பாலியல் கொடுமையால் அல்ல. அந்த நோக்கத்தோடு கடத்தி பணத்தையும் நகையையும் பறித்திருக்கிறார்கள். அதற்கு புகார் தர முயற்சி எடுத்தவரே பொள்ளாச்சி ஜெயராமன்தான். அவர் உதவியில்தான் அந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் குற்றவாளி யிடம் பார்த்த 4 வீடியோக்களையும் கைப்பற்றி விட்டதாக சொல்லுகிறார்கள். அதில் உள்ளவர்கள் சிலர் புகார் தரவும் தயாராக இருந்தார்கள். ஆனால் பத்திரிகை இணையதளம் ஒன்றில் அந்த வீடியோக் கள் வெளியாகி அரசியல் ஆனதோ, அதற்குப் பின்னால்தான் நாங்களே மிகவும் மன உளைச்சல் அடைந்தோம். புகார் தர முன் வந்தவர்கள்கூட வர மறுத்து விட்டார்கள். அந்த 4 வீடியோக்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சின்னு எந்த நபர் இருந்தாலும் போலீஸ் நடவடிக்கை எடுக் கட்டும். அதை விட்டுவிட்டு எங்களை ஏன் அரசியல் ஆக்குகிறார்கள்.
இப்போது நடப்பதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அந்த வீடியோ வெளியிட்ட வர்களுக்குத்தான் இதில் ஆதாயம் ஜாஸ்தி. இந்த வீடியோ வெளியானதால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் தருவதற்கு வர மறுத்துவிட்டனர். எங்களுக்கு உதவி செய்ய வந்தவரையே பிடித்து டேமேஜ் ஆக்குகிறார்கள். அதற்கு நாங்கள் எப்படி ஒத்துழைக்க முடியும். எங்கள் வழக்குக்கு போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுத்துவிட் டது’’ என்று தெரிவித்தனர்.
தங்களுக்கு கிடைத்த வெற்றி
பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் ணின் பெயரை வெளியிட்டதை ஒட்டி தொடரப்பட்ட வழக்கில் கோவை மாவட்ட எஸ்.பி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தரவும், சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் பெயர் அடையாளங்கள் இல்லாமல் வெளி யிடவும் தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக மற் றொரு நபர் தொடர்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு உத்தரவு பெண் தரப்புக்கும் வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் இதுகுறித்து முடிவெடுக்கும் சூழலில் தங்கள் குடும்பம் இல்லை என்பதே அவர்கள் சொல்லும் தகவல். அவர்கள் எந்த நிருபரையும் பார்க்க தயாராகவும் இல்லை. ‘‘இது சென்னை உயர் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே அங்கே இந்த உத்தரவின் மீது என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதைப் பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்’’ என்கிறார் பெண் தரப்பில் ஆஜராகும் ஒரு வழக்கறிஞர்.
வேகமெடுத்த சிபிசிஐடி விசாரணை
சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகு இந்த வழக்கு படு வேகமெடுத் துள்ளது. ஒரு போன் எண்ணை அறிவித்து அதில், தகவல் அறிந்த யாரும் போன் செய்யலாம்; புகார் கொடுக்கலாம் என அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தர வுக்குப் பிறகு நிறையபேர் இது சம்பந் தமாக போனில் தகவல், புகார்கள் தெரிவித் ததாக சொல்கிறார்கள். 2 நாளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக குறிப்பிடுகிறார்கள் சிபிசிஐடி போலீஸார்.
எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக கட்சியிலோ, ‘துணை சபாநாயகர் பதவியையும், கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வரும், ஓபிஎஸ்ஸும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது’ என்கிறார்கள் கோவையைச் சேர்ந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
அவர்கள் சொல்வது இதுதான்: ‘‘இந்த வழக்கில் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். புகார் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுங்கள் என ஜெயராமன் சொன்னது, நடவடிக்கை எடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அதில் கைதான 4 பேர், அதிமுகவின் 'பார்' நாகராஜன் என்ற அம்மா பேரவைச் செயலாளரை கைகாட்ட, அவரைப் பிடித்து விசாரிக்கும்போது முக்கிய பிரமுகர்களின் மகன்கள் என பட்டியல் நீள போலீஸாரே பயந்துவிட்டனர். அப்போதைக்கு அதனால்தான் பெயரளவில் விசாரித்துவிட்டு நமக்கேன் வம்பு என விட்டுவிட்டனர்.
அதை எப்படியோ கண்டுபிடித்து வீடியோ ஆதாரங்களை பெற்று மீடியாக்கள் செய்தியை பரபரப்பாக்கி விட்டன. அது எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாகி விட்டது. வேறு வழி இல்லாமல் மறுபடியும் அதே நபர் களை பிடித்து வழக்கு போட்டு கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட 'பார்' நாகராஜன் அதிமுகவில் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனினும், அவருக்கு பார்கள் வசூலில் முக்கிய பங்கு இருந்துள்ளது. இதனால், அவருக்கு கண்டிப்பாக நிறைய அதிமுக புள்ளிகளுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டும். தற்போது சிபிசிஐடி விசாரணை, அடுத்தது சிபிஐ விசாரணை என நகரும்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்கூட வெளிவரலாம். பெரிய அரசியலும் ஆகலாம்' என்றனர்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் திருச்சியில் கூறும்போது, "பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்கான விசாரணை நடைமுறைகள் மறைமுகமாக இருக்க வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளப்படுத்தும் வகையில் பேசிய கோவை எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கப்படும். விளக்கம் கேட்டு ஓரிரு நாளில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
மேலும், பாலியல் சம்பவம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கான அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இதுகுறித்தும் உரிய விளக்கம் கேட்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago