காவல்துறையில் பெரும் புரட்சிகரமான மாற்றம் ஒன்று உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் தமிழகத்துக்கு அமலாக உள்ளது. இனி அனைத்து குற்றவழக்குகளும் அதற்கென்று உருவாக்கப்படும் குற்றப்பிரிவு மட்டுமே விசாரிக்கும் புதியமுறை அமலுக்கு வந்தது.
போலீஸில் குற்றப்பிரிவு (CRIME), சட்டம் ஒழுங்கு (L&O), போக்குவரத்து (TRAFFIC) என நேரடியாக பொதுமக்களுடன் தொடர்பில் உள்ள மூன்று பிரிவுகள் உண்டு.
இதில் பொதுமக்கள் கொலை, கொள்ளை, திருட்டு, அடிதடி, கொலை முயற்சி, பாலியல் தொந்தரவு, வன்முறை என பலவிதமான புகார்களிஉடன் வருவார்கள். இதில் திருட்டுச் சம்பந்தமான குற்றங்களில் மட்டுமே குற்றப்பிரிவு (crime) விசாரிக்கும்.
மற்ற கொலை, அடிதடி, கொலை முயற்சி, பாலியல், பெண்கள் சார்ந்த குற்றங்கள், காணாமல் போவது போன்ற வழக்குகளை சட்டம் ஒழுங்கு போலீஸார் விசாரிப்பார்கள், அதைவிட சட்டம் ஒழுங்கு போலீஸுக்கு முக்கியமான வேலை பந்தோபஸ்து என போலீஸ் பாஷையில் கூறப்படும் பாதுகாப்பு வேலை.
போக்குவரத்து சார்ந்த வழக்குகள், விபத்து வழக்குகளை போக்குவரத்து போலீஸார் விசாரிப்பார்கள். இதில் பொதுமக்கள் அதிகம் சம்பந்தப்படுவது குற்றப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸிடமே.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பொதுவாக காவல்துறையில் புகார் அளிக்கச்செல்லும் போது பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதாக புகார் எழும். இதற்கு போலீஸ் தரப்பில் சட்டம் ஒழுங்கு பார்ப்பவர்கள் இரவு முழுதும் பந்தோபஸ்து டூட்டி பார்த்துவிட்டு மறுநாள் ஸ்டேஷனுக்கு லேட்டாக வருவார்கள் என்று கூறுவார்கள்.
அல்லது முக்கிய வழக்கை பார்க்கவேண்டியவர் மந்திரிவீட்டு வாசலில் பந்தோபஸ்த்தில் நிற்பார். பாதிக்கப்பட்ட புகார்தாரர் அவருக்காக ஸ்டேஷன் வாசலில் காத்து நிற்பார். புகார் என்ன லட்சணத்தில் விசாரிக்கப்படும். இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில், வழக்குப்போடுவதில், கைது கோர்ட்டு என பல காரியங்கள் இதனால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கம் எனும் நிலை உள்ளது.
இதில் சீர்த்திருத்தம் கொண்டு வருவதற்காக தற்போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. டிஜிபி டி.கே.ஆர் இதற்கான உத்தரவை அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு அனுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டி உத்தரவின் படி தமிழக காவல்துறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளையும் இனி புலனாய்வு பிரிவு ( Investigation Wing ) எனப்படும் (crime) குற்றப்பிரிவே புலனாய்வு செய்து நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும்.
இவர்கள் மட்டுமே இனி அனைத்து வழக்குகளையும் கையாளுவார்கள். இவர்கள் வழக்குகளை மட்டுமே விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து, நீதிமன்றம் முன் நிறுத்தி வழக்கை நடத்தி தண்டனைப் பெற்றுத்தரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவர்கள் எந்நாளும் பாதுகாப்பு (பந்தோபஸ்து) பணிக்கு அனுப்பப்பட மாட்டார்கள். ஒருவேளை தவிர்க்க இயலாத காரணத்தால் தேவைப்பட்டால் பந்தோபஸ்த்து பணிக்கு போவார்கள். அதை தீர்மானிக்க வேண்டியது காவல் ஆணையர் மற்றும் மண்டல ஐஜிக்களே.
சட்டம் ஒழுங்கு போலீஸார் இதுவரை விசாரித்து வந்த திருட்டு அல்லாத குற்ற வழக்குகளை இனி விசாரிக்க மாட்டார்கள். அவர்கள் பணி பாதுகாப்பு மட்டுமே. இனி அனைத்து குற்றச்சார்ந்த வழக்குகளும் குற்றப்பிரிவு போலீஸார் மட்டுமே விசாரிப்பார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எவ்வளவு போலீஸார் இருக்க வேண்டும் என்கிற பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்குக்கு ஆய்வாளர் உட்பட 90 பேர் இருப்பார்கள், குற்றப்பிரிவுக்கு ஆய்வாளர் உட்பட 30 பேர் பணியமர்த்தப்படுவார்கள்.
நகரங்களில் ஒரு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்குக்கு 76 போலீஸாரும், குற்றப்பிரிவுக்கு 24 போலீஸாரும் பணியில் இருப்பார்கள். மிகப்பெரிய ஸ்டேஷன்களில் மட்டும் சட்டம் ஒழுங்கு போலீஸார் 54 பேரும், குற்றப்பிரிவு 26 பேரும், மீடியமான ஸ்டேஷன்களில் சட்டம் ஒழுங்குக்கு 34 போலீஸாரும், குற்றப்பிரிவுக்கு 16 போலீஸாரும் இருப்பர்.
சிறிய ஊர்களில் உள்ள ஸ்டேஷன்களில் ஆய்வாளர்கள் அல்லாத உதவி ஆய்வாளர்கள் தலைமையில் சட்டம் ஒழுங்குக்கு 20 போலீஸார், குற்றப்பிரிவுக்கு 10 போலீஸார் என இருப்பார்கள்.
சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் பாதுகாப்பு அலுவல்களை மட்டுமே செய்ய வேண்டும். எந்த சிறிய அல்லது பெரிய வழக்குகளையும் விசாரிக்கவோ, புலனாய்வு செய்யவோ, வழக்கு பதிவு செய்யவோ இயலாது அவர்களால் கண்டுபிடிக்கும் வழக்குகள் கூட கிரைம் பிரிவு போலீசாரால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய இயலும்.
இதுபோன்ற புலனாய்வு பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் கிரைம் பிரிவு தலைமை காவலரை கொண்டு காணாமல் போகும் நபர்களை கண்டுபிடிக்க அவருக்கு பொருப்பு அலுவலர் பணி கொடுக்கப்படும். அவர் காணாமல் போனவர்கள் குறித்த பொறுப்பு அதிகாரி (missing persons liaison officer) MPLO என அறிவிப்படுவார்.
இவர் (HC or SSI) தலைமைக்காவலர் அல்லது சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தஸ்த்தில் இருப்பார். அவர்கள் எல்லையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க அவருக்கு அந்த பணியினை மட்டுமே வழங்கப்பட வேண்டும். உள்ளிட்ட அம்சங்களை மேற்கண்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதியமுறை நடைமுறைக்கு வந்தால் போலீஸாருக்கு பெரும் நெருக்கடியிலிருந்து விலக்கு கிடைக்கும். அவரவர் வேலையை அவரவர் பார்ப்பார்கள். இதனால் குற்றப்புலனாய்வு சார்ந்த குற்றப்பிரிவு காவலர்கள் தங்கள் பணியான புகார் பெருதல்(complaint register), விசாரணை(enquiry), வழக்குப்பதிவு செய்தல்(FIR), குற்றவாளிகளை கைது செய்தல் (arrest&remand), நீதிமன்ற பணிகள் (court procedure), சாட்சிகளை தயார்படுத்துதல் (witness), தண்டனை வாங்கித்தருதல்(conviction) போன்ற பணிகளில் எவ்வித இடையூறு இன்றி செயல்படலாம்.
இதனால் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத்தருவது அதிகரிக்கும். சட்டம் ஒழுங்கு போலீஸாரும் நெருக்கடி இன்றி பாதுகாப்புப்பணியை மட்டும் பார்ப்பார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago