இதயத்துக்கு இதமாய் இருங்க... 100 வயது வாழ டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம் அட்வைஸ்

By ஆர்.கிருஷ்ணகுமார்

அமெரிக்காவுல இருக்கறவங்கள கவனிக்கவா, உன்னைய படிக்க வெச்சோம். பக்கத்து வீட்டு ஆத்தாள யாருய்யா பாக்கறது'னு அப்பா-அம்மா கேட்டது, என்னை யோசிக்க வெச்சது. பணக்கார நாட்டுல டாலர்ல சம்பாதிக்கறதைக் காட்டிலும், உள்ளூர்ல சாப்பிடற அளவுக்கு சம்பாதிச்சா போதுமுன்னு முடிவு செஞ்சேன். எங்க பேராசிரியர்கிட்ட போயி `அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, இந்தியாவுக்குப் போறேன்`னு சொல்லிட்டு, உடனே கிளம்பி வந்துட்டேன். இப்பவும் நிறைய பேரு அமெரிக்காவுலயே தங்கி, இந்தியாவை மறந்துடறாங்க. வெள்ளைக்காரங்களுக்கு கைகட்டி வேலை செய்யறதை சிலர் இன்னமும் நிறுத்தல. இந்த நிலைமை மாறனும்" என்று இந்தியா திரும்பியதை விவரித்தார் கே.ஜி.பக்தவத்சலம்.

"1974-ல் திரும்பவும் அரசு மருத்துவமனையில வேலைக்குச் சேர்ந்தேன். `நாமளே கோயம்புத்தூர்ல ஆஸ்பத்திரி கட்டலாம்`னு  அப்பா சொன்னாரு. `இடத்துக்கு எங்கப்பா போறது`னு கேட்டேன். இப்ப கே.ஜி. ஆஸ்பத்திரி இருக்கற இடத்திலேயே 50 சென்ட் நிலம் வாங்கி, கட்டிடம் கட்டினாரு. இதுக்காக 19 பர்சென்ட் வட்டிக்கு ரூ.10 லட்சம் கடன் வாங்கினாரு. அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனைங்கற பேர்ல, 10 படுக்கை ஆஸ்பத்திரியைக் கட்டினோம். அப்புறமா நான் கே.ஜி. மருத்துவமனைனு பேரை மாத்தினேன்.

அப்ப பாலக்காடு, ஹைதராபாத்துல மட்டும்தான் இ.சி.ஜி. மெஷின் இருந்தது. நான் அமெரிக்காவுல இருந்து வரும்போதே ஒரு இ.சி.ஜி. மெஷினும், மூச்சுவிட உதவும் மெஷினும் கொண்டுவந்தேன். இங்க ஒரு எக்ஸ்ரே மிஷின் வாங்கினோம். எட்டுக்கு ஆறு அடியில ஆபரேஷன் தியேட்டர், சின்னதா ஸ்ரெர்லைசர், டேபிள்னு மருத்துவமனையை தொடங்கினோம். முதல் 5 நாள் சாதாரண மருத்துவத்துக்குத்தான் ஆளுங்க வந்தாங்க. நான் படிச்சதோ அறுவைசிகிச்சை, அதனால என்ன, வர்றவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்போம்னு பணியைத் தொடங்கினோம்.

உத்வேகம் தந்த கேலி, கிண்டல்கள்...

அப்ப, உள்ளூர் டாக்டருங்க சில பேரு, `அமெரிக்கா டாக்டரு, அமெரிக்காவுல இருந்து மிஷினு கொண்டாந்திருக்காரு, பேஷன்டும் அமெரிக்காவுல இருந்து கொண்டாருவாரா?'னு நக்கல் பேசினாங்க. அதுமட்டுமில்லாம, `ரூம் வாடகை ரூ.30, ஆபரேஷனுக்கு ரூ.1,000 எவன்யா கொடுப்பான்'னும் நையாண்டி பண்ணாங்க. பஞ்சு வியாபாரத்துல சம்பாதிச்சத ஆஸ்பத்திரியில போட்ட அப்பா ஒரு பக்கம், கேலி செய்யற டாக்டருங்க இன்னொரு பக்கம்.

இந்த மாதிரி பேச்சு அப்பா காதுக்கும் போச்சு. 'பையன் ஒண்ணும் பென்ஸு கார் வாங்கி, ஊர்வலம் போகலை. கஷ்டப்படறவங்களுக்கு சேவை செய்யறான். யார் வேணா, என்னா வேணா சொல்லட்டும்'னு சொல்லிட்டாரு. இது எனக்கு பெரிய உந்துதலா இருந்தது. ராப்பகலா உழைச்சேன். சலிக்காம வேலை செஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினோம். எல்லா ஆபரேஷனும் சக்ஸஸ் ஆச்சு. வெறிநாய் கடி, காலரா பாதிப்பு, தீக்காயமடைஞ்சவங்கனு எல்லா நோயாளிகளும் வந்தாங்க.

போலீஸ் இன்ஸ்பெக்டரா...கடமையா?

விபத்துல காயமடைஞ்சவங்களும் மருத்துவமனைக்கு வந்தாங்க. ஆனா, `இது லீகல் கேஸ் அட்மிட் செய்ய வேணாம். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சிடுங்க'னு  போலீஸ் இன்ஸ்பெக்டர் வலியுறுத்தினாரு. `சரிங்க, ஆனா, ஏதாவது அசம்பாவிதம் நடந்தா நான் பொறுப்பேற்கிறேனு எழுதி, கையெழுத்து போட்டுக் கொடுங்க, நான் நோயாளியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறேன்`னு  இன்ஸ்பெக்டர்கிட்ட நான் சொன்னேன். `என்னா, மிரட்டறீங்களா?`னு அவர் கேட்டாரு. `காயமடைஞ்சவங்களுக்கு சிகிச்சை அளிக்கிறேனு மெடிக்கல் கவுன்சில்ல சத்தியம் செஞ்சிருக்கேன். விபத்து கேஸா, போலீஸ் கேஸா, கொலைக் கேஸாங்கறதுல எல்லாம் எனக்கு அக்கறை இல்லை. உயிரைக் காப்பாத்தறது மட்டும்தான் என்னோட வேலை. அதுல நான் தவற மாட்டேன்'னு சொல்லிட்டேன்.  கோயம்புத்தூர்லயே மெடிக்கல் லீகல் கேஸுங்களை அட்மிட் செஞ்ச முதல் மருத்துவமனை கே.ஜி.தான்.

அமெரிக்காவுல வேலை செஞ்ச 2 வருஷத்துல, அங்க இருக்கற மருத்துவமனைகளோட தரம் தெரிஞ்சது. உலகத்திலேயே சிறந்த மருத்துவமனைகளா, அமெரிக்க மருத்துவமனைகள் இருந்தது. அதனால, கே.ஜி. மருத்துவமனையை, அமெரிக்காவுல இருக்கற மருத்துவமனைகளுக்கு நிகரா நடத்தனுமுன்னு முடிவு செஞ்சேன். உலகத்துல எந்த சிறந்த மருத்துவ உபகரணங்கள் வந்தாலும், அதை கே.ஜி.க்கு கொண்டுவந்துடுவோம். கொஞ்சம் வருஷத்துல அமெரிக்காவுல இருக்கற மருத்துவமனைகளைவிட சிறப்பாக நடத்தினோம்.

நல்ல மருத்துவத்தைக் கத்துக்க அமெரிக்கா போகலாம். அதேசமயம், அங்க கத்துக்கிட்டு, இந்தியாவுக்கு வந்துடனும். நாம கத்துக்கிட்டது நம்ம நாட்டுக்குப் பயன்படனும்.  ஒரு கட்டத்துல, வெளிநாட்டுல இருந்தெல்லாம் கே.ஜி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரத் தொடங்கினாங்க. மருத்துவத் துறையில இந்தியாவோட வளர்ச்சி அபாரமானது. உண்மையில, கணிதம், மருத்துவத் துறையில எல்லாம் இந்தியாதான் ஒருகாலத்துல முதன்மை வகிச்சது.

வெள்ளைக்காரங்க நம்மை அடிமைப்படுத்தி, நம்முடைய திறமைங்களை மறச்சிட்டாங்க. நம்மோட பாரம்பரிய விஷயங்களை ஒண்ணுமில்லாம செஞ்சாங்க. கி.மு. 800-ம் ஆண்டிலேயே அறுவைசிகிச்சையை மேற்கொண்டவர் இந்தியாவோட சுஸ்ருதர். அறுவைசிகிச்சையின் தந்தைனு அவரைப் போற்றுவாங்க. இதையெல்லாம் வெள்ளைக்காரங்க மறக்க வெச்சாங்க. ஆனாலும், சுதந்திரத்துக்கு அப்புறம் நம்மளோட வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியல.

10-லிருந்து 500-ஆக...

ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், 10 படுக்கை வசதினு தொடங்கின கே.ஜி. மருத்துவமனை, இன்னைக்கி 500 படுக்கை வசதி கொண்டதா மாறியிருக்கு. மல்டி ஸ்பெசாலிட்டி, சூப்பர் ஸ்பெசாலிட்டினு எல்லாத்தையும் தாண்டி வளர்ந்திருக்கு. ஒரே நேரத்துல எத்தனை பேர் விபத்துல அடிபட்டு வந்தாலும், சிகிச்சை கொடுக்கற அளவுக்கு வளர்ந்திருக்கோம். எல்லா வகையான வியாதிகளுக்கும் சிகிச்சை தர்றோம். 60 தீவிர சிகிச்சைப் பிரிவு, 175 முழுநேர டாக்டர்கள் 75 முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், 500 செவிலியர்கள், 200 தொழில்நுட்பப் பணியாளர்கள்னு 1500-க்கும் மேற்பட்டவங்க பணியாற்றுகிறாங்க. அதுமட்டுமில்லா, மருத்துவம் தொடர்பாக 1,000 பேருக்கு மேல படிக்கிறாங்க.

ஆனா, எங்க வீட்டுல யாரும் மருத்துவம் படிக்கலை. என்னோட மகள் வசந்தி, நிர்வாகப் படிப்பு படிச்சிட்டு, கே.ஜி. மருத்துவமனையை பாத்துக்கிறாங்க.  மகன் கம்ப்யூட்டர் படிப்பு படிச்சிட்டு, மிகப் பெரிய கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனி நடத்துகிறார். அவங்களை மருத்துவம் படிங்கனு நான் வற்புறுத்தவேயில்லை.

அரசியலும், மருத்துவமும் பணம் சாம்பாதிக்கிறதுக்கான வேலை இல்லீங்க. ரெண்டுமே சேவை. ஆனா, இந்த நிலை நிறைய மாறிப்போச்சு. `இந்த சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்யணுமப்பா'னு அப்பா சொல்லிக்கிட்டே இருப்பாரு.  அவருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டப்ப, ரூ.10 லட்சம் செலவு செஞ்சேன்.

நம்மளால முடியுது, செலவு செஞ்சோம். ஏழைங்க என்னா பண்ணுவாங்கனு தோணிச்சு. சரவணம்பட்டியில கண் மருத்துவமனையைத் தொடங்கினோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கும் மேல முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சை செய்திருக்கோம். இதுக்காக மத்திய அரசு ரூ.500-ம், அரிமா சங்கம் ரூ.500-ம், எங்க அறக்கட்டளை ரூ.2000-ம் வழங்கியது.

இதே மாதிரி,  கோவை குண்டுவெடிப்புல காயமடைந்த 200 பேருக்குமேல சிகிச்சை கொடுத்தோம்.  கும்பகோணம் தீ விபத்து, குஜராத் பூகம்பம், கஜா புயல், கேரளா மழை, வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கும் சிகிச்சை கொடுத்திருக்கோம். கே.ஜி. வெறும் மருத்துவமனை மட்டும் இல்ல. பொதுநல சேவை நிறுவனம். நிறைய பேருக்கு குறைந்த கட்டணத்துல சிகிச்சை கொடுக்கிறோம். இதுவரைக்கும் ஆயிரக்கணக்கானவங்களுக்கு இதய அறுவைசிகிச்சை, சிறுநீரக அறுவைசிகிச்சைகளை செய்திருக்கோம். இதுக்கெல்லாம் காரணம் உண்மையா உழைக்கிற எங்க டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும்தான்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

அப்துல் கலாமின் நட்பு

கே.ஜி. மருத்துவமனைக்கு அப்துல் கலாம் 5, 6 முறை வந்திருக்கிறார். கலாம் என்று சொல்லும்போதே கே.ஜி.பக்தவத்சலத்தின் முகம் மலர்கிறது. "1997-ல் அவர் பாரத ரத்னா விருது வாங்கினாரு. அப்ப அவரு பிரதம மந்திரியின் பாதுகாப்பு ஆலோசராக இருந்தாரு. நான் டெல்லிக்கு போன்ல தொடர்புகொண்டு, கலாம்கிட்ட பேச அனுமதிகேட்டேன். அடுத்த நாள் அவர்கிட்ட பேச முடிஞ்சது. நீங்க யார் தம்பி, என்ன வேணும்னு சொன்னாரு. நான் ஒரு டாக்டர். கோயம்புத்தூர்ல இருந்து பேசறேன். நீங்க கோயம்புத்தூர் வரணும்'னு கேட்டேன். பாக்கலாம்னு சொன்னாரு.

உடனே, `நாங்க  ஒரு டிரஸ்ட் மூலமா ஏழைகளுக்கு வைத்தியம் செய்யறோம். கண் அறுவைசிகிச்சைகளை இலவசமாக செய்யறோம்'னு சொன்னேன். அதுக்கப்புறம் அரை மணி நேரம் பேசினாரு. ஒரு மாசம் கழிச்சி கோயம்புத்தூர் வந்தாரு. `இந்தியா 20-20'ங்கற தலைப்புல ஒரு கருத்தரங்கில பேசினாரு. எல்லோரும் அசந்து போயிட்டாங்க. அப்புறம் எங்க மருத்துவமனைக்கு வந்தாரு. அவர் குடியரசுத் தலைவரா பொறுப்பேத்ததுக்கு அப்புறமும் வந்தாரு. பதவியில இருந்து விலகினதுக்கப்புறமும் வந்தாரு. அவர் கடவுளோட பிரதிநிதிங்க. அவரை மாதிரி இன்னொருத்தர் பிறக்க மாட்டாங்க" என்று கூறியபோது, பக்தவத்சலத்தின் கண்கள் லேசாக கலங்கின.

ஆசிரியப் பணியில்...

பேச்சை மாற்ற வேண்டி, "இந்த 76 வயசுலேயும் தினமும் வகுப்புகளை நடத்திக்கிட்டிருக்கீங்களாமே?" என்றோம். "நான் நேசிக்கிற மற்றொரு வேலை ஆசிரியர் வேலை. நல்ல பேராசிரியர்கள்கிட்ட நான் கத்துக்கிட்டேன். நானே படிச்சும் நிறைய கத்துக்கிட்டேன். இன்னமும் தினம் 2 புத்தகம் படிக்கிறேன். படிச்சதையெல்லாம் நானே வெச்சிக்கிட்டா எப்படிங்க? அதனால, கடந்த 40 வருஷத்துக்கு மேலாக தினமும் ஒரு மணி நேரமாவது டாக்டர்களுக்குப் பாடம் நடத்தறேன். இப்பவும் தினமும் காலை 7 மணிக்கு, எங்க டாக்டர்களுக்கு பாடம் நடத்துகிறேன். அதுக்கப்புறம் எங்க நிர்வாகிகளுக்கு வகுப்பெடுக்கிறேன். வெறும் மருத்துவமும், நிர்வாகமும் மட்டும் நடத்தறதில்லை. வாழ்வியலையும், அறத்தையும் கத்துக்கொடுக்கிறேன். இதுக்காகவே நிறைய படிக்கிறேன். நிறைய பேரை, குறிப்பா, ஆன்மிகவாதிகளை சந்திச்சி பேசறேன். பிழைப்புக்காக படிக்கறது வேற, வாழ்க்கைக்காக படிக்கறது வேற. இப்ப நான் வாழ்க்கைக்காக படிக்கறேன். அதை மத்தவங்களுக்கும் கத்துக்கொடுக்கறேன். 

என்னோட பணி தொடர்ந்து நடக்கறதுக்கும், வெற்றிகளுக்கும் முக்கியக் காரணம் என்னோட மனைவி தனலட்சுமிதான். நான் சமூகத்துக்காக உழைச்சப்ப, என்னைப் பாத்துக்கிட்டது அவங்கதான். குழந்தைகளை படிக்கவெச்சு, நல்ல நிலைக்கு ஆளாக்கினதும் அவங்கதான். எனக்கு 6 அம்மாங்க. என்னைப் பெத்த ருக்மணி அம்மா, சித்தி சீதாலட்சுமி, மாதா அமிர்தானந்தமயி, நாராயணி பீடம் சக்தி அம்மா, மனைவி தனலட்சுமி அம்மா... கடைசியா ஆயிரம் ஆயிரம் பேருக்கு உயிர் கொடுத்த, பல்லாயிரம் பேருக்கு சோறுபோடற கே.ஜி.ங்கற அம்மா" என்று கூறியவரிடம், "இளைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?" என்று கேட்டோம்.

சினிமா, டிவி-யில நேரத்தை தொலைக்காதீங்க. மனசு கெட்டுப்போயிடும். ஒழுக்கமும், நேர்மையும், கடமையை தவறாமல் செய்யற மனப்பான்மையும் ரொம்ப முக்கியம்" என்றார்.

எழுத்தாளர் ஜி.பி.!

ஆசிரியப் பணி மட்டுமல்ல. எழுத்துப் பணியிலும் அவ்வப்போது இவர் கவனம் செலுத்தியிருக்கிறார்.  `இதயம் ஒரு கோவில்', `உயிரே...உயிரே...`, `நெஞ்சே...நெஞ்சே...', `பல்லாண்டு...பல்லாண்டு...' போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

நூறு வயது வாழ...

"100 வயசு வாழனுமுன்னா, ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளிட்டவை 100 அளவுக்குள்ள இருக்கனும். மாசத்துக்கு 100 கிலோமீட்டர் நடக்கனும். எடை மட்டும் 100-ஐ எட்டவே கூடாது. இப்ப எல்லாம் நிறைய பேரு மாரடைப்பால பாதிக்கப்படறாங்க. உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றம்னு இதுக்கு நிறைய காரணம். அதனால, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, நடைப் பயிற்சி, யோகானு நல்ல விஷயங்களைக் கடைப்பிடியுங்க. ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, இசிஜி பரிசோதனைகளை செஞ்சிக்கோங்க. இதயத்துக்கு இதமா இருங்க" என்று 100 வயது வாழ அட்வைஸ் கொடுக்கிறார் டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம்.

குவித்த விருதுகள்...

இவரது மருத்துவ சேவையைப் பாராட்டி 2005-ல், அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பத்மஸ்ரீ விருது வழங்கினார். 1984-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியிடம் டாக்டர் பி.சி.ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார் கே.ஜி.பக்தவத்சலம். அண்மையில் மருத்துவத்துக்கான சிறந்த தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் சிறந்த மருத்துவமனை விருதை,  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அப்பாதான் ரோல் மாடல்..

கே.ஜி.பக்தவத்சலத்தின் மகன் முனைவர் அசோக் பக்தவத்சலம், கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. படிப்பும், நியூயார்க் சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். (கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி.யும் முடித்துள்ளார். கோவை கே.ஜி. இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (கேஜிஐஎஸ்எல்) நிர்வாக இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார். "டாக்டர் தொழிலை ரொம்ப நேசித்தவர் அப்பா. ஆரம்பத்துல எங்ககூட இருந்த நேரத்தைக் காட்டிலும், மருத்துவமனையிலதான் நிறைய நேரம் இருப்பாரு. தீபாவளி, பொங்கல்னு பண்டிகையப்பதான் ஒண்ணா இருப்போம். உண்மையில் அவர் கடவுளால ஆசிர்வதிக்கப்பட்டவரு. இவ்வளவு பெரிய மருத்துவமனையை உருவாக்கி, லட்சக்கணக்கானவங்களோட நோயைக் குணமாக்கியிருக்காரு. அதேசமயம், டாக்டருக்குப் படினு எங்கிட்ட சொன்னதேயில்லை. உனக்குப் பிடிச்சதை படினு முழு சுதந்திரம் கொடுத்தாரு. நான் அமெரிக்கா போனப்ப, பைக் ஓட்டாதே, சிகரெட் குடிக்காதேனு ரெண்டு விஷயத்தை மட்டும் வலியுறுத்தினாரு. இன்னைய வரைக்கும் அதை நான் கடைப்பிடிக்கிறேன். இந்த வயசுலயும் பரபரப்பா ஓடிக்கிட்டிருக்காரு. அவரோட வயசுல, அவர் சுறுசுறுப்புல பாதியாவது நமக்கெல்லாம் இருக்குமாங்கறது சந்தேகம்தான். நான் சாஃட்வேர் துறையில இந்த அளவுக்கு வளர்ந்திருக்கறதுக்கு, அவர் கொடுத்த சுதந்திரமும், ஊக்கமும்தான் காரணம். எப்பவும், என்னோட ரோல் மாடல் அப்பாதான். `எப்பவும் லாபத்தை மட்டும் பார்க்காதே, தொழிலாளர், சமூக நலனும் முக்கியம்`னு  சொல்லுவாரு. அவரோட சமூகப் பணிகளை முன்மாதிரியா வெச்சுத்தான், எங்க நிறுவனமும் பல சமூகப் பணிகளில் ஈடுபடுது. அமெரிக்காவுல நான் இருந்தப்ப, `சீக்கிரம் கோயம்புத்தூர் வந்து, என்னோட இருப்பா`னு கேட்டுக்கிட்டாரு. அவரோட அன்பு என்னை நெகிழ வெச்சது. அவர் சொன்னபடியே, கோயம்புத்தூருக்கு வந்துட்டேன்" என்றார் பெருமிதத்துடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்