இரவு நேரங்களில் டாஸ்மாக் பணியாளர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்களைத் தடுக்க, சென்னையில் உள்ளதுபோல் டாஸ்மாக் கடைகளுக்கே வங்கியாளர்கள் சென்று பணத்தை வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட கோல்டன் நகர் பகுதி டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர் ஆரோக்யசாமி, கடந்த 13-ம் தேதி இரவு வியாபாரம் முடிந்து வீட்டுக்கு சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டி கையில் வைத்திருந்த பையை பறித்துச் சென்றது. அந்த பையில் டாஸ்மாக் நிர்வாக ஆவணங்கள் மட்டும் இருந்ததால் பணம் பறிபோகவில்லை. இதுகுறித்து மாநகர வடக்கு போலீஸார் விசாரிக்கின்றனர். இதுபோன்று டாஸ்மாக் பணியாளர்களை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
3 மாதங்களில் 7 சம்பவங்கள் இதுதொடர்பாக திருப்பூர் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் சிலர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: இந்த சம்பவம் போல், கடந்த 2 வாரங்களுக்கு முன் ஊத்துக்குளி சாலை 2-வது ரயில்வே கேட் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையின் பணியாளரை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தாக்கி ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர். கடந்த மாதம் ராதா நகர் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை பணியாளரை இருவர் தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், அப்போது அவர் பணம் எதுவும் எடுத்துச்செல்லவில்லை.
மேற்கூறப்பட்ட 3 சம்பவங்களிலும், ஒரே வண்ணம் கொண்ட இருசக்கர வாகனத்தில் அரிவாளுடன் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 7 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தொகை குறைவாக உள்ளது என்பதால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் போலீஸார் பேசி சமாளித்து அனுப்பிவிடுகின்றனர். வழக்கமாக, வியாபாரம் முடிந்து சரிபார்க்கும் பணத்தை மறுநாள் காலை வங்கிகளில் செலுத்துவது வழக்கம். இரவு நேரங்களில் வியாபாரம் முடிந்த பிறகு, பாதுகாப்பு கருதி தொகையை கடையில் வைத்து பூட்டிச் செல்வது உண்டு.
அதில், மறுநாள் வியாபாரத்துக்கு சில்லரை வேண்டும் என்பதற்காக, தெரிந்த பெட்ரோல் நிரப்பும் மையங்களில் சொல்லி வைத்து, அதற்கேற்ப ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சில்லரை வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். இதற்காகவே பணத்தை வெளியில் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எவ்வளவு தொகை கொள்ளையடிக்கப்பட்டாலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை நடைமுறை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் கூறும்போது, ‘டாஸ்மாக் மதுக்கடைகளில் இரவு வியாபாரம் முடிந்தவுடன், பணத்தை கடையிலேயே பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து செல்ல நிர்வாகம் கூறுகிறது. ஆனால், உள்ளூர் போலீஸார் பணத்தை வீட்டுக்கு எடுத்துச்செல்லுமாறு கூறுகின்றனர். எதை பின்பற்றுவது என்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது. இரவில் பணத்தை எடுத்துச் செல்லும்போது பாதுகாப்புக்கு போலீஸார் வந்தாலும், அவர்கள் மீதும் திடீர் தாக்குதல் நடத்தி பணத்தை கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கே வங்கிப் பணியாளர்கள் சென்று வியாபார பணத்தை வாங்கிச் செல்லும் நடவடிக்கை உள்ளது. இந்த நடைமுறையை அனைத்து மாவட்டங்களுக்கும் அமல்படுத்த வலியுறுத்தி வருகிறோம். ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் அதை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. அம்மா உணவகத்தில்கூட, பணத்தை நேரில் சென்று பெற்றுக்கொள்ளும் முறை உள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள் நாள்தோறும் அச்சத்துடன் வங்கிகளுக்கு சென்று பணத்தை செலுத்தி வருகின்றனர்' என்றார். மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘டாஸ்மாக் பணம் அரசுக்கு உரியது. அதனால், எவ்வளவு காணாமல்போனாலும் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago