காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பிரமுகர்களின் ஆளுமை; தேனியைக் கைப்பற்றிய ஈவிகேஎஸ் இளங்கோவன்:  டெல்லி அழுத்தத்தால் மாற்றம்

By என்.கணேஷ்ராஜ்

தேனி தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக ஆருண் களமிறக்கப்படுவார் என்ற நிலையில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். மூன்று ஆதிக்க கட்சிகளிலும் விஐபி வேட்பாளர்கள் களமிறங்குவதால் தேனி தொகுதி மாநில அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களாக ஆரம்பம் முதலே விஐபி வேட்பாளர்களின் பெயர்களே பேசப்பட்டு வந்தது. இதை நிரூபிக்கும் வகையில் அதிமுக.வேட்பாளராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அறிவிக்கப்பட்டார்.

ஏற்கெனவே அதிமுகவிற்கு சாதகமான தொகுதி. மேலும் பொருளாதார ரீதியாக வலுவாகக் களம் இறங்கும் பின்னணி இவருக்கு இருந்ததால் எதிரணிக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.

இத்தொகுதியில் மும்முனைப் போட்டி உறுதியான நிலையில் அமமுக தனக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் தயக்கம் காட்டியது.

அதிமுகவிற்கு இணையாக பலம் வாய்ந்த வேட்பாளரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக பல கட்டப் பேச்சுவார்த்தைகளிலும், ஆலோசனையிலும் இறங்கினர்.

நிறைவாக தங்க தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர், தமிழக அளவில் பிரபலம், கட்சியின் முக்கியத் தூண் என்ற வகையில் இவரின் என்ட்ரி எதிரணியினருக்கு நிகரான போட்டியாக இருக்கும் என்று கருதப்பட்டது.

ஆனால் தேசியக் கட்சியான காங்கிரஸ் பல நாட்களாக தனது வேட்பாளரை அறிவிக்காததால் திமுக.கூட்டணியினரிடையே சுணக்க நிலையை ஏற்படுத்தியது.

இக்கட்சி சார்பில் ஆருண் அறிவிக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். 2004ல் இத்தொகுதிக்குள் வந்த இவர் இரண்டு முறை இங்கு எம்பி.யாக இருந்துள்ளார். தேர்தலில் மட்டுமல்லாது கட்சி செயல்பாடுகள் அனைத்திலும் இவரின் பங்கு அதிகமாக இருந்தது. கட்சியினரை ஒருங்கிணைத்து இத்தொகுதியை அதிமுகவிடம் இருந்து மீட்டு காங்கிரஸின் தடத்தை வலுவாக இங்கு பதித்துள்ளார். இருப்பினும் இவர் உடல் நலக்குறைவுடன் இருக்கிறார். எனவே இவரது மகன் களமிறக்கப்படுவார் என்றும் தகவல்களும் வெளியாகின.

ஆருணை எதிர்பார்த்திருந்த வேளையில் திடீரென ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். இவரின் கலகலபேச்சும், நையாண்டியும் கட்சி கடந்து பலரிடையே ரசிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கெனவே அமமுக மாநிலப் பொறுப்பில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கிய நிலையில், தற்போது காங்கிரஸ் மூத்த தலைவரும் இத்தொகுதி வேட்பாளராக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். மாநில அளவிலான பிரபலங்கள் தேனியில் போட்டியிடுவதால் இத்தொகுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆரம்பத்தில் இவர் ஈரோடு தொகுதியைத்தான் குறிவைத்து வந்துள்ளார். தலைமையிடமும் ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தி நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் இத்தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதால் வேறு தொகுதியை நாடும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கோவை, திருப்பூர், மதுரை என்று ஒவ்வொரு தொகுதியும் கூட்டணிக் கட்சிகளுக்கு கைமாறிப்போனது.

கடைசியில் திண்டுக்கல்லில் எப்படியாவது களமிறங்கிவிடுவது என்று தீர்மானமாக இருந்தார். ஆனால் திமுக இத்தொகுதியை தன்பக்கம் வைத்துக் கொண்டது. இதனால் தொகுதி கிடைக்காமல் தடுமாறும் நிலை இவருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் ஒவ்வொரு தலைவரும் வெவ்வேறு தொகுதிகளைக் கைப்பற்றிக் கொள்வதில் மும்முரம் காட்டினர். இதன்படி கன்னியாகுமரியில் வசந்தகுமார், திருச்சியில் திருநாவுக்கரசு, விருதுநகரில் மாணிக்தாகூர், புதுச்சேரியில் வைத்திலிங்கம், கரூரில் ஜோதிமணி, கிருஷ்ணகிரியில் செல்லக்குமார் என்று மேலிடத்திற்கு அழுத்தம் தந்து கொண்டிருந்தனர். திருவள்ளூர் தொகுதி தனித்தொகுதி என்பதால் அதிலும் களம் காண முடியவில்லை.

இந்நிலையில் தனக்கான தொகுதியைப் பெறுவதில் இளங்கோவனுக்கு சோதனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்துதான் கடைசி முயற்சியாக வேறு வழியின்றி தேனியைக் கேட்டுப் பெறுவது என்று முடிவு செய்தார். இத்தொகுதியில் ஆருண் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் டெல்லி மேலிடத்தை அணுகி இதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். இவரை சமாதானப்படுத்தும் முயற்சி தோற்றதால் பின்பு கட்சித் தலைமை இவரது பெயரை அறிவித்தது. இது ஆருண் ஆதரவாளர்களிடையே சற்று மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ், அதிமுக, அமமுக அறிவிப்புகளின் மூலம் தேனி தொகுதி மீண்டும் விஐபி வேட்பாளர்களின் தொகுதியாக மாறியுள்ளது.

மூன்று கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த இத்தேர்தலில் பிரபலங்கள் களமாடுவது பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக ஸ்டார் பேச்சாளர்களை அதிக அளவில் வரவைப்பதற்கான திட்டமிடலும் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்