மிரட்டும் வட இந்தியர் வாக்கு வங்கி...தயங்கும் திமுக விஐபி-க்கள்..!

By கா.சு.வேலாயுதன்

 “மோடியை நேசிக்கும் வட இந்தியர்களின் வாக்கு வங்கி அதிகரித்து இருப்பதால் ஈரோடு, திருப்பூர் தொகுதிகளில் களமிறங்க திமுக, காங்கிரஸ் கட்சியின் விஐபி வேட்பாளர்களே தயக்கம் காட்டுகிறார்கள்” கொங்கு தேசத்தில் இப்படியொரு பேச்சு பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

திருப்பூர் மக்களவை தொகுதியைப் பொறுத்தவரை நகர்புற தொகுதிகளில் டெக்ஸ்டைல், பனியன், சாயத் தொழிலுக்கு பெயர் பெற்றது. இங்கெல்லாம் உள்ளூர்காரர்களை விட வெளியூர் மக்களே அதிகம் வசிக்கிறார்கள். அதிலும், கடந்த இருபது வருடங்களில் பிஹார், உபி, மணிப்பூர், ஒடிசா, அஸ்ஸாம், மணிப்பூர் என  வெளி மாநிலங்களில் இருந்து வந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. . இவர்களில் பெரும்பாலானவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தும் பெற்று திருப்பூர் வாசிகளாகவே மாறி விட்டனர். இப்படி வந்தவர்களின் வாக்கு மட்டுமே ஒரு லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள்.

ஈரோடு மக்களவை தொகுதியில் திருப்பூர் அளவுக்கு இல்லையென்றாலும் சமீபகாலமாக அங்கும் வட இந்தியர்களின் வருமை அதிகரித்து விட்டது. குறிப்பாக, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை, ஈரோடு மாநகரின் டெக்ஸ்டைல், விசைத்தறி, சாயத்தொழிற்சாலை, தோல் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக மையங்கள், ஓட்டல்களில் வடமாநிலத்தவர் நிறைந்துள்ளார்கள். ஒரு காலத்தில் ஈரோடு இந்திரா நகரில் ஒரு வார்டுக்குள் வசித்து வந்த வட இந்தியர்கள் (மார்வாடிகள்), இப்போது அந்த வார்டை சுற்றிலும்கூட அவர்களின் உற்றார் உறவினர்கள் என எண்ணிக்கை பெருத்து விட்டார்கள். இவர்களை எல்லாம் கணக்கு எடுத்தால் ஈரோடு தொகுதியிலும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வட இந்திய வாக்காளர்கள் தேறக்கூடும்.

 

இப்படி இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிகரித்துள்ள வெளி மாநிலத்தவர்களின் வாக்குகள் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் உற்சாகத்தையும், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் லேசான கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஈரோடு மாவட்ட திமுக பிரமுகர் ஒருவர், “பொதுவாக கடந்த காலங்களில் வட இந்தியர்களின் வாக்குகள் பாஜகவுக்கே சாதகமாக இருக்கிறது. பாஜகவை விரும்பாத வட இந்தியர்கள் பணத்துக்கு விலைபோவார்கள். அதையும் அதிமுகதான் வளைக்கும். இப்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் அந்த அணிக்கு வெளி மாநிலத்து ஓட்டுகள் நிச்சயம் பலம் சேர்க்கும். அதேசமயம், திமுக கூட்டணிக்கு இது இன்னொரு தலையிடி. கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை கவுண்டர்கள் ஆதிக்கம் மிகவும் உள்ள பகுதி. சாதியை முன்னிறுத்தும் கொங்குநாடு மக்கள் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் மட்டும் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது.  மற்ற இடங்களிலும் அது கணிசமான வாக்குகளை பெற்றது.

இப்போதைய நிலையில் கவுண்டர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் இனத்தவரான ஈபிஎஸ்ஸின் கரத்தை வலுப்படுத்துவது என்ற முடிவில் இருக்கிறார்கள்.  எனவே, மற்ற தொகுதிகளை விட ஈரோடு, திருப்பூர் தொகுதிகளில் பணபலத்தையும், ஜாதி பலத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் எங்கள் அணிக்கு இருக்கிறது. இதற்காக ஈரோடு தொகுதிக்கு முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், க.முத்துசாமி, என்.கே.கே.பி.ராஜா, திருப்பூருக்கு முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், முன்னாள் மேயர் செல்வராஜ் தேமுதிகவிலிருந்து வந்த தினேஷ்குமார் உள்ளிட்டவர்களை பட்டியல் போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஓஎம்ஜி குரூப் எடுத்த சர்வேயும் இவர்களின் பெயரைத்தான் சொல்கிறது.    ஆனால் இவர்களில் யாருமே இப்போது இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட தயங்குகிறார்கள்.  ‘இப்ப வேணாம்... சட்டமன்றத் தேர்தல் வரட்டும்’னு ஜகா வாங்குறாங்க. இதுக்குக் காரணம் மேலே சொன்ன விஷயங்கள் தான்’’ என்றார்.

கழகத்தினர் தயங்குவதாலோ என்னவோ திமுக தலைமையும்  “இந்த இரண்டு தொகுதிகளில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என காங்கிரஸ் பக்கம் கைகாட்டியதாக சொல்கிறார்கள். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏற்கெனவே போட்டியிட்ட தொகுதி திருப்பூர். ஆனால், அவரும் இந்தமுறை திருப்பூரை தவிர்த்து ஈரோட்டில் களமிறங்கும் முடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக ஈரோடு மாவட்ட திமுக நண்பர்களிடம் பேசிய அவர், “திருப்பூர் நிலைமை முந்தி மாதிரி இல்லை. இப்ப வட இந்தியர்கள் ஆதிக்கம் மும்மடங்கு பெருத்துப் போச்சு. அதனாலதான் ஈரோட்டுக்கு வந்துடலாம்னு பார்க்கிறேன்” என்றாராம்.

அதற்கு, “ஈரோட்டிலும் வடஇந்தியர்கள் நிறைந்து விட்டார்கள்” என்று தெரிவித்த திமுக நண்பர்கள், ஈரோட்டில் திமுக கூட்டணிக்கு சவாலான விஷயங்கள் குறித்து புள்ளி விவரங்களை அடுக்கினார்களாம். அதனால் இப்போது திருப்பூரா, ஈரோடா என்று முடிவெடுக்க முடியாமல் திரிசங்கு நிலையில் இளங்கோவன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய ஈரோடு காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், ‘‘காங்கிரஸுக்கு ரெண்டு தொகுதியில எதை ஒதுக்கினாலும் நிச்சயம் இளங்கோவனுக்கு ஸீட் கிடைக்காது. ஏனென்றால், எங்க கட்சியில் எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஸீட் இல்லை என முடிவெடுத்திருக்கிறார் ராகுல். அப்படியிருக்க எழுபது வயதைக் கடந்த அவருக்கு எப்படி ஸீட் கிடைக்கும்?”என்றார்.

இதுகுறித்து வேட்பாளர் பட்டியலுக்கான லிஸ்ட்டில் இருக்கும் திமுக தலைகள் அனைத்தும் கருத்துச் சொல்ல தயங்கிய நிலையில் மனதில் பட்டதைப் பளிச்செனப் பேசினார் ஈவிகேஸ்.  “திமுகவில் எந்த தொகுதியை எங்களுக்கு ஒதுக்குவாங்கன்னு தெரியலை. அப்படியே ஒதுக்கினாலும் எனக்கு கட்சித் தலைமை ஸீட் தரணும். ஆனா ஒண்ணு, நாடு முழுக்க மோடி எதிர்ப்பலை வீசிக்கிட்டிருக்கு. இதுல வட இந்தியர் என்ன... தென் இந்தியர் என்ன எல்லாருமே காங்கிரஸுக்கு ஓட்டுப் போட தயாராகிட்டாங்க. அதனால, திருப்பூர், ஈரோடு மட்டுமல்ல எல்லா தொகுதியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றிபெறும் பாருங்க” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்