வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை தொல் பழங்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம், மண்ணியல் காலம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். தொல் பழங்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் என நான்கு பிரிவுகளாக வரலாற்று ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர்.
பழைய கற்கால மனிதர்கள், காடுகளில், இயற்கைச் சூழலோடு தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டனர். அவர்களின் உணவுத் தேவைக்காக காட்டிலிருக்கும் விலங்குகளை வேட்டையாடினர். உணவுக்கான முக்கியத் தொழிலே வேட்டையாடுதலாக இருந்தது. இதற்காக அவர்கள் பயன்படுத்திய கைக்கோடரிகள், சுரண்டை ஆகிய கருவிகள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப அமைந்திருந்தது. தொல்லியல் ஆய்வின் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பழைய கற்கால மக்களின் அடுத்த வளர்ச்சியடைந்த நிலை, இடைக் கற்காலம் அல்லது நுண் கற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இவர்களும் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடுவதை பிரதானமாக கொண்டிருந்தனர். அதற்காக, அதிக அளவில் கல் ஆயுதங்களை பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் எனவும் அறியமுடிகிறது. குகைகளிலும், குகை போன்ற பாறைகளின் அடிவாரங்களிலும் இவர்கள் வாழ்ந்துள்ளனர். தங்களுடைய உணவைத் தேடி, விலங்குகளுடன் விலங்குகளாக காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிந்தனர். கல் ஆயுதங்களைத் தவிர, மற்ற உலோகங்களின் பலன் தெரியாத இவர்களின் காலத்துக்குப் பிறகு வாழ்ந்தவர்கள், புதிய கற்காலத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படுகின்றனர்.
புதிய கற்கால மனிதர்கள்!
புதிய கற்கால மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி வாழ்ந்தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்தனர். வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்ட நிலையில் இருந்து முன்னேறி, வேளாண்மை செய்யவும், அதில் கிடைக்கும் தானியங்களை உட்கொள்ளவும் பழகியிருந்தனர். விலங்குகளை வேட்டையாடிக் கொல்வதற்கு, கையில் பிடிப்பதற்கு வசதியாக கூர்மையான கருவிகளை உருவாக்கினர்.
கைக்கோடரி, கல் சுத்தி போன்ற கருவிகள் ,அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகை மக்கள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பெருங் கற்காலம்...
நான்காவது பிரிவைச் சேர்ந்த மக்கள் பெருங் கற்காலத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படுகிறது. இவர்களின் காலம் கி.மு. 3200-ல் தொடங்கி கி.மு.1500 வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இறந்தோரைப் புதைத்த இடத்தில் அல்லது அவர்கள் எலும்புகளை புதைத்த இடத்தைச் சுற்றிலும் பெரிய கற்களைக் கொண்டு சூழப்பட்ட கல்திட்டைகளை உருவாக்கினர். இவற்றை பெருங்கற்கால சின்னங்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் மலையின் உச்சியில் உள்ள சமமான பகுதிகளில் கல்திட்டைகள் காணப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மாவடப்பு, குழிப்பட்டி, கோடந்தூர் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் இவ்வகையான கல் திட்டைகள் அதிக அளவில் காணப்படுன்றன. இந்த கல்திட்டைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் இவை ஈமச்சின்னங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டுகள், நடுகற்கள், சுவடிகள் போன்ற சாசனங்கள் மூலம், இதன் வரலாறு அறியப்படுகிறது.
பலகை வடிவிலான பாறைக் கற்களால் இவை உருவாக்கப்பட்டு, சிறிய அளவிலான வீடுபோல அமைந்துள்ளது. மலைகளின் உச்சியில் உள்ள சமதளப்பரப்பில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. கல்திட்டைகளில் யாருடையது என்ற விவரங்கள் இல்லை. அந்தந்த இடங்களை வைத்து எந்த இனக் குழுவினர் வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
பக்கத்துக்கு ஒரு கல் பலகையை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பலகைக் கற்களை வைத்து, மேல்புறம் அகலமான பலகைக் கல்லை வைத்து இவை மூடப்பட்டுள்ளன. கல் திட்டையின் கிழக்குப் பக்கமுள்ள பலகைக் கல்லில் வட்ட வடிவில் இடுதுளை ஒன்று காணப்படுகிறது. `யு’ வடிவிலும் துளையிடப்பட்டுள்ளன.
இதேபோல, உடுமலை அடுத்த கொங்கல் நகரில் இரண்டு கல்திட்டைகளும், கோட்டமங்கலம் கிராமத்தில் இரண்டு கல்திட்டைகளும் காணப்படுகின்றன. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக தொல்லியல் ஆர்வலர் சதாசிவம் கூறும்போது, “கொங்கு மண்டலத்தில் அரிதாகத் தென்படும் பெருங்கற்கால சின்னமான கல்திட்டைகளைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை பண்டைய மக்களின் சான்றுகளாக உள்ளன. எனவே, அடுத்த தலைமுறையினருக்கு பெருங்கற்கால மனிதர்கள் பற்றிய ஆய்வுக்கு இவை பெரிதும் உதவும். இவற்றைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago