தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்ட நிலையில் மாயமான முகிலனை தேடும் பணியில் சிபிசிஐடி: காவல்துறை உளவு பிரிவு ஆய்வாளரிடம் ரகசிய விசாரணை

By இ.ராமகிருஷ்ணன்

சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயமானது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் கட்டமாக உளவு பிரிவு ஆய்வாளரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 10 பேருக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரணை நடத்த உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் துப்பாக்கிச் சூட்டையொட்டி கலவரச் சூழல் உண்டாக்கப்பட்டதில் போலீஸாருக்கு பங்கிருக்கிறது என்று குற்றஞ்சாட்டி அது தொடர்பான ஆதாரங்களை முன்வைக்கும் காணொளியைச் சென்னையில் செய்தியாளர்கள் முன்னிலையில் முகிலன் கடந்த 14-ம் தேதி வெளியிட்டார். மறுநாள் மதுரைக்குச் செல்ல எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த அவர் மாயமானார். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இந்நிலையில்தான் முகிலன் மாயமானது குறித்து எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில்தான் முகிலன் மாயமான வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

தனிப்படை விசாரணை

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சிபிசிஐடி பிரிவு காவல்துறை அதிகாரி செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக முகிலனின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டது. இதில், ஓவியரான இவர் சமூக, அரசியல் பிரச்சினைகளை ஓவியமாக திறம்பட வரையக்கூடியவர் என்றும் இடதுசாரி சிந்தனையாளர் என்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் என்றும் தெரியவந்தது. மேலும் இவர் ஏற்கனவே, 2 முறை மாயமாகி மீண்டு வந்தவர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகிலன் மாயமானது குறித்து சென்னை காவல்துறையில் உள்ள உளவு பிரிவு ஆய்வாளர் ஒருவரை நேரில் அழைத்தும் விசாரிக்கப்பட்டுள்ளது. அவர் சிலரது பெயரை தனிப்படை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதேபோல் முகிலனுடன் இணைந்து போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளவரும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஓரிரு நாளில் நேரில் வந்து ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

நண்பர்களிடம் விசாரணை

மேலும் முகிலனின் நெருங்கிய நண்பர்களாக கருதப்படும் முகவூர் விஸ்வநாதன், பொன்னரசன் ஆகியோரிடமும் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

முகிலன் மாயமான 15.02.2019 அன்று கடைசியாக பள்ளிக்கரணை சென்று அங்கு பெண் ஒருவரை சந்தித்துள்ளார். பின்னர், கூடுவாஞ்சேரி சென்று அங்கு மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த ஒருவரை சந்தித்து அவருடன் மதிய உணவு அருந்தியுள்ளார் என்றும் அதன் பின்னரே எழும்பூர் சென்றுள்ளதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் பின்னணி குறித்து விசாரிக்க இதில் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் விசாரணை நடத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

மேலும், முகிலனை கண்டுபிடித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக சமூக வலைதளங்களில் ‘சமாதி’ என பதிவிட்டதாக கூறப்படும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் விரைவில் முகிலன் தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என சிபிசிஐடி போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்