தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது திருச்சி மக்களவைத் தொகுதி. இந்தத் தொகுதியின் வெற்றி வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு அதிக பக்கங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் வேட்பாளராக அடைக்கலராஜ் 4 முறை வெற்றி பெற்றார். 2009-க்குப் பின்னர் இத்தொகுதி அதிமுக வசம் உள்ளது. திமுக ஒரே ஒரு முறை மட்டுமே திருச்சியில் வெற்றி பெற்றது. அது 1980-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்.
இத்தகைய சூழலில் திருச்சியை அதிமுக, கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கும், திமுக, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும் விட்டுக் கொடுத்துள்ளன.
இந்தத் தேர்தலில் கவனம் ஈர்த்துள்ள அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர், இரண்டு முறை திருச்சி மேயராக இருந்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர், இப்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் இல்லாவிட்டாலும்கூட, டிடிவி என்ற அடையாளத்தை வைத்தே தமிழகம் முழுவதும் வெற்றிகள் குவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் ‘இந்து தமிழ்திசை’க்குப் பேட்டியளித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தை வெகு சீக்கிரமாகவே தொடங்கினீர்களே.. மக்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது?
ஆமாம், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டேன். செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பு இருக்கிறது. திருச்சியில் ஏற்கெனவே இரண்டு முறை மேயராக இருந்துள்ளேன். அதனால், நான் மக்களிடம் அறிமுகமாகியுள்ளேன். இது எனக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
தேர்தல் வரலாற்றின்படி திருச்சி காங்கிரஸின் கோட்டையாக இருந்துள்ளது. உங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் நிற்கிறார். எப்படிப் பார்க்கிறீர்கள்?
அப்போது இருந்த காங்கிரஸ், இப்போது இல்லை. அதனால், திருநாவுக்கரசரைப் போட்டியாகப் பார்க்கவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நான், அதன்பின்னர் அதிமுகவில் சேர்ந்ததற்கு காரணமே காங்கிரஸின் பலவீனம்தான்.
விரும்பிச் சேர்ந்துவிட்டு, அமமுகவுக்கு ஏன் மாறினீர்கள்?
நான் மேயராக இருந்தபோதே 'அம்மா' என்னை அதிமுகவில் சேருமாறு அழைத்தார். அவர் மீதுள்ள ஈர்ப்பால்தான் அதிமுகவில் இணைந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் மறைந்துவிட்டார். அதன்பின்னர் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவு, டிடிவி தினகரன்தான் உண்மையான தலைவர் என்று அடையாளம் காட்டியது. அதனால், டிடிவி தினகரன் பக்கம் நிற்கிறேன்.
திருச்சியின் பிரதான பிரச்சினைகள் என்னென்ன?
இதை இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த ப.குமார்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஏர்போர்ட் ரன்வே விரிவாக்கம், தஞ்சை நெடுஞ்சாலை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்ற கோரிக்கைகள் இன்னும் பேப்பரில் மட்டுமே இருக்கின்றன. 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக 10 ஆண்டுகளாக டெல்லி சென்றவர் மக்களுக்காக செய்யாதவற்றை செய்து முடிப்பதே எனது இலக்கு.
நான் மேயராக இருந்தபோது ரயில்வே நிலத்தை கேட்டுப்பெற்று, மாநகராட்சி நிதியில் பேருந்து நிலையங்களை அமைத்தேன். ஆனால், நாடாளுமன்றம் வரை சென்றவரால் இன்னும் திருச்சிக்கு எதுவும் செய்ய இயலவில்லை.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர், புதுக்கோட்டை தனி மக்களவைத் தொகுதி என்ற அந்தஸ்தை இழந்திருக்கிறது. இது புதுக்கோட்டை மக்களின் அங்கலாய்ப்பாக இருக்கிறது. மீண்டும் அதனை தனி தொகுதியாக்க அதிமுக எம்.பி. முயற்சித்தாரா?
சின்னம் இல்லாதது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?
எங்கள் சின்னமே டிடிவி.தான். அவரை அடையாளப்படுத்திதான் நாங்கள் வாக்கு சேகரிக்கிறோம். அவரே எங்கள் சின்னமாக இருக்கும்போது, பயமென்ன வேண்டியிருக்கிறது? கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட சின்னத்துடன்தானே ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவரைப் போலவே எந்த சூழலிலும் நிதானமாக, அச்சமின்றி நின்று, வெற்றி பெறுவோம்.
சின்னம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு வந்தது முதல், அமமுக ஒரு விவாதப் பொருளாகியுள்ளது. இதுவே கட்சிக்கு 3% வாக்குகளை உறுதியாக்கிவிட்டது என்பேன்.
மேலும், இங்கு களத்தில் உதய சூரியன் சின்னமும் இல்லை, இரட்டை இலை சின்னமும் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்காக தொண்டர்கள் ஆற்றும் பணி வேறு, சொந்தக் கட்சிக்காக செய்யும் வேலை வேறு.
அமமுகவில் இருக்கும் தொண்டர்களில் 95% பேர் அதிமுகவினர்தான். அவர்கள் களத்தில் உற்சாகமாக தினகரனுக்காக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இதன் பலன், தேர்தல் முடிவின்போது தமிழகம் முழுவதும் தெரியும்.
நீங்கள் ஒரு பெண் வேட்பாளர். அதனால் மகளிர் ஓட்டு கிடைக்கும் என நினைக்கிறீர்களா?
அமமுகவைப் பொறுத்தவரை நாங்கள் பெரும் ஓட்டுகள் அனைத்துமே டிடிவி என்ற அடையாளத்துக்குத்தான். பெண் என்பதைவிட, டிடிவி கட்சியைச் சேர்ந்தவர் என்பதே எனக்கு மக்கள் ஆதரவை பெற்றுத்தரும் என்பேன். டிடிவி தினகரனுக்கு இளைஞர்களும் பெண்களும் ஆதரவாக உள்ளனர்.
தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago