சென்னை மாநகரம் திடக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு அடைய வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து குப்பைகளை 100 சதவீதம் வகை பிரித்து பெற சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 17 லட்சத்து 10 ஆயிரத்து 817 குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இவற்றிலிருந்து தினமும் 5 ஆயிரத்து 400 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அவை கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் அப்பகுதிகளில் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பே, குப்பைகளை வகை பிரித்து, உகந்த பொருட்களை மறுசுழற்சி செய்து, மிகக் குறைவான அளவிலான குப்பைகளை குப்பை கொட்டும் வளாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் சென்னை மாநகராட்சியில் குப்பைகளை வகை பிரித்து பெறுவது பெயரளவுக்கு மட்டுமே அமலில் உள்ளது. பொதுமக்கள் வகை பிரித்து வழங்கினாலும், அதை முறையாக கொண்டு செல்ல மாநகராட்சி நிர்வாகத்திடம் போதிய கட்டமைப்புகள் இல்லை. கடந்த இரு ஆண்டுகளாக மொத்த குப்பையில் சுமார் 4 சதவீத அளவிலேயே குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் திடக்கழிவு மேலாண்மை மோசமான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை தேசிய பசுமை தீர்ப்பாயமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சென்னையில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் தினமும் 2 ஆயிரத்து 322 டன் மக்கும் குப்பைகள், 3 ஆயிரத்து 78 மக்காத குப்பைகள் என மொத்தம் 5 ஆயிரத்து 400 டன் குப்பைகள் அகற்றப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளைக் கொண்டு, 176 மையங்களில் இயற்கை உரம் மற்றும் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மக்காத குப்பைகளில் மறுசுழற்சிக்கு உகந்தவற்றை வகை பிரித்து, நல்ல விலைக்கு விற்பனை செய்ய இருக்கிறோம். அந்த வருவாயை துப்புரவு தொழிலாளர்களுக்கே வழங்க இருக்கிறோம்.
பயிற்சி அளிக்க திட்டம்
வீடுதோறும் குப்பைகளை வகை பிரித்து பெறுவதில் சிறப்பு கவனம் செலுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, குடியிருப்போர் நலச் சங்கங்கள், பள்ளிக் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். குப்பை மேலாண்மை செய்வதில் பல தொண்டு நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. அவர்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்க இருக்கிறோம். அதில் அவர்களின் பணிகள் மற்றும் பொறுப்புணர்வு குறித்தும் விளக்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, அதிக அளவில் குப்பைகளை வெளியேற்றும் நட்சத்திர உணவகங்கள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கி, அவர்கள் உருவாக்கும் குப்பைகளை அவர்களே மக்கவோ அல்லது மறுசுழற்சியோ செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு செல்லும் குப்பைகளின் அளவு வெகுவாக குறையும்.
வீடுதோறும் குப்பைகளை வகை பிரித்து பெறுவதை மேம்படுத்த ரூ.1 கோடியே 29 லட்சம் செலவில் மிதிவண்டியில் வைத்து கொண்டு செல்லப்படும் 3 ஆயிரம் குப்பைத் தொட்டிகள், 300 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகள், 200 மூன்று சக்கர மிதிவண்டிகள், 390 சக்கரம் பொருத்தப்பட்ட குப்பைத் தொட்டிகள் ஆகியவை வாங்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் குப்பைகளை வகை பிரித்து பெறுவது முழுமை பெறுவதுடன், திடக்கழிவு மேலாண்மையிலும் தன்னிறைவடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago