புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை, அவர்களது நெருங்கிய உறவினர்களும், மருத்துவர்களும் மட்டுமே அறிவர். வாழ்வின் இறுதி நாட்களில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருக்கிறது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு கங்காபுரத்தில் அமைத்துள்ள `இமயம் புற்றுநோயாளிகள் காப்பகம்`.
முற்றிப்போன புற்றுநோயுடன், இனி காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள்தான் இமயம் காப்பகத்தில் சேர்க்கப்படுகின்றனர். நாளை இருப்போமா என்ற மன பாரத்துடன், கடும் வேதனையில் இருப்போருக்கு பணிவிடை செய்து, உணவு அளித்து, ஆறுதல் சொல்லி பார்த்துக் கொள்வது அசாதாரண பணி.
புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கும்போது, நோயாளிகள் படும் அவஸ்தை கொஞ்சம் நஞ்சமல்ல. நெருங்கிய சொந்தங்களே சகித்துக் கொள்ள முடியாமல் விட்டுச் செல்வோரை, தங்களது உறவுகளாய் கருதி நேசிக்கின்றனர் இந்த மையத்தின் பணியாளர்களான முருகன்-பூங்கொடி தம்பதி.
இது தொடர்பாக காப்பகத்தின் தலைவர் மருத்துவர் அபுல்ஹாசனிடம் பேசினோம். "இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே உள்ளது. பத்து மரணங்களில், இரண்டு அல்லது மூன்று புற்றுநோயால்தான் ஏற்பட்டது என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை. எனினும், அரசோ, மக்களோ இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
இந்தியாவில் ஏறத்தாழ 25 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 5.50 லட்சம் இந்தியர்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். புற்று நோயாளிகளில் 70 சதவீதம் பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படும்போது, அவர்கள் நோய் முற்றிய நிலையில் இருப்பது வேதனைக்குரியது.
தொழில் மயமாக்கம், நகரமயமான வாழ்க்கை, கொழுப்பு நிறைந்த உணவு வகைகள், மாசுபட்டு, நஞ்சாகிய குடிநீர், மாசுபட்ட காற்று, நஞ்சாகிவிட்ட உணவு உள்ளிட்டவை புற்றுநோய்க்கு காரணம் என்கின்றர் மருத்துவர்கள். அதேபோல, புகையிலைப் பழக்கமும் 50 சதவீத காரணமாக அறியப்பட்டுள்ளது.
1985-க்குப் பிறகு நோயின் தாக்கம் இரு மடங்கு அதிகமாகி விட்டதும், பெண்களில் 22 பேரில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்ற தகவலும் அச்சுறுத்துகின்றன. எனினும், எய்ட்ஸ், சர்க்கரை நோயைத் தீர்ப்பதில் காட்டும் அக்கறையை, புற்றுநோய் தாக்கத்தைக் குறைப்பதில் காட்டுவதில்லை என்பது வேதனைக்குரியது. புற்றுநோய்க்கான சிகிச்சையும் மாநிலத் தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. சுமார் 70 சதவீத நோயாளிகள், குணப்படுத்தவே முடியாத நிலையில் இருப்பதால், அவர்களது வீட்டுக்கு சுமையாகி விடுகிறார்கள். அவர்களது முடிவுக்கு உறவினர்கள் காத்திருக்கும் சூழல், நோயாளிகளின் மனதில் மிகப் பெரிய வேதனையை உண்டாக்கிவிடுகிறது.
எனவே, இத்தகைய நோயாளிகளின் இறுதி நாட்கள் குறைந்தபட்ச துன்பத்துடன் கழிய வேண்டும் என்பதற்காக மூத்த கண் மருத்துவர் சுகுமார், மருத்துவர் ராஜா உள்ளிட்டோருடன் இணைந்து இம்மையத்தைத் தொடங்கினோம். இமயம் அறக்கட்டளையின் நிர்வாகிகளாக நாங்கள் மூவரும் உள்ளோம்" என்றார்.
டாக்டர் சுகுமார் கூறும்போது, "புற்றுநோயின் இறுதிக்கட்ட நிலை மிகக் கொடுமையானது. மூச்சு இருக்கிறதா, இல்லையா என்பதைக்கூட அருகில் சென்று கவனித்தால் மட்டுமே தெரியும். உயிர் உள்ளபோதே, உடலில் ஈக்கள் மொய்ப்பதையும், புழுக்கள் அரிப்பதையும் பார்த்துள்ளேன். சில நேரங்களில் புற்றுநோயால் ஏற்படும் துர்நாற்றம், உற்றாரிடமிருந்து அவர்களை மேலும் தனிமைப்படுத்திவிடும்.
அப்படி குணப்படுத்த முடியாத, புற்றுநோயை சுமந்துகொண்டு கடைசி நாட்களை எதிர்நோக்கி வாழும் நோயாளிகளுக்காக 22 படுக்கை வசதியுடன், உணவு, உறைவிடம், மருந்து மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் இலவசமாக தந்து, அவர்களுக்கு மரியாதையான மற்றும் துன்பமில்லாத வாழ்வின் இறுதிப் பயணத்தை அமைத்துக் கொடுத்துள்ளது இந்த காப்பகம்" என்றார்.
அப்துல் கலாம் திறந்துவைத்த இந்த காப்பகத்தில், கடந்த 10 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்டோர் இறுதி நாட்களைக் கடந்துள்ளனர்.
"இந்த மையத்தில் குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு மட்டுமே அடைக்கலம் தரமுடிகிறது. எனவே, இதுபோன்ற பல மையங்கள் அமைய வேண்டும்" என்கிறார் டாக்டர் அபுல்ஹாசன்.
"குணப்படுத்த முடியாத நிலையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான மையங்களை, பல இடங்களில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புற்றுநோய் தடுப்புமுறைகள், ஆரம்பத்திலேயே கண்டறிவது மற்றும் விழிப்புணர்வுப் பணிகளில், அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, புற்றுநோயாளிகளின் நலனைக் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ல வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், சிகிச்சைகளுக்கும், நோயைக் குணமாகுவதற்கான விலையுயர்ந்த மருந்துகள் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். புற்றுநோய் கண்டறியும் முகாம்களை ஊக்குவித்து, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், முழுமையான புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைத் தொடங்க வேண்டும்" என்றார்.
எல்லோருக்கும் கிடைக்குமா விலை உயர்ந்த மருந்துகள்?
புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 75 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். நோயை குணமாக்கும் மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால், நல்ல சிகிச்சை அவர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. பல மருந்துகளின் விலை ஆயிரக்கணக்கில் உள்ளது. இந்த நிலையில், புற்றுநோயிடம் முதலில் தோற்பவர்கள் ஏழைகள்தான். அதேபோல, குழந்தைகள், இளைஞர்களையும்கூட இந்த நோய் விட்டுவைப்பதில்லை. நிறைய குழந்தைகள் பிறக்கும்போதே புற்றுநோயுடன் பிறக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தப் புற்றுநோய்க்கு நிறைய ஊசி மருந்துகள் உள்ளன. ஆனாலும், இவை சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த விலையில், மருந்து, மாத்திரைகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசால் 1971-ல் தொடங்கப்பட்ட தேசிய புற்றுநோய் தடுப்புக் கழகம், 1985-ல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. நாடு முழுவதும் 25 மண்டல புற்றுநோய் மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. தன்னார்வத் தொண்டு அமைப்புகள் புற்றுநோய் கண்டறியும் முகாம்களை நடத்தினால், ரூ.8,000 வழங்கப்படுகிறது. என்றாலும், இவையெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றவைதான். இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கவும், மருத்துவ சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் அரசு முன்வர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago