ரத்தமெல்லாம் தீப்பிடிக்கும் தாண்டவகோனே...!- பட்டையை கிளப்பும் பறை இசை

By ஆர்.கிருஷ்ணகுமார்

விலங்கு விரட்ட பிறந்த பறை, கை விலங்கு  ஒடிக்க ஒலிக்கும் பறை, கடைசி தமிழன் இருக்கும் வரை, காதில் ஒலிக்கும் பழைய பறை” என்று உரக்கப் பாடிக்கொண்டே, மாணவர்களுக்குப் பறை இசையைக் கற்றுத் தருகிறார் பறையிசைக் கலைஞரும், வீதிநாடகக் கலைஞருமான கோவை பிரபாகரன்(40).

மௌனத்தைப்போலவே இசையும் ஓர் அமைதிக்கான பாதை. அதனால்தான், கோயில்களில் மட்டுமல்ல, இந்துக் கடவுள்களின் கையிலும் மருகம், தாளம், சங்கு, வீணை, தம்புரா, மத்தளம் என பல வாத்தியங்கள். உலகின் ஆதி இசை மரபுகளில் முதலும், மூலமுமானது தமிழரின் இசை மரபு. குறிச்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு நிலத்துக்கும், தனித்துவமான இசையும், இசைக் கருவிகளும் இருந்துள்ளன. சிலப்பதிகாரம் நூற்றுக்கும் மேற்பட்ட பண்களைக் குறிப்பிடுகிறது. இந்தப் பண்களின் அடிப்படையில்தான் உலகமெங்கும் இசை இயங்குகிறது. தோலால் ஆன பறை ஒரு தமிழிசைக் கருவி. தொல்குடி தமிழ் சமூகத்தின் தொன்மையான அடையாளமாகவும், உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியமாகவும், தமிழர் வாழ்வியலில் அங்கமாகவும் விளங்குகிறது பறை.

சங்க இலக்கியங்களில் பறை!

பறை என்ற சொல் பறைதல், சொல்லுதல், உரைத்தல், அறிவித்தல் என்ற பொருள்களை உள்ளடக்கியது.  “திட்டைப்பறை, தொண்டகச் சிறுப்பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மண்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறைனு பலவகையான பெயர்கள்ல சங்க இலக்கியத்துல  பறையை குறிப்பிட்டிருக்காங்க. அரசர் காலத்தில் தகவல் பறிமாற்றம் செய்ய,  ஊர்மக்களை திரட்ட, விவசாயத் தொழிலாளர்களை ஊக்குவிக்க, விலங்குகளை விரட்ட, வழிபாட்டுல இசைக்க அப்படினு பல விஷயங்களுக்கு  பயன்படுத்தியிருக்காங்க.

ஆந்திரா, கர்நாடகா,  கேரளா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, அஸாம், மகாராஷ்டிரா, வங்காளம், ஓடிசா, மணிப்பூர், பூட்டான்னு இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள்ல, பல்வேறு வடிவங்கள்ல மக்களிடையே பறை பயன்படுத்தப்படுது. ஒரு கட்டத்தில, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாகவும், கருத்துகளை வெளிப்படுத்தவும், மக்களை அணிதிரட்டவும் பறை பயன்பட்டது. தமிழக சூழலில், தற்போது பறை இசைக்கான வரவேற்பும் பெரிதும் அதிகரிச்சிக்கிட்டு வருது” என்று கூறும் பிரபாகரன், நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கட்டபெட்டு பகுதியைச் சேர்ந்தவர்.

“அப்பா முனியாண்டி, அப்பா வள்ளியம்மாள்  ரெண்டு பேரும் எஸ்டேட் கூலிங்க. வீட்டுல கடைக்குட்டியான நான், கட்டபெட்டு அரசுப் பள்ளியில 12-ம் வகுப்பு வரை படிச்சேன். திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி.யும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகப் பணி பட்டமும் முடிச்சேன்.

பள்ளியில் தொடங்கிய ஆர்வம்

பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே, ஒரு குச்சியை, சிலேட்டுல அடிச்சிக்கிட்டே இருப்பேன். அப்புறம், சத்துணவு தட்டை இசைக் கருவியா பயன்படுத்தினேன். எங்கயாவது சாவு விழுந்தா, அங்க பறை இசைக்கறவங்களோட சேர்ந்து, நானும் இசைப்பேன். இதைப் பார்த்த வங்க, அப்பா-அம்மாகிட்ட சொல்லிட்டாங்க. ரெண்டுபேரும் வெளுத்துவிட்டாங்க. எவ்வளவு அடி வாங்கினாலும், என்னோட ஆர்வம் குறையல. கொஞ்சம் கொஞ்சமா நானே பறையை இசைக்கக் கத்துக்கிட்டேன்.

கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள்ல, பறை இசைக்கற போட்டியில கலந்துக்கிட்டேன். அப்பவே, சில பள்ளி மாணவர்கள் எங்கிட்ட வந்து, `பறை இசைக்க கத்துக் கொடுங்க’னு கேட்டாங்க. அவங்களுக்கு இலவசமாக கத்துக்கொடுக்கத் தொடங்கினேன். இப்ப வரைக்கும் 1,000 பேருக்குமேல பறை இசையை கத்துக்கொடுத்திருக்கேன்.

கல்லூரிப் படிப்பை முடிச்சவுடன், வேளாண்மைத் துறையில ஒப்பந்த அடிப்படையில சில பணிகளை மேற் கொண்டேன். விவசாயிங்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தறது, கள விளக்க முகாம்களுக்கு கூட்டிக்கிட்டுப் போறதுனு பல வேலைகளை செஞ்சேன்.

மாணவர்களுக்கு பயிற்சி

கடந்த 15 வருஷத்துக்கு மேலாக, பறை இசை நிகழ்ச்சிகளை நடத்தி வர்றேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு `விடியல் கலைக்குழு’னு ஒரு குழுவைத் தொடங்கினேன். ஆரம்பத்துல 8 பேர் இந்தக் குழுவுல இணைஞ்சாங்க. இப்ப 20-க்கும் மேற்பட்டவங்க குழுவுல இருக்காங்க. அரசுத் திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பறை இசைத்திருக்கிறோம். அதேபோல, பல்வேறு அமைப்புகள், இயக்கங்களுக்காகவும் பறை இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கோம்.

இப்பக்கூட, மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு இயக்கத்துக்காக நடக்கற கஜ யாத்திரை நிகழ்ச்சியில பறை இசைக்கிறோம். அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக பறை இசையைக் கத்துக்கொடுக்கிறோம். மாநிலம் முழுக்க 200-க்கும் மேற்பட்ட இடங்கள்ல பறை இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கோம்.ஒருகாலத்துல ஒடுக்கப்பட்ட மக்களின் இசையா மட்டுமே இருந்தது. ஆனா, இப்ப அதிக வரவேற்பு இருக்குது. சில இடங்கள்ல கல்யாணத்துக்குக்கூட பறை இசைக்க கூப்பிடறாங்க.

வீதி நாடகக் குழு 

அதேமாதிரி, 10-ம் வகுப்பு படிக்கும்போதே, வீதி நாடகத்துல நடிக்க ஆரம்பிச்சேன். டீ எஸ்டேட் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, அடிப்படை வசதி கேட்டு நாடகம் நடத்தினோம். ஒரு விஷயத்தை கலை வடிவில கொண்டுபோகும்போது நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்ந்து, பல்வேறு கருத்துகளை மையமாக வெச்சி, வீதிநாடகங்களையும் நடத்தியிருக்கோம். நானே நடிச்சி, டைரக்டும் பண்ணுவேன். 1996-ல நாடகக் குழுவையும் தொடங்கினோம்.

அய்யனார் வீதிங்கற சினிமாவுலயும் நான் நடிச்சிருக்கேன். ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு வீதி நாடக நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்திருக்கோம். தமிழ்நாடு முழுக்கப் போய் இதுவரைக்கும் 50-க்கும் மேல வீதிநாடகங்களை நடத்தியிருக்கேன். அதேமாதிரி, கல்லூரிகள்ல விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு, நடிப்புக் கலை பத்தி வகுப்புகளும் நடத்தியிருக்கேன். எங்க நாடகம் 10 நிமிஷத்துல இருந்து அதிகபட்சம் அரை மணி நேரம் மட்டும்தான் இருக்கும். அதுலயே, பாடல், ஆடல் எல்லாம் இருக்கும். சில அமைப்புகள், குறிப்பிட்ட நோக்கங்களை மையமாக வெச்சி வீதிநாடகம் நடத்தறாங்க. ஆனா, நாங்க பொதுவான தளத்துல இயங்கறோம்.

2013-14-ம் வருஷத்துல கலை, பண்பாட்டுத் துறை சார்பா `கலை வளர் மணி’` விருது கொடுத்தாங்க. பல்வேறு கலைஞர்களுக்கு அரசு சார்பில் விருது கொடுத்து ஊக்குவிக்கறாங்க. அதேமாதிரி, பறை இசைக் கலைஞர்களுக்கும் விருது கொடுக்கணும். இது பறை இசையைப் பாதுகாக்க உதவியா இருக்கும். கல்வியை கலை மூலமா கொண்டுபோக முயற்சிக்கணும். ஒரு பாடத்தை கலை வழியாக கொண்டுபோனா, மாணவ, மாணவிகளுக்கு நல்லா புரியும். இந்த எளிமையான முறையை பள்ளிகள்ல அமல்படுத்தணும்.

2004-லேயே ஊட்டியில இருந்து கோவைக்கு வந்துட்டேன். இப்ப, சின்னவேடம்பட்டியில குடியிருக்கோம்.  என்னோட மனைவி ஜோதிமலர். ஆரம்பத்துல பறை இசைக்கறது அவங்களை சங்கடப் படுத்துச்சி. அப்புறம், பல இடங்களுக்குக் கூட்டிக்கிட்டுப் போய், பறை இசைக்கு உள்ள வரவேற்பை சுட்டிக்காட்டினேன். அப்புறம் அவங்க ஒத்துக்கிட்டாங்க. இரட்டைக் குழந்தைங்க அமுதன், இனியன். ரெண்டு பேருக்கும் 10 வயசாகுது.  இப்பவே ரெண்டுபேரும் பறை இசைக்கறாங்க” என்றார் பெருமிதத்துடன்.

வாய் திக்கினாலும் பாட்டு திக்குவதில்லை..

“கடந்த 6 வருஷத்துக்கு முன்னாடி, திடீர்னு வாய் திக்க ஆரம்பிச்சது. ஏதாவது அடிபட்டிருக்கும், அதனோட விளைவுதான் இதுனு ஆஸ்பத்திரியில சொன்னாங்க. அதுக்கு சிகிச்சை எடுத்துக்கிட்டிருக்கேன். பேசும்போது கொஞ்சம் திக்கினாலும், பாடும்போது எந்தப் பிரச்சினையும் இல்லை.

பறை இசையும் இப்ப கொஞ்சம் கமர்ஷியல் ஆகிட்டு வருது. இது சரியில்லை. அடுத்த தலைமுறை குழந்தைகள்கிட்ட பறை இசையை கொண்டுபோய் சேத்து, இந்தக் கலையை வேர்விட்டுத் தழைக்கச் செய்யணும். ஆரம்பத்துல நான் எல்லோருக்கும் இலவசமாகத்தான் பறை இசை கத்துக்கொடுத்தேன். ஆனா, இலவசம்ங்கறதால அலட்சியம் காட்டினாங்க. அதனால், இப்ப கம்மியான கட்டணத்துல வகுப்புகள் நடத்தறேன். நிச்சயமா பறை இசையும், தெரு நாடகமும் மக்கள்கிட்ட பெரிய வரவேற்பு பெறும்” என்றார் பிரபாகரன் நம்பிக்கையுடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்