மாநகர எல்லையைத் தாண்டி இயக்கப்படும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான குளிர்சாதனப் பேருந்துகளில், 3 வயது குழந்தைகளுக்கு முழுக் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளை 24 கி.மீ தூரம் வரை மட்டுமே இயக்க வரையறை செய்யப்பட்டு இருந்தது. மாநகர எல்லை கடந்த 2011-ல் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்குவதற்கான தூரம் 50 கி.மீ வரை நீட்டிக்கப்பட்டது.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தற்போது குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை 50 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்க வேண்டும். ஆனால் அவற்றுக்கு வகுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, சுமார் 70 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக உள்ள காஞ்சிபுரம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு நபருக்கு கட்டணமாக சுமார் ரூ.100 வசூலிக்கப்படுகிறது. 3 வயதைக் கடந்த 130 செ.மீ. உயரத்துக்கு குறைவான குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் வசூலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து மாநகர குளிர்சாதனப் பேருந்தில் சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பயணித்த பயணி ஒருவர் கூறும்போது, ‘எனது குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்புதான் 3 வயது நிறைவடைந்தது. இக்குழந்தைக்கு அரைக் கட்டணம் வழங்க பேருந்து நடத்துனர் மறுத்தார். இப்பேருந்தில் அரைக் கட்டணம் இல்லை என்று அவர் கூறினார்.
ஆனால் மாநகரப் பேருந்துக்கான கட்டண விதிகளின்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் அரைக் கட்டணம் இல்லை என்கின்றனர். இதனால் எனது குழந்தைக்கு ரூ.100 கட்டணம் செலுத்த நேர்ந்தது. இப்பேருந்துகள் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டியும் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும். எல்லையைத் தாண்டினால், மாநகரப் பேருந்து கட்டண விதிகளை பின்பற்றக்கூடாது. இந்த பேருந்துகளில் அரைக் கட்டணம் கொண்டுவரப்பட வேண்டும்’ என்றார். மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல கோடி ரூபாய் செலவிட்டு குளிர் சாதனப் பேருந்துகளை வாங்குகிறோம். இப்பேருந்துகளை மாநகர எல்லைக்குள் மட்டுமே இயக்கினால் வருவாய் ஈட்ட முடியாது. அதனால் சென்னைக்கு அருகே உள்ள நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. இப்பேருந்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படுவதால் மாநகரப் பேருந்துக் கட்டண விதிகளின் படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநகரப் பேருந்துகளில் அரைக் கட்டணம் கிடையாது. அதேபோல மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், அதன் விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்படும் குளிர்சாதனப் பேருந்திலும் அரைக் கட்டணத்தை வழங்க முடியாது என்றார்.
மாநகரப் போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிற்சங்க துணைத் தலைவர் எம்.சந்திரன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விரைவுப் பேருந்துகள், ஏசி பேருந்துகள் உள்ளிட்டவற்றில் அரைக் கட்டணம் அமலில் உள்ளது. மாநகர குளிர்சாதனப் பேருந்துகள் எல்லையைத் தாண்டி இயக்கப்படும் நிலையில், அரைக் கட்டணம் வழங்க மறுப்பது தவறு என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago