அந்தக் காலத்துல நாங்க பாக்காத காசா...என்று யாராவது ஆரம்பித்தால் கொஞ்சம் எரிச்சல் வரும். "ரூபாய் மதிப்பே நாளுக்கு நாள் சரிஞ்சிக்கிட்டு வருது. பணத்துக்கு மதிப்பே இல்லை. நீங்க வேற அந்தக் காலம்னு தொடங்கிடாதிங்க" என்று பதில் கூறி, பேசத் தொடங்கிய நபரை வாயடைக்கச் செய்வோம். ஆனால், நமது வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை தெரிந்துகொள்வதில் நாணயங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கிறது தெரியுமா?
`இன்றைய செய்தி, நாளைய வரலாறு' என்பார்கள். அதனால்தான் செய்திகளும், தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன. `கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி` என்று தமிழ்க் குடிகளைப் பற்றி உயர்வாகக் கூறினாலும், நமது பண்டைய வரலாறு பெரிய அளவுக்கு பதிவு செய்யப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. என்றாலும், தொல்லியல் ஆய்வாளர்கள் பெரிதும் முயன்று, நமது வாழ்வியலை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். பொதுவாக, வரலாற்றைத் தெரிந்துகொள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், வெளிநாட்டுப் பயணக் குறிப்புகள்தான் பெரிதும் உதவுகின்றன. நாணயங்கள் மூலம் பல்வேறு தகவல்கலையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
அருங்காட்சியகங்கள் துறையின் முயற்சி
இதனால்தான், அரசு அருங்காட்சியகத் துறை, பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடையே நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு கருத்தரங்குகள், கண்காட்சிகள், பயிலரங்குகளை நடத்துகின்றன. கோவை அரசு அருங்காட்சியகம் சார்பில் அருங்காட்சியகத்தில் நாணயங்கள் புகைப்படக் கண்காட்சியும், நிர்மலா மகளிர் கல்லூரியில் இந்திய நாணயங்களின் வளர்ச்சி குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சி.சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், சென்னை அரசு அருங்காட்சியகத்தின் நாணயவியல் பிரிவு காப்பாட்சியர் ந.சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். "நாணயங்கள் தோன்றிய வரலாற்றை சொல்லுங்களேன்?" என்று அவரிடம் கேட்டோம்.
முத்திரை நாணயங்கள்!
பண்டமாற்று முறை பிரதானமாக இருந்த காலகட்டத்தில், கி.மு. 5, 6-ம் நூற்றாண்டுகளில் லிடியா, பெர்ஷியா பகுதிகளில் நாணயங்களின் பயன்பாடு தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானத்தில் `சதமானா' என்ற பெயரில் நாணயம் வெளியாகியுள்ளது. கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரை மகதப் பேரரசு, அசோகப் பேரரசு காலத்தில் முத்திரை நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வட இந்தியாவில் கி.பி. 1-ம் நூற்றாண்டுடன் முத்திரை நாணயப் பயன்பாடு நின்றுவிட்டாலும், தமிழகத்தில் கி.பி. 3, 4-ம் நூற்றாண்டுகள் வரை முத்திரை நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முத்திரை நாணயங்களில் சூரியன், சந்திரன், மரம், நட்சத்திரம், ஆமை என இயற்கையைக் குறிக்கும் உருவங்கள் முத்திரையாக இருக்கும். ஒவ்வொரு முத்திரைக்கும் தனித்தனி அச்சுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
சங்க காலத்தில் சதுர வடிவிலான நாணயங்களும் இருந்துள்ளன. சேர, சோழ, பாண்டியர்கள் நாணயத்தின் ஒருபுறத்தில் வில், அம்பு, புலி, மீன் போன்ற சின்னங்களையும், மறுபுறத்தில் யானையின் உருவத்தையும் பொறித்துள்ளனர். சில நாணயங்களில் `கொல்லிப்புரை, குட்டுவன் கோரை, மாக்கோதை` என்றெல்லாம் பிராமி எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கோவையில் ரோமானிய நாணயங்கள்
தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலமாகவே பல்வேறு நாணயங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் ரோமானியர்கள் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு வைத்து, மிளகு, சந்தனம், முத்து மற்றும் பல்வேறு வாசனைப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் ரோமானிய காசுகள் கிடைத்துள்ளன.
சங்க காலம் முடிந்த பின்னர் ஈயக் காசுகள் பயன்படுத்தப்பட்டன. அவை ஆண்டிப்பட்டியில் கிடைத்துள்ளன. அந்த நாணயங்களில் `அதின்னன் எதிரான் சேந்தன்' என பிராமி எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் நாணயங்களில் கப்பல் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சோழர்களுக்கு முன்னரே கடல் வணிகம், கடற்படையில் பல்லவர்கள் வல்லவர்களாக இருந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தீர்க்க பல்லவர்கள் கப்பல் படையுடன் சென்று, அரசுரிமையை மீட்டுக் கொடுத்துள்ளனர். இதற்குச் சான்றாகவே பல்லவர்கள் கப்பல் சின்னம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.
ராஜராஜனும், ராஜேந்திரனும்...
பாண்டியர்கள் காலத்து நாணயங்களில் மீன் சின்னமும், சுந்தரபாண்டியன் போன்ற பெயர்களும் உள்ளன. `சோழவள நாடு சோறுடைத்து` என்ற பெருமைக்குரிய சோழர் ஆட்சியில், ராஜராஜசோழன் கால நாணயங்களில் `ஸ்ரீராஜராஜ' என்ற எழுத்தும், ராஜாவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. தங்க, வெள்ளி நாணயங்கள் அரிதாகவே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், செப்பு நாணயங்கள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளன. ராஜேந்திர சோழன் வெளியிட்ட வெள்ளி நாணயத்தில், `கங்கை கொண்ட சோழன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று பேரரசுகளையும் அவர் வென்றதால், சேர, சோழ, பாண்டிய சின்னங்கள் அவரது நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் ஆட்சிக் காலத்தில்தான், முதல் முறையாக நாணயத்தை அச்சடித்த இடம், ஆண்டு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியாளர் பெயரும், ‘கலிமா’ வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. விஜயநகரப் பேரரசுக்கு முன்புவரை தமிழக நாணயங்களில் கடவுள்களின் உருவங்கள் அச்சிடப்படவில்லை. விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் கிருஷ்ணன், விஷ்ணு, சிவ-பார்வதி, அனுமான், கருடன், சங்குசக்கரம் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தங்கம், தாமிரக் காசுகள்தான் அப்போது புழக்கத்தில் இருந்துள்ளன. அவர்களது தலைநகரான ஹம்பியில் வைரங்களை காய்கறிகள்போல கூறுகட்டி விற்றுள்ளனர். மைசூர் உடையார் ஆட்சியிலும் ராஜாவின் படமும், சிவ-பார்வதி உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. திப்பு ஆட்சியில் பாரசிக எழுத்துகளில், `மௌலூதி' ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளின் வருகை!
நாணயங்கள் அச்சிடும் உரிமையை இஸ்லாமிய, இந்து மன்னர்களிடமிருந்து பெற்ற பிரிட்டிஷ்காரர்கள், சென்னையில் நாணய சாலையை நடத்தியுள்ளனர். இதேபோல, ப்ரெஞ்சு, டச்சு, டேனிஷ்காரர்களும் தனித்தனியே நாணயங்களை அச்சடித்துள்ளனர். 1,700-களின் இறுதியில்தான் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்தன. பேங்க் ஆஃப் மெட்ராஸ் அச்சடித்த ரூபாய் நோட்டுகளில் தமிழ் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் காகிதத்தின் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. இரண்டரை ரூபாய் நோட்டுகூட அச்சடித்துள்ளனர். நாணயங்கள் மூலம் பண்டைய வரலாறு,
பண்பாடு மட்டுமின்றி, பொருளாதாரம், ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்" என்றார்.
நாணயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது ஒருபுறம்; நாணயம் மிக்கவராக வாழ்வது குறித்தும் இளையதலைமுறை தெரிந்துகொள்வது அவசியமே!
நாணயசாலையின் பிரத்தியேக குறியீடுகள்...
"இந்தியாவில் தற்போது மும்பை, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தாவில் நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. ஹைதராபாத்தில் அச்சிடும் நாணயத்தில் ஸ்டார் உருவமும், மும்பை நாணயத்தில் டைமண்டு, டெல்லி நாணயத்தில் சிறுவட்டம் என பிரத்தியேக நாணயசாலை குறியீடுகள் அச்சிடப்பட்டிருக்கும். மகாராஷ்டிர மாநிலம் நாசிக், கர்நாடக மாநிலம் மைசூரூ, மேற்கு வங்க மாநிலம் சல்போனி, மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் ஆகிய இடங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.
சிலர் பழங்கால நாணயங்களின் அருமை தெரியாமல், அவற்றை உருக்கி விடுகின்றனர். பழைய தங்க நாணயங்களைக் கொடுத்து, நகைகளை வாங்கிக் கொள்ளும் `காசு கடைத் தெரு' இருந்துள்ளது. பழங்கால நாணயங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அருங்காட்சியகங்கள் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என்றார் ந.சுந்தரராஜன்.
படங்கள்: ஜெ.மனோகரன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago