பாரதிராஜாவின் `கிழக்கே போகும் ரயில்` படத்தில் ரயிலுக்காக காத்திருப்பாள் பாஞ்சாலி. இறுதியில் அந்த ரயிலில் ஏறிக்கொண்டு, விடியலை நோக்கிப் பயணிப்பார்கள் அத்திரைப்படத்தின் நாயகனும்-நாயகியும். நிஜத்தில், வட மாநிலங்களுக்கு கூடுதல் ரயில்கள் செல்லுமா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் பயணிகள்.
ஒரு நாட்டின் போக்குவரத்தில் முதலிடம் பெறுவது தரைவழிப் போக்குவரத்தான சாலை மற்றும் ரயில் போக்குவரத்துதான். தொழில் வளர்ச்சியிலும் இவற்றுக்கு முக்கியப் பங்குண்டு.
முன்பெல்லாம் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டுவிட்டது. எனினும், ரயில்வே துறைக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான வரவு, செலவினங்கள் கணக்கிடப்படுவதுடன், புதிய ரயில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் இடம் பெறும்.
மேற்கு மண்டல மக்களின் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கடந்த 2007-ல் புதிதாக சேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், புதிதாக ரயில்கள் இடக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டன. எனினும், எந்த பெரிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பதும், கடந்த 12 ஆண்டுகளில் சொற்ப அளவிலேயே புதிய ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட மற்ற கோட்டங்களைக் காட்டிலும், சேலம் கோட்டத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படுவது குறைவுதான் என்கின்றனர் ரயில் பயணிகள். குறிப்பாக, சேலத்திலிருந்து டெல்லிக்கு ‘கொங்கு எக்ஸ்பிரஸ்’ என்ற ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ரயில் பயணிகள் வழிகாட்டிகள் நலச்சங்கத் தலைவர் எஸ்.சிவக்குமார் கூறும்போது, "தெற்கு ரயில்வேயில் திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், மதுரை, திருச்சி, சென்னை ஆகிய ரயில்வே கோட்டங்கள் உள்ளன. 2007-ல் பாலக்காட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக தொடங்கப்பட்டது சேலம் ரயில்வே கோட்டம். பெயருக்கு புதிய கோட்டமாக தொடங்கப்பட்டதே தவிர, குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
சேலம் கோட்டத்தின் தலைமையிடமான சேலத்திலிருந்து சேலம்-சென்னை-மும்பை தாதர் வரை, ஒரு ரயில் மட்டுமே வட மாநிலத்துக்கு இயக்கப்படுகிறது. தலைநகரான டெல்லிக்கே ஒரு வாராந்திர ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.
இது, ஞாயிற்றுக்கிழமை கோவையிலிருந்து புறப்பட்டு, பல்வேறு மாநிலங்கள் வழியாக செவ்வாய்க்கிழமை டெல்லியை அடைகிறது. பின்னர், அங்கிருந்து புறப்பட்டு கோவைக்கு வருகிறது. இதைத்தவிர, வேறு எந்த ரயிலும் நேரடியாக சேலம் ரயில்வே கோட்டத்திலிருந்து டெல்லிக்கு இயக்கப்படுவதில்லை.
மற்றபடி, சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கோவையிலிருந்து கோவை-ஜெய்ப்பூர், கோவை-ராஜ்கோட், கோவை-ஜபல்பூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கொங்கு மண்டலத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வெள்ளி ஆபரணங்கள் தயாரிப்பு, லாரி, முட்டை, ஜவுளித் தொழில் என பல்வேறு தொழில்கள் கணிசமான அளவு மேற்கொள்ளப்படுகிறது.
தினமும் ஏராளமானோர் வட மாநிலங் களுக்கும், டெல்லிக்கும் தொழில், கல்வி, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக செல்கின்றனர். வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமெனில், பெங்களூரு சென்று, அங்கிருந்துதான் செல்ல வேண்டும். இல்லையெனில் சென்னையிலிருந்து செல்ல வேண்டும். எனவே, சேலத்திலிருந்து வட மாநிலங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்க வேண்டும்.
மேலும், ஷீரடிக்கு ஏராளமான பக்தர்கள் செல்வதால், தினமும் சேலத்திலிருந்து ரயில் இயக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்துக்கு சேலத்திலிருந்து நேரடி ரயிலே இல்லை.
எனவே, சேலம், கோவையிலிருந்து புதுச்சேரிக்கும் ரயில்கள் இயக்க வேண்டும். நிறுத்தப்பட்ட சேலம்-சென்னை பகல் நேர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சேலம் வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் செல்கின்றன. எனினும், பாலக்காட்டிலேயே இருக்கைகள் நிரம்பி விடுவதால், கொங்கு மண்டலத்திலிருந்து செல்வோருக்கு இடம் கிடைப்பதில்லை. மேலும், சேலம் கோட்டத்துக்கு வருவாயும் பாதிக்கப்படுகிறது. சேலத்திலிருந்து அதிக அளவிலான ரயில்களை இயக்கினால்மட்டுமே, இக்கோட்டத்துக்கு வருவாய் கிடைக்கும். அதன்மூலம், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு பணிகளை மேற்கொள்ள இயலும்" என்றார்.
சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறும்போது, "சேலம் கோட்டத்திலிருந்து வட மாநிலங்களுக்கு 10 ரயில்கள் இயக்கப் படுகின்றன. இதேபோல், 'கொங்கு எக்ஸ்பிரஸ்' போன்ற வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. புதிய ரயில்களை இயக்குவது தொடர்பாக ரயில்வே தலைமையகம்தான் முடிவெடுக்க முடியும்" என்றனர்.
சென்னை-எக்மோர் ரயிலை கரூர் வரை நீட்டிக்க வலியுறுத்தல்
நாமக்கல் மாவட்டம் மோகனுார் ரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகி கே.முருகன் கூறும்போது, "சேலத்திலிருந்து வட மாநிலங்களுக்கு அதிக ரயில்கள் இயக்கப்படுவதில்லை. பிற கோட்டங்களில் இருந்து சேலம் வழித்தடம் வழியாக மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, சேலத்திலிருந்து வட மாநிலங்களுக்கு அதிக ரயில்களை இயக்க வேண்டும்.
அதேசமயம், சேலத்திலிருந்து சென்னை எக்மோருக்கு இயக்கப்படும் ரயிலை, கரூர் வரை நீட்டிக்க வேண்டும். சேலம்-கரூர் ரயில் திருச்சி வரை செல்கிறது. இந்த ரயிலை காலை, மாலை வேளைகளில் இயக்கினால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago