‘இந்து தமிழ்’ செய்தி அடிப்படையில் வழக்கு: மாணவியின் கல்விக் கட்டணத்தை திருப்பி அளித்த தனியார் கல்லூரி

By க.சக்திவேல்

‘இந்து தமிழ்’ செய்தி அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக கல்லூரியில் சேர்ந்து சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்விக் கட்டணத்தை தனியார் பொறியியல் கல்லூரி திருப்பி அளித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தொடங்கும்போதே அந்த கல்வியாண்டுக்கான முழு கட்டணத்தையும் வசூலித்து விடுகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் வேறு படிப்புக்கு விண்ணப்பித்து அந்த படிப்புக்கு இடம் கிடைத்துவிட்டால், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்தச் சூழலில், மாணவர்கள் வெளியேறினால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை பல கல்லூரிகள் திருப்பி அளிக்க மறுப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த வெம்பாக்கத்தைச் சேர்ந்த எம்.என்.ராமன் செங்கல்பட்டு நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் , “எனது மகளை ரூ.67,000 செலுத்தி ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்தேன். வகுப்புகள் தொடங்கிய 6 நாட்களில், எனது மகளுக்குதனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்பிறகு, எனது மகள் பொறியியல் கல்லூரிக்கு செல்லவில்லை. எனவே, ஓராண்டு கல்வி கட்டணமாக செலுத்திய தொகையை திருப்பி அளிக்கும்படி கல்லூரிக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், அவர்கள் ரூ.22 ஆயிரத்தை மட்டுமே திருப்பி அளித்தனர். எனவே, முழுதொகையையும் திருப்பி அளிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

யுஜிசி அறிவிப்பு

இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு நுகர்வோர் குறைதீர்மன்றம், “தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘வகுப்புகள் தொடங்கிய பிறகு ஒரு மாணவர் வெளியேறினால், கல்லூரியில் பயின்ற நாட்களுக்கான பிடித்தம்போக மீதி கல்வி கட்டணத் தொகையை வெளியேறும் மாணவருக்கு திருப்பி அளிக்க வேண்டும்’ எனபல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, மனுதாரர் கோரிய மீதித் தொகையை வட்டியுடன் கல்லூரி நிர்வாகம் திருப்பி அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

‘இந்து தமிழ்’ உதவி

இந்த உத்தரவு ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 2017 ஜூலை 2-ம் தேதி வெளியானது. இதைப் பார்த்த சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த நளினி கிருஷ்ணமூர்த்தி என்ற வாசகி ‘இந்து தமிழ்’ அலுவலகத்தை தொடர்புகொண்டு, ‘எங்கள் மகளுக்கும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, எப்படி வழக்கு தொடர்ந்து கல்விகட்டணத்தை திரும்பப் பெறுவது என்ற வழிகாட்டுதலை அளிக்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இதையடுத்து, திருச்சியைச் சேர்ந்த தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு மூலம் இலவச சட்ட உதவியை ‘இந்து தமிழ்’ செய்துகொடுத்தது.

பின்னர், திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் மாணவி கே.கே.கீர்த்தனாவின் தாய் நளினி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், “திருவள்ளூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2016 ஜூலை 11-ம் தேதி கவுன்சலிங் மூலம் எனது மகளை சேர்த்தோம். அப்போது, முதலாம் ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.1.02 லட்சம் பெற்றுக்கொண்டனர்.

பின்னர், ஆகஸ்ட் 23-ம் தேதி எனது மகளுக்கு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. எனவே, நாங்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

சமரச பேச்சுவார்த்தை

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மனுதாரருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்திய தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம், கட்டணத்தை திருப்பி அளிக்க ஒப்புக்கொண்டது. அதன்படி, கல்விக் கட்டணமாக செலுத்தப்பட்ட ரூ.1.02 லட்சத்தோடு, வழக்கு செலவாக ரூ.5 ஆயிரத்தை கல்லூரி நிர்வாகம் மனுதாரருக்கு நேற்று வழங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்