விமான நிலையத்தைப் போல எழில்மிகு தோற்றத்துடன் உலகத் தரத்தில் அமையும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்: ஒரே வளாகத்தில் புறநகர், மாநகர், தனியார் ஆம்னி பஸ்களை இயக்கும் வசதி

By டி.செல்வகுமார்

சென்னை அருகே கிளாம்பாக்கத் தில் விமான நிலையத்தைப் போல உலகத் தரத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் நவீன தொழில்நுட்பத்தில் பிரம் மாண்டமாக கட்டப்படுகிறது.

சென்னை மாநகர் மக்கள் தொகை 80 லட்சம். தினசரி வந்து செல்வோர் 20 லட்சம். மொத்தம் ஒரு கோடி பேரின் சாலை, குடிநீர் போன்ற அடிப் படைத் தேவைகளுடன் பொதுப் போக்குவரத்தையும் மேம்படுத்த வேண்டியதிருக்கிறது. சென்னை கோயம்பேட்டில் தெற்கு ஆசியாவிலே மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையம் செயல்படுகிறது. அண்மையில் மாதவரத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அங்கிருந்து ஆந்திர மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம் காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 44.75 ஏக்கரில் ரூ.394 கோடியில் தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் புழங்கும் வகையில் விமான நிலையத்தின் தரத்துக்கு ஈடாக புதிய புறநகர் பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது. இதற்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார்.

கோயம்பேட்டில் அரசு புறநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு தனித்தனியாக பேருந்து நிலையங்கள் உள்ளன. ஆனால், கிளாம்பாக்கத்தில் அரசு புறநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகள் என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. எழில்மிகு தோற்றம் மட்டுமல்லாமல், அனைத்து வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுரஅடியில் நவீன தொழில்நுட்பத்தில் இரண்டு அடித்தளங்கள், தரைதளம், முதல்தளம் என கட்டுமானப் பணிகள்தொடங்கியுள்ளன. முதல் அடித் தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் இரண்டாவது அடித்தளத்தில் 84 கார்கள், 2,230 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் இருக்கும். தரைதளம் மற்றும் முதல்தளத்தில் பயணிகளுக்கான வசதிகளும் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட போக்குவரத்துப் பணி யாளர்களுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.

தரைதளத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற் கான பகுதி, 49 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள், 20 பயணச்சீட்டு வழங்குமிடங்கள், மருத்துவ மையம், மருத்துவமனை, தாய்ப் பால் ஊட்டும் அறை, ஏடிஎம் மையம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்களைக் கண்காணிக்கும் அறை, தரைதளத்தின் பல்வேறுபகுதிகளில் ஆண், பெண் கழிப் பறைகள், 34 சிறுநீர் கழிப்பிடம், 74 முகம் கழுவுமிடம் ஆகியன கட்டப்படுகின்றன.

முதல் தளத்தில் 100 ஆண்கள், 40 பெண்கள் தங்குமிடம், 340ஓட்டுநர்கள் தங்குமிடம், 35 கடைகள், கழிப்பிடம் ஆகியன இடம்பெறுகின்றன. ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை முறையில் இந்த புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் மின்சாரம், சுகாதாரம், தீ தடுப்பு, காற்றோட்டம் ஆகிய வசதிகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 14 ஏக்கரில் பேருந்துகள் நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. இந்த இடத்தில் ஒரேநேரத்தில் 130 அரசுப் பேருந்துகளும், 85 தனியார் ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்படும். இப்புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு மற்றும் நகரின் முக்கியமான பகுதிகளுக்குச் செல்ல வசதியாக 5 ஏக்கரில் மாநகரப் போக்குவரத்து நிலையமும் 3,500 மாநகரப் பேருந்துகள் வந்து செல்ல மேற்கூரையுடன்கூடிய நடைமேடையும் அமைக்கப் படுகிறது. மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்து நிலையம் செல்ல லிப்டுகள், நகரும் படிக்கட்டுகள் வசதி செய்யப்படுகிறது.

18 மாதத்தில் கட்டி முடிக்கப்படும்

எரிபொருள் நிரப்பும் நிலையம், புறக்காவல் நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், துணை மின்நிலையம் என அனைத்து வசதிகளும் ஒருங்கே அமைக்கப்படுகிறது. “இப்பேருந்து நிலையத்தை ஈரோடு ஒப்பந்ததாரர் அடுத்த 18 மாதங்களில் கட்டி முடிப்பார்” என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பேருந்து நிலைய வளாகத்தின் நான்கு புறமும் பசுமையான சூழல் ஏற்படுத்துவதுடன், இங்கிருந்து வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடை கிரகிக்கும் வகையில் ஏராளமான மரங்கள், செடிகள் நடப்படுகின்றன. பேருந்துகளை நிறுத்தி வைக்கவும் எதிர்கால மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் 15 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.

“வண்டலூரில் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.150 கோடியில் தனியாக மேம்பாலம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆலோசனைகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சென்னையைச் சேர்ந்த சி.ஆர்.நாராயண ராவ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை உலகத் தரத்தில் வடிமைத்துக் கொடுத்திருப்பதாக அதன் நிறுவன இயக்குநர் சி.ஆர்.அரவிந்த் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்