விளையாட்டில் சாதனைகள் நிகழ்த்தப்படுவது சகஜம்தான். ஆனால், அதை சாதித்தவர்கள் யார் என்பதில்தான் முக்கியத்துவம் இருக்கிறது. எல்லா வசதிகளும் உள்ள நிலையில் சாதிப்பவர்களைக் காட்டிலும், அடித்தட்டு மக்களிடமிருந்து ஒரு சாதனையாளர் உருவாகும்போது, அது குறிப்பிடத்தக்கதாகிறது. கோவையில் கட்டிடத் தொழிலாளியின் மகன் தேசிய அளவிலான `கிராஸ் கன்ட்ரி` மினி மாரத்தான் போட்டியில் வென்றுள்ளார். இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.சதீஷ்குமார்(18).
கோவையை அடுத்த விளாங்குறிச்சியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி எம்.முத்துகுமார்-லலிதா தம்பதியின் மகனான இவர், கோவை ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கலைப் பிரிவு படித்து வருகிறார்.பள்ளியிலும், ஊர் விழாக்களிலும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்று வந்த சதீஷ்குமார், கடந்த 2015-ல் நேரு விளையாட்டு அரங்கம் அருகில் மாரத்தான் ஓட்டப்பந்தய அறிவிப்பு குறித்த ஃபிளக்ஸ் போர்டைப் பார்த்து, அப்பந்தயத்தில் பங்கேற்க வாய்ப்பு கேட்டுள்ளார்.
பதிவுக்கான கடைசி நாள் முடிந்து விட்டதால், வாய்ப்புக் கிடைக்காமல் வருத்தத்துடன் திரும்பிச் சென்றவருக்கு, தடகளப் பயிற்சியாளர் வைரவநாதனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னைப் பற்றியும், தன்னுடைய ஆர்வத்தையும் அவரிடம் கூறியுள்ளார் சதீஷ்குமார். உடனே, சதீஷ்குமாருக்கு பயிற்சி அளிப்பதாக வைரவநாதன் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட சதீஷ்குமாருக்கு, கடுமையான பயிற்சிகளை அளித்துள்ளார் வைரவநாதன். இந்த நிலையில், அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், இந்திய தடகள சம்மேளனம் நடத்திய 53-வது 'நேஷனல் கிராஸ் கன்ட்ரி' போட்டியில் 6 கிலோமீட்டர் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதித்துக் காட்டியுள்ளார் சதீஷ்குமார்.
தமிழகத்தில் இருந்து 16 பேர் பங்கேற்றதில், இவர் ஒருவர் மட்டுமே பதக்கம், அதுவும் தங்கப் பதக்கம் வென்றது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கடந்த 25, 26-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 2-வது மாநில இளையோர் தடகளப்போட்டியில் 5,000 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், 2018 நவம்பரில் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இளையோர் போட்டியில் 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம், நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி தடகளப் போட்டியில் 5,000 மீட்டர், 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம், சென்னையில் நடைபெற்ற மாநில ஜூனியர் தடகளப் போட்டியில் 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், நெல்லையில் நடைபெற்ற மாநில சீனியர் தடகளப் போட்டியில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி என பதக்கங்களைக் குவித்துள்ளார்.
“என்னுடைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் பயிற்சியாளர் வைரவநாதன். எனது திறமையைக் கண்டுபிடித்து வெளிக்கொணரச் செய்தவர். இதுவரை எனக்கான அனைத்து செலவுகளையும் அவர்தான் கவனித்து வருகிறார். என்னுடைய பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் தாமஸ், உடற்கல்வி ஆசிரியர் அபிபுர் ரஹ்மான் மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக உள்ளனர்.
`நேஷனல் கிராஸ் கன்ட்ரி` போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், டென்மார்க்கில் நடைபெறும் `வேர்ல்டு கிராஸ் கன்ட்ரி` போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அந்தப் போட்டியிலும் தங்கம் வென்று, இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பேன். அதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இத்துடன், படிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறேன்" என்றார் சதீஷ்குமார் நம்பிக்கையுடன்.
நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்
"25 வயது வீரருக்குரிய உடல்திறன் சதீஷ்குமாருக்கு இருப்பதைக் கண்டு வியந்தேன். மாரத்தான் போட்டிக்கான பிளக்ஸ் போர்டு விளம்பரத்தைப்
பார்த்து வந்து, வாய்ப்பு கிடைக்காமல் சென்றவர், கடந்த ஆண்டு அதே அமைப்பு நடத்திய போட்டியில் முதலிடம் வென்றார். இவர் நிச்சயம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்" என்றார் பயிற்சியாளர் வைரவநாதன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago