திருச்சியில் நேற்று நலத்திட்ட உதவி பெற வந்த இடத்தில், படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாமல் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதியடைந்தனர்.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலன், சமூக நலன், சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் கீழ் மாற்றுத்திறனாளிகள் 262 பேர் உட்பட 413 பேருக்கு ரூ.42 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள், பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், மடக்கு சக்கர நாற்காலிகள், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், மாநில அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில், நலத் திட்ட உதவி பெறுவதற்காக வந்த மாற்றுத்திறனாளிகள், விழா நடைபெறும் அரங்குக்கு செல்ல சாய்தள பாதை இல்லாததால், படிக்கட்டுகளில் ஏறி, இறங்க மிகவும் அவதிப்பட்டனர். சில மாற்றுத்திறனாளிகள் தரையில் தவழ்ந்து சென்று படிக்கட்டுகளில் சிரமத்துடன் ஏறினர்.
அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கத் தொடங்கிய நிலையில், மாற்றுத்திறனுடைய முதியவர் ஒருவர் அரங்கத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த, தனக்கு ஒதுக்கப்பட்ட 3 சக்கர சைக்கிளை நோக்கிச் செல்வதற்காக படிக்கட்டுகளில் இறங்கத் தொடங்கினார். அப்போது, நிலைதடுமாறி தலைக்குப்புற தரையில் விழுந்தார். இதைக் கண்ட சக மாற்றுத்திறனாளிகள் கடும் வேதனை அடைந்தனர்.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக் கான விழாக்களை ஏற்பாடு செய்யும்போது இனியாவது சாய்தள பாதை, எளிதில் சென்று திரும்ப சுகாதாரமான கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.மாரிக்கண்ணன் கூறியது: மாற்றுத்திறனாளிகளுக்கான விழா நடைபெறும்போது, அவர்கள் விழா நடைபெறும் அரங்குக்குள் செல்ல சாய்தள பாதை மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இன்று(நேற்று) நடைபெற்ற நிகழ்ச்சியிலும், விழா அரங்குக்கு படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல முடியாமல் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்தனர்.
எனவே, இனியாவது மாற்றுத் திறனாளிகள் நிகழ்ச்சிகளை சாய்தள வசதி உள்ள அல்லது தற்காலிக சாய்தள வசதி ஏற்படுத்த வசதி உள்ள இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், நிகழ்ச்சிக்கு வந்து செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவு வதற்காக தன்னார்வலர்கள், என்எஸ்எஸ் மாணவர்கள், சமூகப் பணித் துறை மாணவ- மாணவிகளை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மாற்றுத்திறனாளிகள் நலன் மீதான அரசின் அக்கறை முழுமையாக நிறைவடையும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago