வணிக ரீதியாகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் கெடாமல், அதிக நாட்கள் பாதுகாத்து வைப்பதற்கு, ‘உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம்’ நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வெப்பத்தைப் பயன்படுத்தாமல் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து விளக்குகிறார், கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய உதவிப் பேராசிரியை ப.கீதா.
“வெப்பமில்லா பதப்படுத்துதல் என்பது உணவைப் பதப்படுத்தும் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். உயர் அழுத்த பதப்படுத்துதல் தொழில்நுட்பம், துடிப்பு மின்புல தொழில்நுட்பம், வடிகட்டுதல் அல்லது நுண் வடிகட்டுதல் தொழில்நுட்பம், ஓமிய மின்தடை, கேளா ஒலி அல்லது மீயொலி தொழில்நுட்பம் என்றெல்லாம் இதில் பல பிரிவுகள் உண்டு.
உயர் அழுத்த பதப்படுத்துதல்
குளிர்முறை பதன முறையைப் பயன்படுத்துவதே இந்த தொழில்நுட்பமாகும். உணவுப் பொருட்கள் கெடாமல், அதன் பயன்பாட்டுக்கான காலஅளவை அதிகரிப்பது மட்டுமின்றி, உணவுப் பொருட்களின் நிறம், மணம், சத்துகள் மற்றும் அமைப்புத் தன்மை மாறாமல், பாதிப்பை ஏற்படுத்தும் நோய்க் காரணிகளை அழிக்கக்கூடியது இந்த தொழில்நுட்பம்.
இந்த முறையில் உணவுப் பொருட்கள் 600 எம்.பி.எஸ். உயர் அழுத்தத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால், அதிலுள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடு முடக்கப்பட்டு, நுகர்வோருக்கு ஏற்ற உணவுப்பொருளாக தரத்தை மாற்ற முடிகிறது.
இதில், 600 எம்.பி.எஸ். அழுத்தத்துக்கு மேல் வித்துகளை உருவாக்கக்கூடிய பாக்டீரியாக்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. பாக்டீரிய செல்களின் சவ்வு பாதிக்கப்படுவதால், அவை சத்துகளை உறிஞ்சுதல், கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற சுழற்சி முறைகளைத் தடுக்கின்றன. அவற்றில் திரவங்கள் கசிவது தடுக்கப்படுகிறது. வெப்பமூட்டும் முறையுடன் ஒப்பிடுகையில், உணவுப் பொருளுக்கே உரித்தான சுவை, தோற்ற அமைப்பு, சத்துகள் இம்முறையில் நிலைநிறுத்தப்படுகின்றன.
துடிப்பு மின்புல தொழில்நுட்பம்
இந்த முறையில் உணவுப் பொருட்களில் கிருமி நீக்கம் அல்லது தொற்று நீக்கப்படுகிறது. இது உணவுப் பொருட்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதன் மணத்தில் மிகக் குறைந்த அளவே மாற்றம் ஏற்படுகிறது. மிகக் குறைந்த வெப்பம் மூலம் உணவுப் பொருட்கள் நொதிப்பதை தடுக்க முடியும்.
இதேபோல, மின்புல துடிப்பை அதிகரிப்பதன் மூலம், பதப்படுத்துதலின் அடர்த்தி அதிகமாகி, நுண்ணுயிர்களின் செல்களில் உருவாகும் பெரிய கருவணுக்கள் உடைகின்றன. இதனால் செல்கள் இறந்துவிடுகின்றன. இதன்மூலம் சாறு, முட்டை, சூப் மற்றும் திட உணவுப் பொருட்களை பதப்படுத்தலாம்.
கேளா ஒலி (அ) மீயொலி
கேளா ஒலி அல்லது மீயொலி எனப்படுவது, 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் அல்லது அதற்கு மேலான ஒலி ஆற்றலைக் கொண்டது.
மீயொலியை நீர்ம ஊடகத்துக்குள் செலுத்தும்போது, வாயு நீர்க்குமிழி உற்பத்தியாகிறது. இதன்மூலம் உயர் வெப்பமும், அழுத்தமும் உண்டாகிறது. மீயொலியானது நுண்ணுயிர்களைக் கொல்லும் பண்பு கொண்டது. இதை உணவுப் பொருளுக்குள் செலுத்தும்போது, அதில் உள்ள நுண்ணுயிர்களின் செல்களுக்கு சேதம் விளைவிக்கிறது.
மீயொலியின் இயற்கைத் தன்மை, நுண்ணுயிர்களின் மீது மீயொலி வெளிப்படும் நேரம், நுண்ணுயிர்களின் வகைகள், பதப்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களின் கொள்ளளவு, உணவுப் பொருட்களின் தொகுப்பு, வெப்பநிலை போன்ற தன்மைகளை இத்துடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் காபி, பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்டுகளை பிரித்தெடுக்க முடியும்.
ஓமிய மின்தடை சூடேற்றுதல்
இந்த முறையில் மின்னோட்டத்தை நேரடியாக உணவுப் பொருட்களின்மீது செலுத்தும்போது, மின்தடை ஏற்பட்டு, வெப்பம் உண்டாகும். அதில், உணவுப் பொருட்கள் சூடேற்றப்படும். உணவுப் பொருட்களின் கொள்ளளவு முழுவதும் ஒரே மாதிரியாக சூடேற்றுவதால், பதப்படுத்தும் நேரம் குறைகிறது. இம்முறையில் பதப்படுத்துவதன் மூலம் வெப்பத்தின் காரணமாக உணவுப் பொருட்கள் பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது. பாஸ்டர் முறையில் பதப்படுத்துதல், உணவில் தொற்று நீக்குதல் போன்றவற்றுக்கு இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
பழம், காய்கறிச் சாறு, இறைச்சி, கடல் உணவுகள் போன்றவை இந்த முறையில் பதப்படுத்தப்படுகின்றன.
வடிகட்டுதல் தொழில்நுட்பம்
இது மூலக்கூறு துகள்களை வடிகட்டும் முறையாகும். இதன்மூலம் சர்க்கரை மற்றும் தக்காளிச் சாறை செறிவுபடுத்த முடியும். நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் முறையில், கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க முடியும். உணவுப் பொருட்களில் இருந்து நொதி, புரோட்டீன், பெக்டின் போன்றவை, பிரித்தெடுத்தல் மற்றும் செறிவூட்டலுக்குப் பயன்படுகிறது. தேன் மற்றும் சர்க்கரைப் பாகு பதப்படுத்தலில் இது பயன்படுகிறது. மேலும், குடிநீரில் உள்ள பாக்டீரியா மற்றும் இதர மாசுகளைப் பிரித்தெடுக்கவும் பயன்படுகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago