தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?

By க.சே.ரமணி பிரபா தேவி

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் தனிநபர் வருமான வரி உச்சவரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தியது. ஆனால் அதைத் தொடர்ந்து கடந்த 4 வருடங்களில் உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், பாஜக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மற்றொரு புறம் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை; எனினும் ரூ.5 லட்சம் வரை வரி விதிப்புக்குரிய வருமானம் இருப்போருக்கு வரிவிலக்கு முழுமையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தெளிவான விவரங்களைப் பெற நிதி ஆலோசகர் வ.நாகப்பனை 'இந்து தமிழ் திசை'க்காகத் தொடர்புகொண்டோம்.

பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதா? இல்லையா?

இல்லை. உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வருமான வரி விதிப்பு மாற்றப்படவில்லை. அதே நேரத்தில் 5 லட்ச ரூபாய்க்குக் குறைவான ஆண்டு வருமானம் உள்ளோருக்கு, அரசு 5 சதவீதக் கழிவை அல்லது தள்ளுபடியை (Rebate) அறிவித்துள்ளது. இது ஆர்ட்டிகிள் 87 ஏ -ன் கீழ் வருகிறது. இதன் மூலம் அவர்கள் வருமான வரி விதிப்புக்குள் வரமாட்டார்கள்.

அப்படியென்றால் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வரி செலுத்த வேண்டுமா?

உங்களுடைய மொத்த வருமானமே 5 லட்சத்துக்குள் தான் எனில் அதற்கு வரி இல்லை. ஆனால் அதற்கு மேல் சம்பாதிப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். ஆனால் திட்டமிடல் இருந்தால் வரிவிதிப்பைத் தவிர்க்கலாம்.

உதாரணத்துக்கு நீங்கள் 10 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறீர்கள். அதில் வருமான வரி விலக்கை அளிக்கக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் வரி விதிப்புக்குரிய வருமானம் (Taxable Income) குறையும்.

அதாவது 80சியின் கீழ் ஏதாவது ஒரு திட்டத்தில் (பிபிஎஃப்) போட்டிருக்கிறீர்கள் எனில், அதற்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரிவிலக்கு உண்டு. நிரந்தர கழிவுத் தொகை விலக்கு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கான வட்டிக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை விதி விலக்கு உண்டு. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தால் அதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு உண்டு. அதேபோல மருத்துவக் காப்பீட்டுக்கும் 50 ஆயிரம் ரூபாய் வரிவிலக்கு உள்ளது.

இதன் கூட்டுத்தொகை ரூ.5 லட்சம். இது முதலீடு மற்றும் காப்பீடுகளுக்காக அரசு நமக்கு அளிக்கும் வரிவிலக்காகும். இதை ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தில் இருந்து கழித்தால் வரி விதிப்புக்குரிய வருமானம் ரூ.5 லட்சம் ஆகும். இதற்கு அரசு அறிவித்த கழிவுத் தொகை இருப்பதால், அவர்களும் வரி செலுத்த வேண்டியதில்லை.

ஆக, முறையான முதலீடுகள் இருக்கும் பட்சத்தில் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அதற்கு மேல் 1 ரூபாய் என்றாலும் அதற்கு கழிவுத்தொகை கிடைக்காது. அதற்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5% வரியும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை 20% வரியும் விதிக்கப்படும்'' என்றார் நாகப்பன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE