ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா குழுமத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட மே 28-ம் தேதி தமிழக அரசு அர சாணை வெளியிட்டது. அதன்பேரில், அன்றே ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.
திறக்க அனுமதி
இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர் பாக ஆய்வு செய்ய மேகாலயா மாநில ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்தது.
இக்குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கை அடிப்படையில், 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் 15-ம் தேதி உத்தரவிட்டது.
மேல்முறையீடு மனுக்கள்
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வேதாந்தா குழுமம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி கள் ஆர்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த மாதம் 24-ம் தேதி முதல் இவ்வழக்கில் இருதரப்பு வழக்கறிஞர்கள் வாதம் நடைபெற்று வந்தது.
அதிகாரம் இல்லை
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், தமிழக அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், வேதாந்தா சார்பில் சி.ஆரியமா சுந்தரம் ஆகியோரும், வைகோவும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்கள் கடந்த 7-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
அனுமதி மறுப்பு
இந்த வழக்கில் நீதிபதி ஆர்.பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. ‘தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு இல்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும், ‘தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்ற, வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதிகள், ‘இதுதொடர்பாக, வேதாந்தா குழுமம் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று அறிவுறுத்தினர்.
இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பா யத்தின் அதிகார வரம்பை மட்டுமே கணக்கில் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள் ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான சாதக, பாதங்கள் எதையும் கணக்கில் கொள்ளவில்லை. எனினும், இத்தீர்ப்பைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தொடர்ந்து அமலில் இருக்கும்.
‘உயர் நீதிமன்றத்தை விரைவில் அணுகுவோம்’
“உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி, உயர் நீதிமன்றத்தை விரைவில் அணுகுவோம்” என, ஸ்டெர்லைட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி, அவசர வழக்காக விசாரிக்க கோரலாம் எனவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தை விரைவில் அணுகவுள்ளோம்.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஆலை சார்ந்த சாதகமான எந்த அம்சங்களையும் கணக்கில் கொள்ளவில்லை. எங்களிடம் சாதகமான விவரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை உயர் நீதிமன்றத்தில் வைத்து ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்போம். தூத்துக்குடி மக்களுக்காக ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்து தொடங்கியுள்ளோம். நவீன மருத்துவனை, குடிநீர் திட்டம், ஸ்மார்ட் பள்ளி, மரம் வளர்ப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago