பல நகரங்களில் நடைபாதைகளில் வசிக்கும் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களை பலரும் பார்த்து கடந்து செல்லும் நிலையில், திண்டுக்கல்லில் இளைஞர்கள் சிலர் அவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டு வருகின்றனர்.
நாம் வீட்டில் இருந்து வெளியே சென்று வீடு திரும்புவதற்குள் மனநிலை பாதிக்கப்பட்ட, தனித்துவிடப்பட்ட சிலரைப் பார்த்துவிட்டு கடந்து செல்கிறோம். ஆனால் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் பிரேம்குமார், விசுவநாதன், கார்த்திக், கருப்பையா ஆகியோர், தனித்துவிடப்பட்ட நபர்களின் பரிதாபநிலையைப் பார்த்து கடந்து செல்ல முடியவில்லை. இதன்விளைவு, நண்பர்கள் சேர்ந்து களம் இறங்கினர்.
இவர்கள் எடுத்த நடவடிக்கையால் இன்று திண்டுக்கல், வடமதுரை பகுதிகளில் தனித்துவிடப்பட்ட 30 பேருக்கு தினமும் உணவு கிடைக்கிறது. மேலும் சுத்தம், சுகாதாரம் என அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கின்றனர்.
இதுவரை பல நாட்கள் குளிக்காத ஏழு பேரை குளிக்க வைத்து முடிகளை வெட்டி, புதிய உடைகள் அணிவித்து மகிழ்கின்றனர். இவர்களின் மனதில் முதலில் தோன்றியது தனித்து விடப்பட்டவர்களின் பசியைப் போக்குவதாக இருந்தது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் முதலில் 'பசியில்லா வடமதுரை' என்ற அமைப்பை உருவாக்கினர். வடமதுரையில் தனித்துவிடப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 30 பேர் இவர்களால் பசியாறினர். தினமும் பசியாறுகின்றனர்.
இதைத்தொடர்ந்து இவர்கள் செய்த காரியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தனித்துவிடப்பட்டவர்களின் அலங்கோல நிலையைக் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்த சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். குளித்து பல நாட்கள் ஆன நிலையில் அழுக்கேறிய உடைகள், உடல்கள், உடமைகள் ஆகியவற்றை சீர்படுத்த முயற்சித்தனர். இதனால் இளைஞர்களே முகச்சவரம் செய்வது, அதிகமாக வளர்ந்த முடிகளை வெட்டி, குளிக்கவைத்து சுத்தப்படுத்தி புத்தாடைகள் அணிவித்து மகிழ்ந்தனர். தங்களின் சேவைகளை 'பசியில்லா வடமதுரை' என்ற முகநூல் பக்கத்தில் பதிவு செய்துவருகின்றனர். இவர்களின் சேவை குறித்த புகைப்படங்கள், பதிவுகளை பார்ப்பவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நண்பர்களுடன் சேர்ந்து உதவிவரும் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த பிரேம் குமார் கூறியதாவது:
சென்னையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறேன். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். தனித்துவிடப்பட்டவர்களில் கை, கால் நன்றாக இருப்பவர்கள் உணவுக்காக உழைத்து சம்பாதித்துக்கொள்வர். சிலர் பிச்சை எடுத்தாவது தங்களது பசியைப் போக்கிக்கொள்வர். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனித்த விடப்பட்டவர்களுக்கு பிச்சை எடுக்கக்கூட தெரியாது. இவர்களைக் கடந்து செல்பவர்கள் கூட இவர்களின் அழுக்கான உடல், உடை, சுகாதாரமில்லாத இடம் ஆகியவற்றைப் பார்த்து உதவாமல் சென்றுவிடுவர். எனவே இவர்கள் மீது அக்கறை எடுத்து பார்க்கும்விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டோம். எங்களின் செயலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது பலரும் பொருட்கள் கொடுத்து உதவ முன்வருகின்றனர்.
இதேபோல் ஒவ்வொரு ஊரையும் இளைஞர்கள் தத்தெடுத்து, ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட தனித்துவிடப்பட்டவர்களை கண்டறிந்து உதவினால் பசியில்லாத தமிழகத்தைக் காணலாம்'' என்றார்.
இளைஞர்களின் இந்தச் செயல் மனிதநேயம் மரத்துப் போய்விடவில்லை என்பதையே காட்டுகிறது. ஒவ்வொரு ஊரிலும் இதேபோல் இளைஞர்கள் தனித்துவிடப்பட்டவர்களின் பசியாற்ற முன்வந்தால் பசியில்லாத தமிழகம் சாத்தியமே.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago