அன்பாலயம் ஆ(னை)ன சரணாலயம்!

By ஆர்.டி.சிவசங்கர்

சின்னதம்பி’ - கடந்த 15 நாட்களாக ஊடகங்களில் அதிகம் இடம் பெற்ற பெயர்.  வாழ்விடத்தை தக்க வைத்துக்கொள்ளப் போராடும் சின்னதம்பி ஒருபுறம். அதே சின்னதம்பியுடன் பயணத்தைத் தொடங்கிய விநாயகன் தற்போது முதுமலையில்.விநாயகன் மட்டுமா, மசினி, ரகு, மூர்த்தி என எண்ணற்ற யானைகளுக்கும் அன்பாலயமாக மாறியுள்ளது  முதுமலை  சரணாலயம்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப் பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. ஆசியாவிலேயே பெரிய யானைகள் வளர்ப்பு முகாம் இதுதான். வனத்தில் தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டிகள் மற்றும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் அடக்கப்பட்டு, வளர்ப்பு யானைகளாக இங்கு மாற்றப்படுகின்றன. தற்போது இங்கு 24 வளர்ப்பு யானைகளை வனத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இவைகளுக்கு மட்டுமா? ஏறத்தாழ 321 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள முதுமலையின் மையப் பகுதி  மற்றும் சுமார் 300 சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ள வெளிவட்டப் பகுதிகளும் ஆயிரக் கணக்கான யானைகளுக்கு முதுமலையே  வசிப் பிடமாகும்.

தாய் வீடு திரும்பிய மசினி

முதுமலை யானைகள் முகாமில் இருந்த 12 வயது மசினி  என்ற யானை, திருச்சி சமயபுரம் கோயிலுக்கு ஆன்மிகப் பணியாற்ற கடந்த 2015-ல் அனுப்பிவைக்கப்பட்டது. வனப்

பகுதியில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த மசினி, சங்கிலியால் பிணைக்கப்பட்டு, ஒரே இடத்தில் கட்டிவைக்கப்பட்டது. அதீத இரைச்சல் மற்றும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து மிரண்டுபோனது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மசினி, கோயிலில் தன்னைப் பராமரித்த பாகனையே மிதித்துக் கொன்றது.  இதையடுத்து, மசினிக்கு  ஒரத்தநாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் சிகிச்சை அளித்தனர். அந்த யானையை முது மலைக்கு கொண்டுசென்று பராமரிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதையடுத்து, மசினி முதுமலையை  வந்தடைந்தது.

ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தாய் வீட்டுக்குத் திரும்பியுள்ளது மசினி. மிகவும் பலம் குன்றி, உடல் சோர்வடைந்த நிலையில்  காணப்பட்ட மசினி, முதுமலை வந்த ஒரு மாதத்திலேயே  உடல் நலன் தேறி வருகிறது. கூடலூர் தொரப்பள்ளியில் உடல் எடையைக் கணக்கிட்டபோது, மசினி 300 கிலோ எடை அதிகரித்திருந்தது,  வனத் துறையினர் மற்றும் பாகன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது ஆழ்ந்த அமைதியுடன் இருக்கிறது மசினி.

அன்புமிக்க அய்யூர் குட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகத்தில் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த யானைக்குட்டியைவனத் துறையினர் மீட்டு, தங்கள் பராமரிப்பில் வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த பாகன் பொம்மன், கிருஷ்ணகிரி சென்று குட்டி யானையைப்  பராமரித்து வந்தார்.

இந்நிலையில், இந்த குட்டி யானையை முதுமலை கொண்டுசென்று பராமரிக்க முதன்மை வனப் பாதுகாவலர் அனுமதி அளித்தார். இதையடுத்து, 2017 ஜூலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இந்த யானை கொண்டு வரப்பட்டது. பொம்மனும், அவரது மனைவியும் இந்த குட்டி யானையை பராமரித்து வருகின்றனர். தாயிடமிருந்து பிரிந்த குட்டிக்கு  ரகு எனப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்க்கின்றனர்.

மூர்க்கம் மிகுந்த மூர்த்தி

காட்டிலிருந்து பிடிக்கப்படும் யானைகளை,  வளர்ப்பு யானைகளாக மாற்ற உதவுவது `கரால்`. இது மரத்திலான கூண்டு. இதில் அடைத்து வைக்கப்படும் மூர்க்கமான யானைகள், ஒரு மாதத்தில் பாகனின் பேச்சுக்கு கட்டுப்பட்டு,  சாதுவாக மாறிவிடும்.

`மூர்த்தி` என்ற தந்தமில்லாத மக்னா யானை, கேரளாவில் 17 பேரைக் கொன்றது. இதை சுட்டுக்கொல்லவும் வனத் துறை உத்தரவிட்டது. ஆனால், அப்போது முதுமலை சரணாலய காப்பாளராக இருந்த உதயன் தலைமையிலான  வனத்துறையினர் இந்த யானையைப் பிடித்து முதுமலைக்கு கொண்டு வந்தனர். படுகாயமடைந்திருந்த யானைக்கு, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை அளித்து, மெல்ல அவரது கட்டுபாட்டுக்கு கொண்டுவந்தார். `யானை மனிதர்` என்றழைக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் நினைவாக, யானைக்கு மூர்த்தி என்றே பெயர் சூட்டப்பட்டது. தற்போது கடந்தகால நினைவு ஏதுமின்றி,  குழந்தையைபோல சாந்தமாக வலம் வருகிறது மூர்த்தி.

இதேபோல,   2016-ல்  பந்தலூர் அருகே மூவரை கொன்ற ஆட்கொல்லி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, முதுமலையில் கராலில் அடைக்கப்பட்டு, தற்போது வளர்ப்பு யானையாக மாறியுள்ளது. சுள்ளிக்கொம்பன் என்றழைக்கப்பட்ட இந்த யானைக்கு,  வனத் துறையினர் சீனிவாசன் எனப் பெயரிட்டனர். தற்போது அது பயிற்சி பெற்று கும்கியாக உருமாறி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்