அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார்?- உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இடியாப்பச் சிக்கலில் தமிழக காவல்துறை

By மு.அப்துல் முத்தலீஃப்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதவிக்காலம் வரும் ஜூன் இரண்டாவது வாரத்துடன் முடிவதால் அடுத்த டிஜிபியைத் தேர்வு செய்யும் கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. இதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு முறைகள் காரணமாக புதிய டிஜிபி தேர்வு இடியாப்பச் சிக்கலாக உள்ளது.

காவல்துறையில் உச்சகட்ட மரியாதை ஐபிஎஸ் அதிகாரியாவதே. ஐபிஎஸ் அதிகாரிகள் பெருமையாகக் கருதுவது சென்னை காவல் ஆணையர் பதவி, சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி. இதில் வாழ்நாளில் ஒருமுறையாவது அமர்ந்துவிட வேண்டும் என ஒவ்வொரு ஐபிஎஸ்ஸும் கனவு காணுவார்கள்.

அதை நோக்கிய நகர்வுகளும் நடக்கும். நேர்மையாக தங்கள் பணியைப் பார்ப்பதால் ஒதுக்கப்படும் அதிகாரிகளும் உண்டு. அரசியல் செய்து இந்தப் பதவிகளுக்கு வந்த அதிகாரிகளும் உண்டு. இரண்டையும் காவல்துறை கண்டதுண்டு.

மேற்கண்ட விவகாரங்களை ஆளும் அரசுகள் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டிய நபர்களை டிஜிபிக்களாக நியமிக்கும் வேலையும் நடந்தது உண்டு. அதில் சில நேரம் விதிமீறல்களும் நடந்து நேர்மையாகப் பதவிக்கு வரவேண்டிய அதிகாரிகள் வாய்ப்பு கிடைக்காமலே ஓய்வுபெற்ற வரலாறும் உண்டு.

சில நேரம் இது எல்லை மீறிப்போனதும் உண்டு. இந்நிலையில் இந்த விவகாரம் அனைத்து மாநிலங்களிலும் நடந்ததை அடுத்து காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்நிலையில், அந்தத் தீர்ப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி மத்திய அரசு மனு செய்தது. அந்த மனு மீது கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

அவை பின்வருமாறு.

* சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபிக்களாக நியமிக்கப்படுபவர்கள் தகுதி வாய்ந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

* மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை யூபிஎஸ்சி ஆணையத்துக்கு அனுப்பிவைத்து, அவர்கள் 3 பேரை பரிந்துரைப்பார்கள்.

* அந்த 3 அதிகாரிகளில் ஒருவரை மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமித்துக்கொள்ளலாம்.

* ஓய்வுபெறும் காலத்துக்கு குறுகிய நாட்களுக்கு முன் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்குவதை மாநில அரசுகள் அறவே தவிர்த்துவிட வேண்டும்.

* சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமிக்கப்படுபவர்கள், தங்களுடைய பதவி முடியும் காலம்வரை 2 ஆண்டுகள் வரை பணியாற்றும் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

* தற்போது பதவியில் இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெறும் காலத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்கும் பணிகளை அரசு தொடங்கிவிட வேண்டும்.

*  தகுதிவாய்ந்த, அனுபவம் நிறைந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை யூபிஎஸ்சி குழுவுக்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

* அதிலிருந்து 3 பேர் பட்டியலை யூபிஎஸ்சி அனுப்பும் அதிலிருந்து ஒருவரை மாநில அரசு நியமிக்கலாம்.

* கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மாநில அரசுகள் ஏதேனும் சட்டம், உத்தரவுகள் பிறப்பித்திருந்தால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் இருந்தது.

இந்நிலையில் இடையில் மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியை தாங்களே நியமனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பஞ்சாப், ஹரியாணா, உ.பி., மேற்கு வங்கம், பிஹார் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இந்த உத்தரவை எதிர்த்து  மனுத்தாக்கல் செய்தன. 

இந்த மனுவை கடந்த மாதம் 16-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. டிஜிபிக்கள் நியமனம் குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே உள்ளது. அவை அப்படியே தொடரவேண்டும் என தெரிவித்த அமர்வு 5 மாநிலங்களின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அரசுகளின் இதுபோன்ற நடவடிக்கையால் தமிழகத்தில் நியாயமாகப் பதவி உயர்வு பெற வேண்டிய அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு பெற முடியாமலேயே ஏடிஜிபிக்களாக இருக்கும் நிலை ஏற்பட்டது.

தமிழகத்துக்கான டிஜிபி கோட்டா 6 என்கிற நிலையில் பதவி உயர்வு பெறாமலே 6 அதிகாரிகள் ஓய்வுபெறும் நிலையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் 6 பேரையும் டிஜிபியாக பதவி உயர்த்தியது மத்திய அரசு. இதனால் தற்போது தமிழகத்தில் 11 டிஜிபிக்கள் உள்ளனர்.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஓய்வுபெறுவதை ஒட்டி உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உத்தரவுப்படி அடுத்த டிஜிபிக்கான 3 பேர் கொண்ட பேனலை மூன்று மாதத்துக்கு முன் அதாவது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அனுப்ப வேண்டும்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு வருபவர் அடுத்து இரண்டு ஆண்டுகள் சர்வீஸ் உள்ளவராக (அதாவது 2021 ஜூன் வரை பதவிக்காலம் உள்ளவராக) இருக்க வேண்டும்.

ஆனால் தற்போதுள்ள தகுதியான டிஜிபிக்கள் 10 பேரில் ஒரே ஒருவரைத் தவிர யாருக்குமே அந்த தகுதி இல்லை.

தற்போது உள்ள ஐபிஎஸ்களில் டிஜிபியாக உள்ளவர்கள்

 1. கே.பி.மகேந்திரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 2. ஜாங்கிட் வரும் ஆகஸ்டு மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். 3. திரிபாதி அடுத்த ஆண்டு மே மாதத்தில் ஓய்வு பெறுகிறார். 4.காந்திராஜன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார்.5.ஜாஃபர் சேட் 2020 டிசம்பர் மாதம் ஓய்வுபெறுகிறார்.

 6. லட்சுமி பிரசாத் 2020 மே மாதம் ஓய்வு பெறுகிறார். 7. அசுதோஷ் சுக்லா 2021 ஜனவரி மாதம் ஓய்வு பெறுகிறார். 8. மிதிலேஷ் குமார் ஜா 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். 9. தமிழ்ச்செல்வன் 2021-ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெறுகிறார். 10. ஆஷிஸ் பங்க்ரா இந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார்.

அவரவர்கள் ஓய்வுபெறும் தகுதியின் அடிப்படையில் பார்த்தால் 3 பேர் பேனலுக்கான லிஸ்ட்டிலேயே மிதிலேஷ் குமார் ஜா மட்டுமே தகுதியாகிறார். அவரும் அயல் பணியில் சைனாவில் பணியாற்றுவதால் டிஜிபி சட்டம் ஒழுங்கு பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மீதமுள்ள 9 டிஜிபிக்களும் 2 ஆண்டுகள் முழுமையான பதவி இல்லாதிருப்பதால் தகுதியிழந்தவர்கள் ஆகிறார்கள். இதுபோன்ற இடியாப்பச் சிக்கல் இதற்கு முன் வந்ததே இல்லை. ஆகவே இதலிருந்து தங்களுக்கு விதிவிலக்கு கேட்டுத்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற டிஜிபியும் தற்போதைய மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான நட்ராஜிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

11 டிஜிபிக்கள் இருந்தாலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எம்.கே.ஜா மட்டுமே அந்தத் தகுதியில் வருகிறார். என்ன நடக்கும்?

முன்பு உச்ச நீதிமன்ற உத்தரவு என்னவென்றால் இரண்டு ஆண்டு என்பது அவர்களது ஓய்வு. இரண்டு ஆண்டுகாலம் பதவியில் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். அதை யூபிஎஸ்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

அப்படிப் பார்த்தால் எம்.கே.ஜா.மட்டுமே 2 ஆண்டுகள் சர்வீஸ் உள்ளவராக இருக்கிறார்?

அதை பேனலில் முடிவு செய்வார்கள்.

அப்படியானால் பேனலில் மற்றவர்கள் பெயரும் போகுமா?

ஆமாம். பேனலில் போகும். அதில் ஒருவருக்கு ஒரு ஆண்டுதான் சர்வீஸ் என்றால் கூடுதலாக ஒரு ஆண்டு தரவேண்டும் என்பதுதான் முடிவு.

மூன்று பேரில் யார் தேர்வானாலும் அவருக்கு 2 ஆண்டு சர்வீஸ் இல்லாவிட்டாலும் அவருக்கு 2 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்பது நமது சட்டம். அதை எதிர்த்து சேலஞ்ச் செய்து வழக்கு உள்ளது. அது இன்னும்  முடியவில்லை.

2006-ல் உச்ச நீதிமன்றம் 7 கட்டளைப்படி  வரையறை வைக்கிறார்கள். 1961 போலீஸ் சட்டத்தை இந்த கட்டளைப்படி மாற்றி அமையுங்கள் என்கிறார்கள். ஆனால் நாம் 2013-ல் வகுத்த சட்டத்தில் அந்தக் கட்டளைகளை வரையறைப்படுத்திவிட்டு இந்த விதியை மட்டும் 2 ஆண்டு அல்லது ரிட்டயர்மென்ட் என தனியாக விதியை வகுத்துக்கொள்கிறோம். இதை சேலஞ்ச் செய்துள்ளார்கள். அந்த வழக்கு தனியாக போகுது.

இப்போதுள்ள சட்டப்படி 3 பேரை பேனலில் அனுப்ப வேண்டும். அதில் தேர்வு செய்யப்படுபவர் 1 ஆண்டு சர்வீஸ் இருந்தால் கூடுதலாக ஓராண்டு அளிக்க வேண்டும் என்பதுதான் நிலைமை.

இவ்வாறு நட்ராஜ் தெரிவித்தார்.  

இந்நிலையில் இந்தச் சிக்கல் குறித்து காவல்துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த செய்தியாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தற்போதுள்ள நிலையில் டிஜிபி தேர்வு கேள்விக்குறியாகியுள்ளதே? என்ன நடக்கும்?

சிக்கலான விஷயம்தான். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடந்தால் ஒருவர்தான் உள்ளார். ஒருவேளை உச்ச நீதிமன்றம் விதியை சற்று தளர்த்தினால் சிக்கல் தீரும்.

தமிழகத்துக்காக தளர்த்தினால் மற்ற மாநிலங்களும் கேட்குமே?

ஆமாம், கண்டிப்பாக கேட்பார்கள். ஆகவே உச்ச நீதிமன்றம் விலக்கு தருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

அப்படியானால் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

அடுத்த வரிசையில் 2 ஆண்டுகளுக்கு மேல் சர்வீஸ் உள்ள 87 பேட்ச் ஐபிஎஸ்களான ஏடிஜிபிக்களை டிஜிபிக்களாக பதவி உயர்வு கொடுத்து பேனலில் அனுப்ப வேண்டும்.

அடுத்து யார் அதற்கு தகுதியானவர்களாக வருகிறார்கள்?

முதலில் சைலேந்திரபாபு வருகிறார். அடுத்து கரன் சின்ஹா, ப்ரதீப் வி பிலிப், உள்ளிட்டோர் வருகின்றனர்.

இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.

இதனால் தற்போது உள்ள நிலையில் என்ன நடக்கும் என்பது உச்ச நீதிமன்றம் கையில்தான் உள்ளது.  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்