விவசாயிகளை வாழவைக்கும் கோரை சாகுபடி!

By கி.பார்த்திபன்

பஞ்சு மெத்தையிலே படுத்தாலும் தூக்கம் வராத சிலருக்கு, பாயில் படுத்தால் ஆழ்ந்த உறக்கம் வரும். `பாய் விரித்துப் படுத்தால், நோய் விட்டுப் போகும்' என்பார்கள் கிராமப்புறங்களில். நவீனகாலத்தின் தாக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது பாய். ஆனாலும், பாயில் மட்டுமே படுப்பேன் என அடம் பிடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாயில் கோரைப் பாய், ஈச்சம் பாய், மூங்கில் பாய், பனை ஓலை பாய் உள்ளிட்ட ரகங்கள் உள்ளன. கோரைப்புற்களில் தயாரிக்கப்படும் பாய், மக்களிடம் கொஞ்சம் பரிச்சயமாகத்தான் இருக்கிறது.

பிளாஸ்டிக் பாய் பயன்பாட்டால், நகர்ப்புறங்களில் கோரைப் பாயின் விற்பனை  குறைந்து வருகிறது என்றாலும், கிராமப்புறங்களில் கோரைப் பாயின் பயன்பாடு இன்றளவும் உள்ளதுடன், திருமண நிகழ்ச்சியின்போது தாய் வீட்டுச் சீதனமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

காவிரிக் கரையோரம் சாகுபடி

இந்த கோரைப் பாய் உற்பத்திக்குத் தேவையான கோரைப் புற்கள் சாகுபடி, நாமக்கல்மாவட்டம் மோகனூர் காவிரிக் கரையோர விவ சாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.

பரமத்தி வேலூர், மோகனூர், ஜேடர்பாளை யம், பாண்டமங்கலம், பரமத்தி, மணப்பள்ளி, ஒருவந்தூர், ஒருவந்தூர் புதூர்  உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகள் மற்றும் ஆற்றின் மறுகரையான கரூர் மாவட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கோரைப் புற்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த சாகுபடியை மையப்படுத்தி, மோகனூர், கரூர், சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ளிட்ட பகுதியில் பாய் உற்பத்தி தொழில் கணிசமான அளவு மேற்கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பகுதியில் பாய் மட்டுமின்றி,  கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றுக்கான திரைமறைப்புகளும் கோரைப் புற்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

வெளிநாடுகளுக்கு செல்லும் கோரைப்பாய்கள்

இவை தமிழகத்தில் விற்பனை செய்வது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக,  சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கோரைப் புற்களால் தயாரிக்கப்படும் பாய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இதன்மூலம்,  நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர் என்கின்றனர் இத்தொழிலில் ஈடுபடு வோர்.

இதுகுறித்து ஒருவந்தூரைச் சேர்ந்த பாய் தயாரிப்பாளர்கள் கூறும்போது, "மோகனூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோரைப் புற்களை பாய் தயாரிப்புக்காக மாநிலத்தின் பல பகுதியிலும் இருந்தும் வாங்கிச் செல்கின்றனர். இரட்டை மடிப்பு பாய், ஒத்த மடிப்பு பாய், பந்திப்பாய் போன்றவை கோரைப் புற்கள் மூலம் தயாரிக்கப் படுகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் பாய்கள், பெருமளவு கரூர் மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்படு கின்றன. பின்னர், அங்கு ஜன்னல், கதவு திரைவிரிப்பு, மேஜைவிரிப்பு என பல்வேறு வடிவங்களாக மாற்றப்பட்டு, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. கோரைப் புற்களால் தயாரிக்கப்படும் பாயில் படுப்பது  உடலுக்கு மிகவும் ஏற்றது. இதன் மகத்துவம் அறியாததால்தான்,  இவற்றின் பயன்பாடு குறையத் தொடங்கியுள்ளது" என்றனர்.

நன்செய்இடையாற்றைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியரும், விவசாயியுமான என்.சி.சந்திர சேகரன் கூறும்போது, "நாமக்கல் மாவட்டத்தில் ஜேடர்பாளையம் முதல் காவிரி ஆற்றின் இரு கரைகளிலும், திருச்சி மாவட்டம் முசிறி வரை நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் கோரைப் புற்கள் சாகுபடி செய்யப்படுன்றன. பராமரிப்பு செலவு குறைவு என்பதால், இங்கு அதிக அளவு கோரைப்புற்கள் சாகுபடி நடைபெறுகிறது.

ஒரு ஏக்கரில் கோரைப்புற்களை சாகுபடி செய்ய,  ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். ஒருமுறை சாகுபடி செய்தால், தொடந்து 6 ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும்.  ஆண்டுக்கு இரண்டு முறை கோரைப்புற்களை அறுவடை செய்ய முடியும்.  அறுவடை செய்யப்படும் கோரைப்புற்கள் உலர வைக்கப்பட்ட பின்னரே, விற்பனைக்கு அனுப்பப்படும். 54 அங்குலம், மார்மட்டம் மற்றும் மட்டம் என 3 அளவுகளில் கோரைப்புற்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கிடங்கு வசதி தேவை!

இதில், 6 முடி கொண்ட கட்டு,  சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.1,800 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, கோரை விலை சரிந்து ரூ. 1,000 முதல் ரூ. 1,100 வரையே விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி மிகுதியால் விலை சரிந்துள்ளதாக, கோரைப்புற்களை வாங்கி, விற்பனை செய்யும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோரைப்புற்களுக்கு நல்ல விலை கிடைக்கும்வரை, அவற்றைப் பாதுகாக்க இட வசதியில்லை. மாவட்ட நிர்வாகம் கிடங்கு வசதி செய்துகொடுத்தால், உற்பத்தி செய்யப்பட்ட கோரையைப் பாதுகாக்க இயலும்" என்றார்.

மோகனூர் நன்செய் இடையாற்றைச் சேர்ந்த,  அனைத்து மாவட்ட கோரை உற்பத்தியாளர் சங்கப்  பொருளாளர் பி.வையாபுரி கூறும் போது, "பரமத்தி வேலூர், மோகனூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் காவிரிப்  பாசனத்தை நம்பி, ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரை சாகுபடி செய்யப்படுகிறது. நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் சாகுபடி செய்கின்றனர். இதன்மூலம் ஏராளமான விவசாயிகள் மற்றும்  விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கோரைக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. கோரை உற்பத்தி மிகுதியால்,  அண்மையில் விலை சரிவு ஏற்பட்டுள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்