மதுவிலக்கை அமல்படுத்த அக். 2-ல் உண்ணாவிரதம்: டாஸ்மாக் ஊழியர் சங்கம் முடிவு

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் காலிப் பணியிடங்களில் டாஸ்மாக் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அக்டோபர் 2-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத் தலைவர் பெரியசாமி, பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டாஸ்மாக் பணியாளர் நிர்வாகம் தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடைமுறைகள், அரசு அண்மையில் அறிவித்த ஊதிய உயர்வு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் சில்லறை மதுபான விற்பனை கடைகளில் பணிபுரிந்துவரும் 28 ஆயிரம் பணியாளர்கள், சமூகத்தீமை புரிந்து வருபவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அவர்களை அதிகாரிகள் அடிமைபோல் நடத்துகின்றனர். மதுபானக் கூடங்களை (பார்) நடத்துவோர், அரசியல் செல்வாக்கால் பணியாளர்களை அச்சுறுத்துகின்றனர். அதிகாரிகளும் அதைக் கண்டுகொள்வதில்லை.

இதற்கிடையே, மதுவின் கொடுமைகளை வலியுறுத்தி மக்களிடையே பிரச்சாரம் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். அரசு காலிப்பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை நியமிக்க வேண்டும், மதுக்கூட உரிமைகளை ரத்து செய்ய வேண்டும். மதுபான விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் பெருந்திரள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE