துப்பு துலங்கியது எப்படி?-2: போலீஸுக்கு சவால்விட்ட 2009- யானைக்கவுனி தலையில்லா உடல் வழக்கு

By மு.அப்துல் முத்தலீஃப்

சந்தியா கொலை வழக்கு போன்று உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்த யானைக்கவுனி சுரேஷ் குமாரின் தலையில்லா உடல் கிடைத்த வழக்கில் துப்பு துலங்கிய சுவாரஸ்யமான விவரம்.

வழக்கமாக பரபரப்பாக இயங்கும் சென்னையில் அதிலும் குறிப்பாக யானைக்கவுனி, பெரியமேடு பகுதிகளில் 2009-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பணியிலிருந்த போலீஸாருக்கு அந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யானைக்கவுனி காவல் நிலையம் அருகே உள்ள வெங்கட்ராயன் தெருவில் கிடந்த அட்டைப் பெட்டியில் 2 கால்கள் இடுப்புடன் துண்டிக்கப்பட்டு கிடப்பதாகத் தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்தனர். அட்டைப்பெட்டியில் சாம்பல் நிற பேண்ட் அணிந்த நிலையில் கால்கள் கிடந்தன.

உடனடியாக மற்றொரு தகவல் போலீஸாருக்கு வந்தது. அதில் என்எஸ்சி போஸ் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு காரில், சாக்கு மூட்டையில் உடல் பகுதி கிடப்பதாக தகவல் கிடைததது. அங்கு சென்றவர்களுக்கு அங்கு மார்புப் பகுதி மட்டும் கிடைத்தது.

அதேபோன்று பெரியமேடு போலீஸாருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சூளை நடராஜா தியேட்டர் அருகே சட்டண்ணன் தெருவில் பாலித்தீன் பையில் துண்டிக்கப்பட்ட கைகள் வீசப்பட்டு, கிடப்பதை துப்புரவுப் பணியாளர்கள் பார்த்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற பெரியமேடு போலீஸார் கைகளை மீட்டனர். இரண்டும் ஒரே உடலின் பாகங்கள் எனத் தெரியவந்தது. அதில் தலையைத் தவிர மற்ற பாகங்கள் இருந்தன. தலை வேறு எங்காவது போடப்பட்டுள்ளதா என போலீஸார் தேடினர். எங்குமே கிடைக்கவில்லை.

கிடைத்த துண்டிக்கப்பட்ட பாகங்களைச் சேர்த்து தலையில்லா உடல் பாகத்தை போலீஸார், அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) தூங்கவிடாமல் செய்யப்போகிறது இந்த வழக்கு என்பதை அறியாமல் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். சென்னையின் பிரதான இடத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் தலையில்லா முண்டம் கிடைத்த தகவல் சென்னையில் தீயாகப் பரவியது.

ஊடகங்கள், செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியானது. சென்னை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் அப்போது பூக்கடை துணை ஆணையராக (தற்போது மேற்கு மண்டல ஐஜி) பெரியய்யா தலைமையில் பூக்கடை உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன், சுதாகர், யானைக்கவுனி ஆய்வாளர் சுந்தரம், ஜெடிடியா உதவி ஆய்வாளர்கள் இசக்கி பாண்டியன், அருள்முருகன், ரங்கசாமி, பிரபாகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்தார் அப்போதைய இணை ஆணையர் சேஷசாயி.  

தினந்தோறும் தலையைத்தேடுவதும், குற்றவாளி யார், உடலுக்குச் சொந்தமானவர் யார் என தேடுவதிலும் விசாரணை நகர்ந்தது. தலை கிடைத்தால் உயிரிழந்தவர் யார் எனத் தெரியவரும் என்கிற நிலையில் போலீஸாருக்கு ஒரு முக்கியத் துப்பு கிடைத்தது. அது இடுப்பு பகுதிக்கு கீழ் துண்டிக்கப்பட்டுக் கிடந்த கால்களில் இருந்த பேண்ட் பாக்கெட்டுக்குள் இருந்த நகை அடகுக்கடை ரசீது.

அந்த ரசீதைச் சோதித்த போலீஸாருக்கு அதில் சுரேஷ் குமார் கொடுங்கையூர் என்று இருந்தது. முதல் துப்பு கிடைத்ததும் போலீஸார் உடலுக்குச் சொந்தமானவர் ஒருவேளை கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ் குமாராக இருக்கலாம் என யூகித்தனர். சம்பந்தப்பட்ட அடகுக் கடை உரிமையாளரிடம் விசாரித்தனர்.

அவர் சுரேஷ் குமார் என்பவரைத் தெரியும், டிராவல்ஸ் நிறுவனம் வைத்துள்ளார், நகைகளை வாங்கிவிற்கும் தொழில் செய்கிறார் எனத் தெரிவித்தார். அப்பாடா நெருங்கிவிட்டோம் என நினைத்த போலீஸார் சுரேஷ் குமாரின் உறவினர்களைக் கண்டுபிடித்தனர். ஜூன்  6-ம் தேதி பிற்பகலில் வெளியே சென்ற சுரேஷ் குமார் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி தேடுகிறார் என்ற தகவல்  போலீஸாருக்கு அப்போதுதான் தெரிந்தது.

விவரத்தைச் சொல்லி அரசு மருத்துவமனையில் உள்ள உடலைக் காட்டினர். தலையில்லா உடலைப் பார்த்த அவரது மனைவியும் உறவினர்களும் அழுது கதறினர். அது சுரேஷ் குமாரின் உடல்தான் என அவரது உடலில் இருந்த மச்சங்கள், கால் முட்டியில் இருந்த ஆபரேஷன் வடுவை வைத்து அடையாளம் காட்டினர்.

கொல்லப்பட்டவர் பெயர்  சுரேஷ் குமார் (40) என்பதும் கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த அவர் தனது வீட்டிலேயே டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் நகைக் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவருடன் பெற்றோர், மனைவி, 8 வயதிலும், 4 வயதிலும் 2 மகன்கள் வசித்து வந்துள்ளனர். பின்னர் டிஎன்ஏ ஆய்வு மூலம் சுரேஷ் குமார் உடல் என உறுதிப்படுத்தி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொலை சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலையாளிகள் ஈடுபட்டிருக்கலாம். கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சடலத்தின் துண்டிக்கப்பட்ட பாகங்கள், அவற்றைப் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்திய வாகனம் என பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

கொலைக்கான மோட்டிவ் என்ன?  பெண் தொடர்பா? நகை வாங்கி விற்பனை செய்ததில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கொல்லப்பட்டாரா? யாரையாவது நகை வாங்கி ஏமாற்றியதால் கொல்லப்பட்டாரா? என போலீஸார் விசாரணையை நகர்த்தினர். கூடவே தலையைத் தேடவும் போலீஸார் தயங்கவில்லை.

இதோ தலை, அதோ தலை என புரளி கிளம்பியது, தினந்தோறும் தலை கிடைத்ததா என போலீஸாரிடம் வானிலை அறிக்கை கேட்பதுபோல் செய்தியாளர்கள் கேட்பது வாடிக்கையானது. தனிப்படைகள் பம்பரமாகச் சுழன்று யானைக்கவுனி முழுவதும் சல்லடையாகச் சலித்தும் வழக்கு நகராமல் அங்கேயே நின்றது.

கொடூரமாகக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டவேண்டுமென்றால் பலர் சேர்ந்து செய்த கொலையாக இருக்கும். கூலிப்படை வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம். மருத்துவம் அறிந்த யாரேனும்தான் இதைச் செய்திருக்கவேண்டும். காரணம் உடல் பாகங்களை கச்சிதமாக வெட்ட அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றெல்லாம் ஹேஷ்யங்கள் கிளம்பின.

ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் பத்திரிகையாளர்கள் சுரேஷ் குமார் கொலை என்ன ஆனது என்று காவல் ஆணையர் டி.ராஜேந்திரனைக் கேட்பதும், விசாரணையில் உள்ளது எனக் கூறுவதும் வாடிக்கையான நிகழ்வாக மாறிப்போனது. நகை புரோக்கரான சுரேஷ் குமார் கொலை குறித்து யானைக்கவுனியில் உள்ள நகைக்கடைகள் வைத்திருப்போர், நகை செய்வோரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

ரகசியமாக பலர் கண்காணிக்கப்பட்டனர். சிறு அசைவுகளும் கண்காணிக்கப்பட்டன. இப்படியே ஒருமாதம் ஓடிவிட்ட நிலையில் ஒரு நாள் காலை திடீரென பரபரப்பானது. சுரேஷ் குமாரின் தலை கிடைத்துவிட்டது என தகவல் பரவியதை அடுத்து யானைக்கவுனி பகுதிக்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்தனர். ஆனால் அங்கு கிடந்தது ஒரு மண்டை ஓடு. அது சுரேஷ் குமாருடையதாக இருக்கும் என ஆராய்ந்தவர்களுக்கு அது மருத்துவத்துக்குப் பயன்படும் மண்டை ஓடு என அறிந்து சோர்ந்து போயினர். போலீஸாரை வெறுப்பேற்ற யாரோ விஷமிகள் செய்த செயலாக இருக்கலாம் என அப்போது கருதப்பட்டது.

போலீஸார் விசாரணை ஆமை வேகத்தில் நகர்ந்தது. அப்போதுதான் அவர்களுக்கு ஒரு புதிய தகவல் கிடைத்தது. சுரேஷ் குமார் கொல்லப்பட்ட அன்று அவரிடம் 2.150 கிலோ தங்க நகைகள் இருந்தன என்பது விசாரணையில் தெரியவந்தது. நகைக்காக அவரை மர்ம நபர்கள் கொன்றிருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை நகர்ந்தது.

போலீஸ் விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த நகை வியாபாரி கோபியிடம் இரண்டு கிலோ, 150 கிராம் எடையுள்ள தங்கச் செயின்களை, சனிக்கிழமை இரவு சுரேஷ் குமார் வாங்கிச் சென்ற விவரம் தெரியவந்தது.

ஒருவேளை கோபிக்கு இந்தக் கொலையில் தொடர்பு ஏதேனும் இருக்குமோ என்கிற ரீதியிலும், கொலை பற்றி அவ்வப்போது கிடைத்த தகவல் அடிப்படையிலும் தனிப்படைகள் கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சுற்றிய இடத்திலேயே மீண்டும் வந்து நிற்கும் நிலை போலீஸாருக்கு ஏற்பட்டது. ஊடகங்களில் கொலை விசாரணை செய்தி வந்த வண்ணம் இருந்தது. அதனால் போலீஸாருக்கு நெருக்கடியும் அதிகரித்து வந்தது. இதற்கிடையே சுரேஷ் குமார், யானைக்கவுனியில் எங்கெல்லாம் நகை வாங்கி விற்று வந்தார்? அவரது ரெகுலரான வாடிக்கை நகைக் கடைகள் எவை? அவரது வியாபார நண்பர்கள் யார் என தனியாக விசாரணை நடந்தது.

அதில் சிலர் பட்டியலை எடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஒருவர் சிக்கினார். பலபேர் கும்பலாக இந்தக் காரியத்தைச் செய்திருப்பார்கள் என்று யோசித்த போலீஸாருக்கு கொலையாளி ஒரே நபர்தான் என்பது ஆச்சர்யம் அளித்தது. என்னதான் சாமர்த்தியமாகக் கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசியிருந்தாலும் சிறிய தவறினால் அவர் சிக்கினார்.

சுரேஷ் குமாருடன் பழகிய ஒரு நகைக்கடை ஊழியர்தான் அந்தக் கொலையாளி.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நகைக் கடை ஊழியர் நேமிசந்த் சவுத்ரி (43) என்பவர்தான் கொலையாளி என்பதை போலீஸார் உறுதி செய்தனர். இதை உறுதி செய்ய நாம் முன்னரே சொன்னதுபோல் 48 நாட்கள் ஆனது.

போலீஸார் நகைக்கடை ஊழியர்களை விசாரணை நடத்தும்போது நேமிசந்தையும் விசாரித்துள்ளனர். இவரைத் தெரியும் சார், நல்லாப் பழகுவார். நல்ல  மனிதர் சார் என்று அப்பாவியாகக் கூறியுள்ளார் நேமிசந்த். போலீஸார் வழக்கமான விசாரணையினூடே கொலை நடந்த ஜூன் 7-ம் தேதிக்குப் பிறகு அப்பகுதியில் வேலை செய்த ஊழியர்கள் யாராவது அதிக நாள் விடுப்பு எடுத்தார்களா? சொந்த ஊருக்குச் சென்றார்களா என விசாரணை நடத்தியபோது சிலர் இருந்தனர்.

அதில் நேமிசந்தும் இருந்தார். ஆனால் பலரும் வெவ்வேறு நியாயமான காரணங்களால் விடுபட நேமிசந்த் வசமாகச் சிக்கினார். காரணம் அவர் 20 நாட்கள் சொந்த ஊருக்குச் சென்று தங்கியுள்ளார். சாதாரண நகைக்கடை ஊழியர் விமானத்தில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இரண்டு விஷயமும் போலீஸாருக்கு இடிக்க நேமிசந்துக்குத் தெரியாமல் அவரது வீட்டில் சோதனையிட்டனர்.

ஒண்டுக்குடித்தனம் உள்ள அந்த வீட்டில் நேமிசந்தின் வீட்டுக்குள் சென்ற போலீஸார் அங்கு தேடியதில் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வெளியே வந்தபோது எதிர்வீட்டுப் பெண்மணி மூலம் முக்கியத் துப்பு கிடைத்தது. எதிர் வீட்டுப் பெண்ணிடம் ஒரு பார்சலை நேமிசந்த் சமீபத்தில் கொடுத்து வைத்திருந்த விவரத்தை அந்தப் பெண்மணியே போலீஸாரிடம் கூறினார்.

அது என்ன பார்சல் என போலீஸார் கேட்க, ''தெரியவில்லை சார். வீட்டில் மனைவி இல்லை. திருட்டுப் பிரச்சினை. இதை வையுங்கள்.  பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னார்.  போலீஸ் வந்ததைப் பார்த்தால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது'' என்றார். பார்சலை பிரித்துப் பார்த்த போலீஸாருக்கு அனைத்தும் நொடியில் விளங்கியது.

பளபளவென்று கேரள மாடல் தங்கச்சங்கிலிகள் மின்னின. உடனடியாக காவல் நிலையம் வந்த அவர்கள் நகைகளை எடை போட்டதில் அது 2.150 கிராம் இருந்தது. சந்தேகமே இல்லை சுரேஷ் குமாரிடம், கோபி என்பவர் கொடுத்தது என உறுதிப்படுத்திய போலீஸார் அடுத்து நேமிசந்த் தப்பிவிடாமல் இருக்க அவரை கடைக்குச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

''ஏன் கொலை செய்தாய்?'' என போலீஸ் கேட்க, ''நான் ஏன் சார் கொலை செய்யப்போகிறேன்'' என நேமிசந்த் சொல்ல நகை பார்சலை போலீஸார் காட்டியவுடன், ''சார் அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்'' என்று கொலை செய்ததை ஒப்புக்கொண்டு நடந்ததைக் கூறினார் நேமிசந்த்.

ராஜஸ்தானிலிருந்து சென்னை வந்து நகைக்கடையில் வேலை பார்த்து வந்த எனக்கு சுரேஷ் குமாரின் நட்பு கிடைத்தது. வெள்ளி வியாபாரம் செய்து வந்த எனக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. எப்படியாவது அதை ஈடுகட்ட  பணம் சம்பாதிக்க வேண்டும் என திட்டமிட்டேன்.

ஜூன் 6-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த நகை வியாபாரி கோபி, இரண்டு கிலோ நகைகளை சுரேஷ் குமாரிடம் அளித்து, விற்பனை செய்து கொடுக்குமாறு கூறிய தகவல் எனக்கு கிடைத்தது. அந்த நகைகளை கொள்ளையடித்தால் என் கஷ்டமெல்லாம் தீரும் என முடிவு செய்தேன்.

நகைகளை வாங்க  நல்ல பார்ட்டி  இருப்பதாக சுரேஷ் குமாரிடம் கூறினேன். அதை நம்பி அவர் என்னுடன் வந்தார். மாலை 4 மணி அளவில் எனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டு, வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். பார்ட்டி அங்கு வருவதாக தெரிவித்தேன். வீட்டிற்குள் வந்த அவர் நகைகளை சோதித்தபடி இருக்க அவரைக் கொல்ல முடிவெடுத்து சுரேஷ் குமாரின் பின்னந்தலையில் இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்தேன்.

உடலை பாத்ரூமில் போட்டுவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு நகைக் கடை வேலைக்குச் சென்றுவிட்டேன். இரவு 9 மணிக்கு பணி முடித்து வெளியில் சாப்பிட்டுவிட்டு  வீடு திரும்பினேன். வீட்டில் பாத்ரூமில் ரத்தம் முழுவதும் வெளியேறி உடல் கிடந்தது. உடலை அப்புறப்படுத்த வேண்டும்.  இரண்டாவது மாடியில் எனது வீடு. அங்கிருந்து உடலை அப்புறப்படுத்தினால் சிக்கிக் கொள்வேன். அதனால் உடலைத் துண்டாக்கி அப்புறப்படுத்த முடிவு செய்தேன்.

பட்டாக்கத்தியால் சுரேஷ் குமாரின் உடலை நான்கு துண்டுகளாக வெட்டினேன். தலை, கை, கால் என அறுத்து எடுத்தேன். அவற்றைச் சுத்தமாகக் கழுவி, பிளாஸ்டிக் பையில், அட்டைப்பெட்டியில்  போட்டு மூன்று இடங்களில் எறிந்தேன். வீட்டை முழுவதும் சுத்தமாகக் கழுவினேன்.

கொலை செய்த அன்றிரவு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக உடலை அப்புறப்படுத்தினேன். இதில் எனக்கு மறுநாள்  குளிர் ஜுரம் வந்துவிட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில், சென்று சிகிச்சை பெற்றேன். அங்கு எனக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள்.

பின்னர் வீடு வந்த நான் தங்கச் செயின்களை எனது வீட்டில் மறைத்து வைத்தேன். கொலை நடந்த வீட்டில் தூங்குவதற்குப் பயமாக இருந்தது. தெரிந்த நண்பரிடம் கடன் வாங்கி, சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்குச் சென்றேன். அங்கிருந்து சொந்த ஊரான ராஜஸ்தான் சென்று அங்கேயே 20 நாட்கள் தங்கிவிட்டேன்.

பின்னர் மீண்டும் சென்னை வந்தேன். கொலை பிரச்சினைகள் முடிவுக்கு வந்தபின் நல்ல நாள் பார்த்து நகையை விற்கலாம் என முடிவு செய்தேன். ஒருவேளை போலீஸ் என்னைச் சந்தேகப்பட்டு வீட்டை சோதனையிட்டால் என்ன செய்வது என்பதற்காக அதை துணி பார்சல் போல் பேக் செய்து எதிர்த்த வீட்டில் உள்ள பெண்மணியிடம் கொடுத்து வைத்திருந்தேன்.

போலீஸார் என்னைச் சந்தேகப்படவில்லை என்பதால் சகஜமாக நடமாடத் தொடங்கினேன். எங்கள் நகைக் கடைக்கு வந்த போலீஸார், கடையில் உள்ள ஊழியர்கள் பற்றி விசாரித்தனர். என்னையும் விசாரித்தனர்.  நான் அப்பாவியாக பதில் கூற விட்டுவிட்டனர். ஆனால் ஊருக்குச் சென்றதும், விமானத்தில் சென்றதும், நகை பார்சல் சிக்கியதும் நான் சிக்கிக்கொள்ள காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார் நேமிசந்த்.

சாதூர்யாமாக கொலையைத் துப்பு துலக்கிய போலீஸார் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது சுரேஷ் குமாரின் தலை. நேமிசந்த் கொடுத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் குப்பைமேட்டில் 48 நாட்களுக்கு முன் வீசப்பட்ட தலையை போலீஸார் என்ன தேடியும் கிடைக்கவில்லை.

இந்தக் கொலை வழக்கில் திறமையாக துப்பு துலக்கி கொலையாளிக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்த தனிப்படை போலீஸாருக்கு ஆணையர் டி.ராஜேந்திரன் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

மீண்டும் ஒரு துப்பு துலக்கப்பட்ட சுவாரஸ்ய கொலை வழக்கு விவரத்துடன் தொடரும்…. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்