குள்ள குள்ள வாத்து..குவா குவா வாத்து...!

By ஆர்.டி.சிவசங்கர்

குள்ள குள்ள வாத்து,  குவா குவா வாத்து, மெல்ல உடலைச் சாய்த்து, மேலும் கீழும் பார்த்து, மெல்லமாக நடக்கும் சின்ன மணி வாத்து...என்று குழந்தைப் பருவத்தில் குதூகலமாய்ப் பாடியுள்ளோம். இன்னமும் கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகள் அபிநயத்துடன் பாடுவது நம்மை ஆச்சரியப்படுத்தும்.அதேபோல, வலசை வந்த புள்ளி மூக்கு வாத்துகள் உதகையிலேயே தங்கி விட்ட அதிசயம், பறவையியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உதகை ஏரியிலேயே அவை தங்கியுள்ளன.

நீலகிரி  மாவட்டத்தின் காலநிலை ஐரோப்பிய நாடுகளின் காலநிலையை ஒத்துள்ளது. இதனால், ஐரோப்பாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர்  நீலகிரி மாவட்டத்துக்கு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல்,  வெளிநாட்டுப் பறவையினங்களும் நீலகிரி மாவட்டத்துக்கு வலசை வருகின்றன.

குறிப்பாக, குளிர் காலத்தில் இனப்பெருக்கத்துக்காக ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் நீலகிரிக்கு வருகின்றன.

இனப்பெருக்கத்துக்காக வரும் பறவைகள்,  அதிக அளவில் உதகை ஏரி மற்றும் அதைச்  சுற்றியுள்ள சதுப்பு நிலங்கள், தலைகுந்தா பகுதியில் உள்ள காமராஜ் சாகர் அணை போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.

இவை, இங்கு கூடு கட்டி முட்டையிட்டு, குஞ்சு பொரித்த பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பி விடும்.

தற்போது உதகை ஏரியில் கிருஷ்ணர் பருந்துகள்  (பிராமினி கைட்) அதிக அளவு  காணப்படுகின்றன. இவை, இமயமலை மற்றும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள சதுப்பு  நிலங்கள்,  நீர் நிலைகளில் காணக் கூடியவை.

மியான்மர் மற்றும் வடகிழக்கு அசாம்  மாநிலத்தில் இருந்து வந்துள்ள புள்ளி மூக்கு வாத்து (ஸ்பாட் பில் டக்), வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர் மற்றும்  இந்தியாவின் சில பகுதிகளில் காணப்படும் உண்ணிக்கொக்கு (கேட்டில் ஈக்ரெட்), நாம  கோழி (காமன் கூட்) போன்ற பறவைகளும் வந்துள்ளன.

இவ்வாறு, ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் உதகைக்கு வந்தாலும், வலசை வந்த புள்ளி மூக்கு வாத்து உதகையிலேயே தஞ்சமடைந்துள்ளது பறவையியல் ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அறக்கட்டளை அறங்காவலர் எம்.சிவதாஸ் கூறும்போது, "நீலகிரிக்கு வாலாட்டி குருவி, உள்ளான், உட் காக், நாம கோழி, நீர் கோழி, ஸ்பாட் பில் டக், கிரே ஹெரன், சாம்பல் நிற நாரை பறவைகள் அதிக அளவில் வலசை வந்துள்ளன.

இதில், உட் காக் பறவை மிகவும் அரிதானது. அதேபோல, ஸ்பாட் பில் டக் எனப்படும் புள்ளி மூக்கு வாத்து அரிதாக காணக்கூடியது. இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த வாத்துகள் சொந்த நாடு திரும்பாமல்,  உதகை ஏரியிலேயே தங்கியுள்ளன.

இவை தொடர்ந்து இங்கேயே தங்கியுள்ளதால்,  அவற்றின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நீலகிரி  சூழல் அவற்றுக்கு ஏற்றதாக மாறியுள்ளதே, அவை திரும்பாததற்கு காரணமாக இருக்கலாம்" என்றார்.

பல வண்ணங்களில், பல ரகங்களில் பறவை இனங்கள் உதகை ஏரியை முற்றுகையிட்டுள்ளதால், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து,  பறவைகளை கண்டு ரசிக்கின்றனர். குறிப்பாக,  இந்த புள்ளி மூக்கு வாத்துகள், தங்களுடைய குஞ்சுகளுடன் கூட்டமாக ஏரியில் நீந்துவதை சுற்றுலாப் பயணிகள் மெய்மறந்து கண்டு ரசிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளைக் கண்டு  பழகி விட்ட இந்த வாத்து கூட்டம், படகுகள் அருகில் சென்றாலும், ஓடி ஒளிந்து கொள்ளாமல்,  தங்கள் இஷ்டத்துக்கு நீந்துவது, இரையைத் தேடும் பணிகளில் ஈடுபடுகின்றன.

வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும்

"ஆண்டுதோறும் பல பறவையினங்கள் உதகைக்கு வலசை வரும் நிலையில், அவற்றின் வாழ்விடங்கள் அழிந்து வருவது வேதனைக்குரியது" என்கிறார்  உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன்."பறவையினங்கள் பெரும்பாலும் சதுப்பு நிலங்களில் கூடு கட்டி வசிக்கின்றன. உதகையில் உள்ள பல சதுப்பு நிலங்களில் கட்டிடக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் கொட்டப்படுகின்றன. தற்போது, உதகை நகரில் ஒன்றிரண்டு சதுப்பு நிலங்களே மீதமுள்ளன. அவற்றில் முக்கியமானது, பேருந்து நிலையம் மற்றும் ஏரிக்கு இடையே உள்ளது. உதகை ஏரிக்கு வலசை வரும் பறவையினங்களுக்கு வாழ்விடம் இந்த சதுப்பு நிலம் மட்டுமே.இந்த சதுப்பு நிலத்துக்கு, உதகை பேருந்து நிலையம், கழிவுநீர் மற்றும் கட்டிடக்  கழிவுகளால்

ஆபத்து ஏற்பட்டுள்ளது. உதகை பேருந்து நிலையப் பணிமனையிலிருந்து பேருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் உட்பட கழிவுகள் நேரடியாக இந்த சதுப்பு நிலத்தில் வெளியேற்றப்படுகின்றன.

எண்ணெய் படலம் சதுப்பு நிலம் முழுவதும் பரவி, உதகை ஏரியிலும் கலக்கிறது.கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதால் சதுப்பு நிலத்தின் பரப்பளவும் குறைந்து வருகிறது. பறவையினங்களின் முக்கிய வாழ்விடமான சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத் துறை இவற்றைப் பாதுகாத்தால்தான், சூழல் சமன்பாட்டை நிலைநாட்ட முடியும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்