வேளாண் பயன்பாட்டுக்கு ரேடார் செயற்கைகோள்!- அசத்தும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

By த.சத்தியசீலன்

வேளாண்மை மேம்பாட்டுக்காக  ரேடார் செயற்கைகோளைப் பயன்படுத்தி, விவசாயிகளுக்குத் துல்லியமான தகவல்களைத் தருகிறது  கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். இந்திய கிராமங்களில் வாழும் மக்களுக்கு வேளாண்மையும், வேளாண் சார்ந்த தொழில்களுமே வாழ்வாதாரம். நாட்டின் முதுகெலும்பான விவசாயமே, அதிகப்படியான மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கும் துறையாகும். பல்லாயிரம் ஆண்டுகளாய் நாம் விவசாயத்தில் ஈடுபட்ட போதிலும், சமீப ஆண்டுகளில்தான் வேளாண்மையில் நவீனத் தொழில்நுட்பம் அதிக அளவில் புகுத்தப்படுகிறது.

நாம் தற்போது ‘மின்னணு புரட்சியில்’ நுழைந்துள்ளோம். ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு வேளாண்மையும் விதிவிலக்கல்ல. உழவுத் தொழிலை முதன்மையாகக் கொண்டு வாழும் கிராமப்புற மக்களுக்கு, மாறி வரும் புதிய நுட்பங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து தெரிவிப்பது அவசியம்.

நாற்று நடுவதில் தொடங்கி, அறுவடை வரை ஒவ்வொரு கட்டத்திலும் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.  கருவிகள், இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த வகையில்,  விவசாயத்தில் ரேடார் செயற்கைகோளைப் பயன்படுத்தி அசத்தி வருகிறது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.

"வேளாண் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மற்றும் புவி தகவலியல் துறையின் மூலம், ரேடார் செயற்கைகோள், ஆளில்லா விமானம், மொபைல் அப்ளிகேஷன் என நவீனத் தொழில்நுட்பங்களால் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன.

ரேடார் செயற்கைகோள் மூலம்,  தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களைக் கண்டறிய முடியும். என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன? சாகுபடி பரப்பளவு எவ்வளவு? பயிர் எப்போது முளைக்கும்?

அதன் வளர்ச்சி எப்படி இருக்கும்? உள்ளிட்ட பல விவரங்களைக் கண்டறிய முடியும். ஏற்கெனவே, செயற்கைகோள் மூலம் நெல் பயிரின் மகசூல் கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக,  விவசாயிகள் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவர்களது  செல்போனில் 'லொகேஷன்' என்ற ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருந்தால், செயற்கைகோள் மூலம் அந்த இடம் அடையாளம் காணப்பட்டு, அங்கு நெற்பயிர் உள்ளதா? பயிர் என்ன நிலையில் உள்ளது? எவ்வளவு மகசூல் கிடைக்கும்? என்பதை  துல்லியமாக கணித்து கூற முடியும்.

கடந்த 2012-ல் தஞ்சை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் சோதனை மேற்கொண்டோம்.  2014 முதல் காவேரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சோதனை செய்தோம்.  2015   முதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெற்பயிரைத் தொடர்ந்து, பருத்தி, மக்காச்சோளம், பயறுவகைகள், நிலக்கடலை, வாழைப் பயிர்களில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பா பருவத்தில் 16 மாவட்டங்களில் 11 லட்சம் ஹெக்டோ் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது, செயற்கைகோள் உதவியுடன் கண்டறியப்பட்டது. இதேபோல, பெரம்பலூர், அரியலூர், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மக்காச்சோள சாகுபடி பரப்பளவும் கண்டறியப்பட்டது” என்றார் பல்கலைக்கழக  துணைவேந்தர் என்.குமார்.

செயற்கைகோளின் செயல்பாடு

"பயிரிடும் காலத்தில் மேகமூட்டம் அதிகமாக இருந்தாலும், இந்த ரேடார் செயற்கைகோள் மூலமாக கணக்கிட்டால், விவரங்கள்  துல்லியமாக இருக்கும். இந்த சேவையில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.  உலக அளவில் 7 செயற்கைகோள்கள்  விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 இத்தாலியின் காஸ்மோ ஸ்கைமெட், ஜெர்மனியின் டெராஸ்சார், இந்தியாவின் ரிசாட், ஐரோப்பாவின் சென்டினல் 1-ஏ செயற்கைக்கோள்கள் மூலம் தகவல்களைப் பெற்று,  பயன்படுத்தி வருகிறோம்.  12 நாட்களுக்கு ஒருமுறை தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சி குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

டெல்டா மாவட்டங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வருகிறது. 'மேப் ஸ்கேப்' என்ற மென்பொருள் இதை துல்லியமாகக் கணித்து தருகிறது. சாகுபடி பரப்பளவு 90-96 சதவீதமும், மகசூலை 87-90 சதவீதமும் துல்லியமாக இருக்கும்” என்கிறார், தொலை உணர்வு மற்றும் புவி தகவலியல் துறைத் தலைவர் செ.பழனிவேலன்.

 பயிர் காப்பீட்டுத் திட்டம்

மேலும், "தமிழகத்தின் மொத்த பயிர் சாகுபடி பரப்பான 47.14 லட்சம் ஹெக்டேரில், 19.3 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகம்  கடற்கரையையொட்டியுள்ள மாநிலம் என்பதால், வறட்சி, புயல், வெள்ளம் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால், பயிர் சாகுபடி வெகுவாகக் குறைகிறது.

இதை நிவர்த்தி செய்யும் வகையில், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர்க்  காப்பீட்டு திட்டங்கள் மூலம் இழப்பீடு வழங்குகின்றன.  விதைப்பு தவிர்க்கப்பட்ட பயிர்கள், விதைத்த பயிர் முளையிலேயே கருகுதல், பயிர் வளர்ச்சிக் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல் போன்றவற்றால் பாதிக்கப்படுதல், மகசூல் இழப்பு ஏற்படுதல் போன்றவற்றுக்கு விவசாயிகள் காப்பீடு மூலம் இழப்பீடு பெறலாம்.

விவசாயிகள் காப்பீடு பெறுவதற்கு துல்லியமான பாதிப்பு கணக்கீடு அவசியம். அந்தப் பணியை செயற்கைகோள் மூலம் துல்லியமாக மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த 2016-17-ல் 2,516 கிராமங்களிலும், 2017-18-ல் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் பயிர் பாதிப்பு கணக்கிடப்பட்டு, தமிழக அரசுக்கு விவரங்கள் அளிக்கப்பட்டன.  இதன்மூலம் கடந்த 2016-17-ல் ரூ.3,080 கோடியும்,

2017-18-ல் ரூ.1,000 கோடிக்கு மேலும் தமிழக விவசாயிகள் காப்பீட்டுத் தொகை பெற்று பயனடைவதற்கு, இந்த தொழில்நுட்பம் உதவியாக இருந்துள்ளது" என்றும் பழனிவேலன் தெரிவித்தார்.

ட்ரோன் பயன்பாடு...

“ஹெலிகேம், ஆளில்லா விமானம் என ட்ரோன் இருவகைப்படும். ஹெலிகேம் 100 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது. 4 கிலோமீட்டர்  சுற்றளவில் பறந்து செல்லக்கூடியது. மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.ஆளில்லா விமானம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன், விவசாயத்துக்கு ஏற்றவாறு தயாரித்து   பயன்படுத்தி வருகிறோம். அது 80-120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு  கிலோமீட்டர் உயரம் வரை பறக்கும். அதில் டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் உதவியுடன் தஞ்சை, பேராவூரணி, திருவாரூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை பகுதிகளில் தோட்டங்கள் துல்லியமாக படமெடுக்கப்பட்டு, வேளாண்மைப்  பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கஜா புயலால் தென்னை மரங்கள் சேதமடைந்ததை இதன் மூலம் படம் பிடித்து, தகவல்களை தமிழக அரசுக்கு அனுப்பினோம்” என்றார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் இரா.குமரபெருமாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்