எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியால் கல்வித் தரம் கெட்டுவிட்டதா? - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

By நந்தினி வெள்ளைச்சாமி

இந்தியா முழுவதும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை இப்போது அமலில் உள்ளது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்த நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், இடை நிற்றல் உயரும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பொதுத்தேர்வு முறையை நடப்பாண்டில் அமல்படுத்த அரசு ஆணை ஏதும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.

தமிழகம் மாதிரியான கல்வியில் முன்னோடி மாநிலம் ஏன் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை எதிர்க்கிறது என்பது குறித்து, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசுவிடம் பேசினோம்.

கல்வியாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்ததும், 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லையென்றிருக்கிறார் அமைச்சர். இந்த அறிவிப்பு போதுமா?

பாஜக அரசு, கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய கல்விக்கொள்கையைக் கொண்டு வந்தனர். அதன்படி, 5, 8-ம் வகுப்புகளுக்கு நாடு முழுவதும் பொதுத்தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என, நான் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினேன். அதற்கு, சட்டப்பேரவையில் சொல்ல முடியாது, அமைச்சரவை கூடி முடிவு எடுத்த பிறகு தான் சொல்ல முடியும் என அமைச்சர் பதில் அளித்தார். இது நம்முடைய மாநிலத்திற்கு நல்லது அல்ல என எதிர்த்திருந்தால் நாம் பாராட்டலாம். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் அதிமுகவுக்கு மறைமுகமாக இருக்கக்கூடிய எண்ணம்.

ஆனால், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதற்கு மாறாக, பொதுத்தேர்வு குறித்து கல்வித்துறை அதிகாரி சுற்றறிக்கை அனுப்புகிறார் என்றால், ஒன்று அமைச்சர் சட்டப்பேரவையை தவறாக வழிநடத்தியிருக்க வேண்டும் அல்லது அந்தத் துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையென்று அர்த்தம். அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்களா?

கல்வித்துறை இயக்குநரகத்திற்கு அமைச்சரைத் தாண்டிய அதிகாரம் இருக்கிறதா? இப்போது இந்த ஆண்டு மட்டும் கொண்டு வரவில்லை என தேர்தலை மனதில் வைத்து அமைச்சர் சொல்கிறார். அப்படியென்றால் அடுத்த ஆண்டிலிருந்து இதனை நடைமுறைக்குக் கொண்டு வருவார்களா? மத்திய பாஜக அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே அடிபணிந்து கேட்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணம். இதில் முடிவெடுக்க வேண்டியது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. இவர்கள் 'இல்லை' என சொல்ல வேண்டியது தானே. இவர்களைப் பொறுத்தவரை தினம் ஒரு அறிவிப்பு வெளியாக வேண்டும். ஒருநேரம் இருக்கிறது என அறிவிப்பு, கொஞ்ச நேரத்தில் இல்லை என அறிவிப்பு. கல்வியில் இத்தகைய குளறுபடிகள் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கிறது.

கல்வியில் முன்னோடி மாநிலம் என கருதப்படும் தமிழகம், ஏன் பொதுத்தேர்வை எதிர்க்க வேண்டும்?

நீட் தேர்வைப் போன்று இதற்கும் தரம் என்பதைக் காரணம் சொல்கிறார்கள். கட்டாயத் தேர்ச்சியால் கல்வியின் தரம் கெட்டுவிட்டது என்கிறார்கள். தரம் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள்? இது மாணவர்களை சமூக பின்புலத்தின் அடிப்படையில் வடிகட்டும் முயற்சி. கிராமப்புற மாணவர்கள் 8-ம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது என்ற நிலையை இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகின்றனர். கட்டாயத் தேர்ச்சி முறை இருந்தபோது படித்தவர்கள் தானே, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, ஐஏஎஸ் அதிகாரிகளாக அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெறுபவர்களாக இருக்கின்றனர். இப்போது 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த என்ன அவசியம் வந்தது?

அப்படியென்றால், இந்த பொதுத்தேர்வை ஆதரிப்பவர்கள் கூறும் 'தரம்' என்பது என்ன?

அவர்கள் எதனை 'தரம்' என்கிறார்கள் என்பது எனக்கும் புரியவில்லை. 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன தரம் இருக்க வேண்டும்? 5-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு வைத்துத் தான் அறிவுத்திறனை, தரத்தைக் கண்டுபிடிப்பேன் என்பதற்கு என்ன அறிவியல் ரீதியான ஆதாரம் இருக்கிறது? எப்படி இதனை நிரூபிப்பீர்கள்? என்ன அநியாயம் இது? இந்த பொதுத்தேர்வு சமூக நீதியின் மீது நடத்தப்படும் மறைமுகத் தாக்குதல். மத்திய அரசின் இத்தகைய அனைத்து முயற்சிகளுக்கும் மாநில அரசு துணை போகிறது. தரம் என்கிற மாயத்தோற்றத்தில் மயங்கி, இவர்கள் உருவாக்கக்கூடிய இத்திட்டம் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

வடிகட்டத்தான் இந்த முடிவு என்றால், கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் தான் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு என அரசு சொல்கிறதே?

2018-19 ஆம் ஆண்டில், தமிழகத்தில் இடைநிற்றல் விகிதம் அதிகமாகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 6, 7, 8 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் அதிகமாகியிருக்கிறது. மற்றொரு புறத்தில், மாணவர்களின் சேர்க்கை விகிதம் கூடுகிறது என பெருமைப்படும் வேளையில், இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பது வேதனையானது.

இதுகுறித்து அமைச்சரிடம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோது, நேரடியாக பதில் சொல்லாமல், பள்ளி செல்லாத குழந்தைகளின் விகிதம் தமிழ்நாட்டில் தான் மிகக்குறைவு என்கிறார். 99.9% பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தாயிற்று, ஆனால், சேர்க்கும் குழந்தைகளை நிலைநிறுத்திக் கொள்ளும் (ரிட்டென்ஷன் ரேட்) சதவீதம் குறைகிறது. இந்த பொதுத்தேர்வு வந்துவிட்டால், நிச்சயமாக இடைநிற்றல் விகிதம் அதிகமாகும். இதனால், கிராமப்புற மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவர். பெண் குழந்தைகள் படிக்க முடியாத நிலை ஏற்படும். 5, 8 ஆம் வகுப்புகளில் ஃபெயில் ஆகிவிட்டால், அதற்கு மேல் பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். உயர் கல்விக்கு செல்வதற்கு முன்பான, உயர்நிலை படிப்புக்கே செல்ல முடியாத நிலை ஏற்படும். பெண் கல்வி  பாதிக்கப்படும். கல்வி உரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை இத்தனை ஆண்டுகள் போராடி, கைப்பிடித்து அழைத்து வந்திருக்கிறோம். இது மீண்டும் பின்னோக்கி செல்லும் நிலையை ஏற்படுத்துகிறது. கல்வி, மருத்துவத்தில் ஏற்படும் பின்னடைவு நீண்ட கால எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே நீட், இப்போது இந்த பொதுத்தேர்வு விவகாரம் என, மத்திய அரசு கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இதற்கு என்ன தான் தீர்வு?

8, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள். நடுவில் அந்த 9 ஆம் வகுப்பு மட்டும் என்ன பாவம் செய்தது? அதை மட்டும் ஏன் விட வேண்டும்? எல்கேஜியில் இருந்தே பொதுத்தேர்வு வைப்போம் என சொல்லிவிடலாம். ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கல்வி உரிமைகளை, கல்விச்சூழலை புரிந்துகொள்ளாமல் அரசியல் மயமாக்கி மத்திய அரசின் எல்லாவற்றுக்கும் 'ஆமாம் சாமி' போடும் நிலைக்கு அதிமுக வந்துவிட்டது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற வாதம் வலுத்து வரும் நிலைமையில், இருக்கும் உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைக்கிறது. கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வருவது தான் ஒரே தீர்வு. இப்படி வாய்ப்பு கொடுக்கும் இடங்களிலாவது நம் உரிமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும், இது இரண்டாவது தீர்வு. அரசியல் ஆதாயத்துக்காக மாணவர்களின் நலனைப் பலிகடா ஆக்குகிறார்கள்.

10, 12 வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்தாலே தற்கொலை எண்ணம் மாணவர்களிடையே உள்ளது. அப்படியிருக்கையில் இது மாணவர்களின் உளவியலை எப்படி பாதிக்கும்?

எல்லாவற்றுக்கும் பொதுத்தேர்வு என்பது மிகப்பெரும் சுமையை அந்தக் குழந்தைகளிடம் சுமத்தும். ஒரு 10 வயதுக் குழந்தைக்கு பொதுத்தேர்வு நடத்தி கற்றல் திறனைக் கணிக்கப் போகிறேன் என்பது எவ்வளவு முட்டாள்தனமானது? அதற்கு எந்தக் காலத்திலும் ஒத்துக்கொள்ளக் கூடாது. பெரும் மன அழுத்தத்திற்கு குழந்தைகள் தள்ளப்பட்டு விடுவார்கள். மிகப்பெரும் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக்கப்படுவார்கள். படிக்க வேண்டாம் என்ற சூழ்நிலை ஏற்படும். கிராமத்தில் பெண் குழந்தைகள் தோல்வியடைந்தால் அடுத்தாண்டு படிக்கட்டும் என நினைக்க மாட்டார்கள். திருமணம் செய்து வைப்பார்கள். குழந்தைத் திருமணங்கள், குழந்தைத் தொழிலாளர் முறை அதிகரிக்கும். இதனால் தான் எதிர்க்கிறோம். யார் படிக்க வேண்டும் என இத்தனை ஆண்டுகள் போராடினோமோ அந்த அடிப்படையையே தகர்த்துவிடும். 

ஒருபுறம், பாடத்திட்டத்தில் மாற்றம் , 10, 12 வகுப்புகளில் ரேங்க் முறையை ஒழித்தது என இந்த அரசு கல்வித்துறை சாதனைகளுக்காக போற்றப்படும் என சொல்லப்படுகிறதே?

கல்வித்துறையில் என்ன புரட்சி செய்துவிட்டார்கள்? கல்வித்துறையில் தான் இந்த அரசின் ஒட்டுமொத்த குழப்பங்களும் உள்ளன. 12-ம் வகுப்புக்கு வினாத்தாள் வடிவத்தை மாற்றுகின்றனர். எப்போது? அரையாண்டுத் தேர்வெல்லாம் முடிந்து பொதுத்தேர்வு நெருங்கும் வேளையிலே. கல்வித்துறையில் எல்லா குழப்பங்களையும் ஏற்படுத்திவிட்டு, நாங்கள் கல்வியில் புரட்சி செய்துவிட்டோம் என்கின்றனர். பாடத்திட்ட மாற்றத்தால் கல்வியை மேம்படுத்தி விட்டதாக சொல்வதையெல்லாம் நான் ஒப்புக்கொள்ளவில்லை. 11-ம் வகுப்பில் முதல் பாடப்பிரிவை எடுத்திருப்பவர்கள் கடும் சரிவைச் சந்தித்திருக்கின்றனர். 11-ம் வகுப்பு இயற்பியல் பாடத்திட்டத்தில், கல்லூரியில் படிக்க வேண்டியதை வைத்துள்ளனர். அதன் விளைவால், தோல்வியடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், முதல்நிலை பாடத்தை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் சரிந்துவிட்டது.

ஒரு மாணவனுக்கான பாடத்திட்டம் அவனின் வயதுக்கும் வகுப்புக்கும் ஏற்றாற்போல் இருக்க வேண்டும். கேட்டால், தேசிய அளவிலான தேர்வுகளுக்கு தயார்படுத்துவதாகச் சொல்கின்றனர்.

 சமீபத்தில், நடந்துமுடிந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் அதிகமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நீங்கள் சொன்ன பாடத்திட்டத்தை படித்துச் சென்றவர்களா? இவர்கள் எல்லோருமே புதிய பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இல்லை. அதற்கு முன்பிருந்த பாடத்திட்டத்தை படித்து வந்தவர்கள் தான்.  11-ம் வகுப்பில் தோல்வியடைந்தாலும், 12-ம் வகுப்புக்கு செல்லலாம் என்கின்றனர். அப்புறம் எதுக்கு 11-க்கு பொதுத்தேர்வு? குழப்பங்களின் மொத்த உருவமாக கல்வித்துறை இருக்கிறது.

உண்மையில் கல்வித் தரத்தை மேம்படுத்த அடிப்படையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்?

அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் உள்ளனர். மற்ற மாநிலங்களைப் போல் இல்லை. என்ன மாதிரி மாணவர்கள் கற்றல், கற்பித்தல் நிகழ வேண்டும் என்பதை முறையான வழிகளில் பயின்ற ஆசிரியர்கள் நம் மாநிலத்தில் தான் இருக்கின்றனர். அந்த ஆசிரியர்களை ஊக்குவித்து குழந்தைகளுக்கான நல்ல பாடத்திட்டத்தைக் கொண்டு வந்து சிந்தனா சக்தியை பெருக்கினாலே போதும். ஆனால், ஆசிரியர்கள் போராடும் நிலைமை இங்கு இருக்கிறது. அவர்களுக்கென திட்டங்கள் இல்லை.

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கின்றனர். ஆனால், அங்கு  மாண்டிசோரி பயின்ற ஆசிரியர்கள் இல்லை. 1-5-ம் வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களை நியமிக்கின்றனர். எல்கேஜி - யுகேஜிக்கு ஆங்கிலம் வழிக் கற்பித்தல் என்றால், ஒன்றாம் வகுப்பில் என்ன வழியில் படிப்பார்கள்? தமிழ்வழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் கொண்டு வரும் முயற்சியில் இந்த அரசு ஈடுபடுகிறது. தமிழ்வழிக்கல்வியை முற்றிலும் அழிக்க வேண்டும் என திட்டம் ஏதும் இந்த அரசிடம் இருக்கிறதா? கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தில் பள்ளிக்கல்வி சீரழிந்து விட்டது. ஆடம்பர அறிவிப்புகளே உள்ளன. அறிவிப்புகளுக்குப் பின்னால் ஆய்வுகள் இல்லை.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்