வெயிலோடு உறவாடினால் நல்லது!

By க.சக்திவேல்

குளிர்காலத்தோட இறுதிக் கட்டத்துல இருக்கோம். இனி வர்ற மாதங்கள்ல வெயில் வாட்டிவதைக்கும். அப்போ ஜில்லுனு இருக்கற தண்ணீல குளிச்சாகூட உடம்பு சூடு குறையாது. இதுல வெயிலோடு உறவாடுவது தேவையா” எனக் கேட்கலாம். பல வெளிநாடுகளில் வெயில் கிடைக்காதா என ஏங்கிக் கிடக்கின்றனர். கடற்கரையோரம் சாய்வு நாற்காலிகளில் குறைந்த ஆடைகளோடு படுத்திருக்கும் வெளிநாட்டவரை திரைப்படங்களில் பார்த்திருப்போம். அவர்கள் ஏதோ பொழுதுபோக்குக்காக அப்படிச் செய்வதில்லை. உடலில் சூரிய ஒளி பட வேண்டும் என்பதே அதற்குக் காரணம். ஆனால், வெயிலே உடலில் படாதவாறு தற்காத்துக்கொள்வதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டோம் நாம்.

எலும்புகள், மூட்டுகள் வலுவாக இருக்கவும், தோல் நன்றாக இருக்கவும் ‘வைட்டமின் டி’ அவசியம். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ‘வைட்டமின் டி’ சத்துக் குறைபாடு அதிகரித்து வருகிறது. சூரிய வெளிச்சம் போதிய அளவு உடலில் படாமல் போவதே இதற்குக் காரணம்.

“இயற்கையா இலவசமா கிடைக்கற சூரியஒளிதான் எல்லா உயிர்களின் இயக்கத்துக்கும் ஆதாரம். அதனால, வெயிலைப்  பாத்து நாம பயப்பட வேண்டியதில்ல. சூரிய ஒளியில ‘வைட்டமின் டி’ அதிக அளவுல இருக்கு. சூரிய ஒளியில `விசிபிள் கதிர்கள்’, `இன்ஃப்ரா ரெட் கதிர்கள்’, `அல்ட்ரா வயலெட் கதிர்கள்’னு மூனுவிதமான கதிர்கள் இருக்கும். விசிபிள் கதிர்களை கண்ணால பாக்கலாம். இதுல ஏழு நிறங்கள் வெளிப்படும். இந்த ஏழு நிறங்கள்ல நம்ம உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான நன்மைகள் இருக்கு. இத அடிப்படையா வெச்சுதான் `நிற சிகிச்சை’ அளிக்கிறோம்.

‘இன்ஃப்ரா ரெட்’ கதிர்கள் கண்ணுக்குத்  தெரியாது. அடர்ந்த சிவந்த நிறத்தில் இருக்கும் இந்தக் கதிர்கள் நம்ம உடல்ல படும்போது, உடலைத் தளர்ச்சியாக்கி, உடலில் ஏற்படக்கூடிய வீக்கங்களைக்  கரைக்கும். வலியையும் குறைக்கும். ‘அல்ட்ரா வயலெட்’ கதிர்களும் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அதுதான் `வைட்டமின் டி’யை உற்பத்தி செய்யுது” என்கிறார் கோவை அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மைய உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் வி.புவனேஷ்வரி.

சூரிய குளியலுக்கு  உகந்த நேரம் எது?

“எப்போது சூரியக் குளியலை எடுத்துக்கொள்ளலாம்?” என கேட்டதற்கு, “பெரும்பாலானோர் சூரியன் உதயமானபிறகு காலையில் தென்படும் இளம்வெயில், மாலை நேரத்தில் சூரியன் மறைவதற்கு முன் படும் வெயில்தான் நன்மைதரக்கூடியது என நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், சூரிய குளியல் எடுத்துக்கொள்ள உகந்த நேரம் காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரைதான். சூரிய ஒளி நேரடியாகப் படும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சூரியக் குளியலை எடுத்துக்கொள்ளலாம். அதற்கென பிரத்யேக இடமெல்லாம் தேவையில்லை. 10 முதல் 20 நிமிடங்கள்வரை சூரியக் குளியல் எடுக்கலாம். சூரியக் குளியலை மேற்கொள்ளும் முன்பும், மேற்கொண்ட பிறகும் 100 முதல் 200 மில்லிலிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தலையில் ‘கேப்’ அணிந்துகொள்ளலாம் அல்லது ஈரத் துணியைக் கட்டிக்கொள்ளலாம். அத்துடன்  மென்மையான ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.

சருமநோய்கள் குணமாகும்

சூரிய ஒளி படுவதால் தசைகள் வலுப்படுவதுடன்,  உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். உடல் பருமன் குறையும். சருமநோய்கள் குணமாகும். மலம், சிறுநீரில் மட்டுமே கழிவுகள் வெளியேறுவதில்லை. வியர்வை வழியாகவும் கழிவுகள் வெளியேறுகின்றன. காலையில் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு கிளம்பிச் செல்லும் பெரும்பாலானோர், இரவுதான் வீடு திரும்புகின்றனர். இதனால், சூரிய ஒளி உடம்பில் படுவதற்கே வழியில்லாமல் போகிறது. ஏ.சி. அறைகளில் நாம் முடங்கிவிடுவதால், வியர்வையே வெளியேறுவதில்லை. சூரிய குளியல் வியர்வை சுரப்பிகளை தூண்டும். இதன்மூலம் வியர்வை வெளியேறி, உடலின் வெப்பநிலை சீராகும்.

வாழை இலை குளியல்

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் சூரியக்  குளியலுக்கு பதில் பச்சை வாழை இலை குளியலை மேற்கொள்ளலாம். இதனால், நேரடியாக உடலில் வெயிலின் தாக்கம் இருக்காது. இந்த குளியல் மூலம், உடல் பருமன் குறையும். சர்க்கரை நோய் அண்டாது. சூரியக்  குளியல், வாழை இலைக் குளியலுக்கு பிறகு உடல் அதிக வெப்பமடைந்து வியர்வையை வெளியேற்றும். எனவே, இந்தக் குளியல்களுக்கு பிறகு, குளிர்ந்த நீரால் குளிக்க வேண்டும். சாப்பிட்ட உடன் குளியல் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிடுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு சூரியக் குளியல், வாழை இலைக் குளியல் எடுக்கலாம்.

உடல் நலம் குன்றியவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் சூரியக் குளியல், வாழைக் இலை குளியலை எடுத்துக்கொள்ளக்கூடாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்