தூத்துக்குடி சந்தியாவின் கொலை வழக்கில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உடல் பாகங்கள் குப்பையில் வீசப்பட்டது போன்றே சென்னையில் சில வழக்குகள் போலீஸாரைத் திணறடித்து பின்னர் விசாரணையில் சுவாரஸ்யமான விஷயங்களுடன் முடித்து வைக்கப்பட்டவை அதிகம். அதில் பர்மா பஜார் ஆளவந்தார் கொலை வழக்கு குறித்து இதில் அறியலாம்.
சென்னையில் இளம் தலைமுறையினருக்கு சந்தியா கொலை வழக்கு வித்தியாசமாக இருக்கலாம். தலை கிடைக்காத போதிலும் விஞ்ஞான வளர்ச்சியில் வழக்கை போலீஸார் வெற்றிகரமாக நிரூபிக்க முடியும். ஆனால் இதேபோன்ற வழக்குகளில் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலகட்டங்களில் போலீஸார் தங்களது துப்பறியும் திறனால் சாதித்துள்ளனர்.
தமிழக போலீஸார் குறிப்பாக சென்னை போலீஸாரின் திறமைக்கு சவால் விட்ட சில வழக்குகளைப் பார்ப்போம்.
1950-களில் ஆளவந்தார் கொலை வழக்கும், லட்சுமி காந்தன் கொலை வழக்கும் மிகப் பிரசித்தம் பெற்ற வழக்குகள். லட்சுமி காந்தன் கொலை வழக்கில் அன்றைய திரை உலகின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் திரை வாழ்வே முடிந்து போனது. இந்தக் கட்டுரைக்கு அந்த வழக்கு சம்பந்தமில்லாத ஒன்று. ஆனால், ஆளவந்தார் கொலை வழக்கு சந்தியாவின் கொலை வழக்கு போன்றது.
ஆளவந்தார் கொலை வழக்கு:
1950களில் பிரபலமாகப் பேசப்பட்ட கொலை வழக்கு இது. தடயவியல் துறையில் சாதித்த போலீஸார் வழக்கைக் கையாண்டவிதம் இன்றும் பேசப்படுகிறது. தமிழகத்தில் நடந்த பிரபலமான முதல் கொடூரக் கொலை வழக்கு இது.
1952-ம் ஆண்டு ஆகஸ்டு மாதாம் சென்னை எழும்பூரிலிருந்து சென்ற ராமேஸ்வரம் ரயிலில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் குறிப்பிட்ட பெட்டியைச் சோதித்தபோது அதில் ஒரு டிரங்க் பெட்டியில் ஆண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் முண்டமாகக் கிடந்தது.
தலை இல்லாததால் யாரென அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலையில்லா முண்டம் டிரங்க் பெட்டியில் அனுப்பியது யார் என செய்தித்தாள்கள் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிட்டன.
தடயவியல் நிபுணர்களின் பரிசோதனைக்காக உடல் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு சில நாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தன் கணவனைக் காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தார். அவரது கணவர் பெயர் ஆளவந்தார் (42). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று சொந்தமாக பர்மா பஜாரில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேனா விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார் ஆளவந்தார்.
பெண்கள் விவகாரத்தில் மோசமான நடத்தையுள்ள ஆளவந்தார் பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக தவணைமுறையில் புடவையும் விற்பனை செய்து வந்தார். ஆளவந்தார் காணாமல் போனது குறித்து அவர் கடை வைத்துள்ள பர்மா பஜாரில் மனைவி விசாரிக்க ராயபுரத்தைச் சேர்ந்த தேவகி என்கிற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு உள்ளது, கடைசியாக அங்கு போவதாக சொல்லிவிட்டுத்தான் சென்றார் என அருகில் உள்ளவர்கள் கூற, அங்கு சென்று ஆளவந்தார் குறித்து அவர் மனைவி கேட்டார். ஆனால், தனக்கு அப்படி யாரையும் தெரியாது என அப்பெண் கூறிவிட்டார்.
அதன் பின்னரே எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஆளவந்தாரின் மனைவி. இதனிடையே சென்னை ராயபுரம் கடற்கரையோரத்தில் ஒரு பொட்டலம் மிதந்து வந்ததை எடுத்துப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில் இருந்தது துண்டிக்கப்பட்ட ஓர் ஆணின் தலை.
உடனடியாக போலீஸார் தலையைக் கைப்பற்றினர். மதுரையிலிருந்த தலையில்லாத உடல் வரவழைக்கப்பட்டது. இரண்டும் சரியாகப் பொருந்தியது. அது ஆளவந்தாரின் உடலாக இருக்கலாம் என சந்தேகப்பட்ட போலீஸார் ஆளவந்தாரின் மனைவியை அழைத்து காட்டியபோது அது தனது கணவரின் உடல்தான் என்று உறுதி செய்தார்.
உடல் கிடைத்தது, தலை கிடைத்தது, காணாமல் போன ஆளவந்தார் என நாள்தோறும் செய்தித்தாள்களில் அனல் பறந்தன. தமிழகமே வழக்கை ஊன்றிக் கவனித்தது. எங்கும் இதே பேச்சாக இருந்தது. ஆளவந்தார் என்கிற நபரை வெட்டி தலை வேறா, உடல் வேறா வீசிட்டாங்களாமே என டீக்கடை, சலூன், பொதுமக்கள் கூடும் இடம் எல்லாம் இதே பேச்சாக இருந்தது.
பின்னர் தேவகியைத் தேடி போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் கணவருடன் தலைமறைவானது தெரியவந்தது. தேவகிதான் கொலையாளி. அவருடன் வலுவான இன்னொரு நபர் இருந்திருக்கவேண்டும், அது தேவகியின் கணவராக இருக்கலாம் என போலீஸார் முடிவு செய்தனர்.
அவர்களைப்பற்றிய போட்டோவுடன் போலீஸார் செய்தி வெளியிட்டு பிடித்துக் கொடுக்க வேண்டுகோள் வைத்தனர். இதனால் சில வாரங்களில் தேவகியும் அவரது கணவன் பிரபாகரனும் சரணடைந்தனர்.
அப்போதெல்லாம் இதுபோன்ற கொடூரக் கொலையை சென்னை சந்தித்ததே இல்லை. ஆகவே வழக்கு பரபரப்பாகப் பார்க்கப்பட்டது. இந்த வழக்கில்தான் தடயவியல் துறையின் முக்கியத்துவம் அறியப்பட்டது. உடல் கூறுவியலிலும், தடயவியல் துறையிலும் இந்த வழக்கு முன்மாதிரியாகப் பேசப்பட்டது.
அடுத்து தேவகியையும் அவளது கணவன் பிரபாகரனையும் போலீஸார் விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஏதோ ஒரு கட்டத்தில் ஆளவந்தாருடன் தொடர்பு ஏற்பட்ட தேவகி அதன் பின்னர் கணவனுக்கு தங்கள் உறவு தெரிந்தவுடன் திருந்தி வாழ முடிவு செய்தும் அதற்கு ஆளவந்தார் அனுமதிக்காமல் மிரட்ட ஆரம்பித்ததால் வேறு வழியில்லாமல் அவரைக் கொலை செய்ய கணவர் பிரபாகருடன் சேர்ந்து திட்டமிட்டார்.
சம்பவம் நடந்த அன்று கணவர் இல்லை என ஆளவந்தாரை வீட்டுக்கு அழைக்க அவர் வீட்டுக்கு வந்தவுடன் பாலில் மயக்க மருந்தைக் கொடுத்து, கணவர் பிரபாகருடன் சேர்ந்து ஆளவந்தாரைக் கொன்று உடலை அடையாளம் தெரியாத அளவுக்கு துண்டு துண்டாக வெட்டியுள்ளனர்.
பின்னர் அவரது உடலை எப்படி அப்புறப்படுத்துவது? என்பது பிரச்சினை. பிரபாகரன் பாரிமுனைக்குச் சென்று ஒரு பெரிய டிரங்க் பெட்டியை வாங்கி வந்து உடலை அதில் போட்டு சங்கிலியால் பிணைத்து பூட்டுப்போட்டு பூட்டியுள்ளார்.
தலையை ஒரு சட்டைத் துணியில் பொட்டலமாகக் கட்டி ராயபுரம் கடலில் தூக்கி வீசிவிட்டு வீட்டு ரிக்ஷா ஒன்றைப் பிடித்து வந்து டிரங்க் பெட்டியை ரிக்ஷாவில் ஏற்றிக் கொண்டு எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சென்று பெட்டியை, ரயிலின் ஒரு கம்பார்ட்மென்ட் இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.
மூன்றாண்டுகள் நடந்த வழக்கில் விசாரணை 1953 –ம் ஆண்டு நடந்து கணவனுக்கு 7 ஆண்டுகளும், மனைவி தேவகிக்கு மூன்று ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்நாளில் இந்தச் சம்பவம் நாவலாகவும், தொலைக்காட்சி நாடகமாகவும் வெளியானது.
ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் தடயவியல், பிரேதப் பரிசோதனை அறிக்கை, சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து வழ்க்கு முடித்து வைக்கப்பட்டது.
யானைக்கவுனியில் தலையில்லாத முண்டம் வழக்கு குறித்து அடுத்து அலசலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago