நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அதன் எதிரி பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யப் பரிந்துரைக்கிறது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறை. பயிர் உற்பத்தியில் நோய் தாக்குதல், பூச்சித் தாக்குதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. தவறும்பட்சத்தில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு, நஷ்டத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், விவசாயிகளுக்கு சவாலாக உள்ள நூற்புழு கட்டுப்பாடு முறைகள் குறித்து ஆராய்வது அவசியமாகிறது.
நூற்புழுக்கள், காய்கறி மற்றும் பழப் பயிர்களைத் தாக்கி பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. கொய்யா, மாதுளை, பப்பாளி, வாழை, எலுமிச்சை, திராட்சை சாகுபடியில் சேதம் ஏற்படுத்துகின்றன. இதனால் ஹெக்டேருக்கு 10-15 சதவீதம் சேதம் ஏற்படுகிறது. ஏனெனில் நூற்புழுக்கள், அனைத்துவிதமான பயிர்களையும் தாக்கி உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
“நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தி வந்த ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள் மண்ணுக்கும், பயிருக்கும் தீங்கு விளைவிப்பதால், அவை தடை செய்யப் பட்டுள்ளன. ஆகையால், இவற்றைக் கட்டுப்படுத்த இயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்தைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, நூற்புழுவியல் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் பர்பியூரோ சீலியம் லிலாசினம், பொக்கோனியா கிளைமைடோ ஸ்போரியா என்ற இரு பூஞ்சானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வணிகரீதியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த பூஞ்சாணத்தை பசுந்தாள் உரத்துடன் கலந்து இட்டால், அவை மண்ணில் பல்கிப் பெருகும். இதனால் நூற்புழுக்கள் கட்டுக்குள் வரும். நூற்புழுக்களின் வாழ்நாள் 28-30 நாட்கள். ஒரு நூற்புழு 250-300 முட்டைகள் இடும். இந்த பூஞ்சானத்தைப் பயிர்களில் பயன்படுத்துவதால், அவைகள் முட்டைகளில் முழுமையாக ஊடுருவி கட்டுப்படுத்தும்.நிலம் தயாரித்து, உழவு ஓட்டி முடித்த பின்னர் ஒரு கிலோ பூஞ்சானத்துக்கு, 50 கிலோ பசுந்தாள் உரம் என்ற அளவில் கலந்து விதைப்புக்கு முன்னர் தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ பூஞ்சானமும், 50 கிலோ பசுந்தாள் உரமும் தேவைப்படும். நாற்று நடவுக்கு முன்னரே நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்” என்கிறார் நூற்புழுவியல் துறை இணைப் பேராசிரியை ஜி.ஜோதி.
எதிரி பயிர்கள் ஊடுபயிர் சாகுபடி
“நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, அதன் எதிரிப் பயிர்களான கடுகு, சாமந்தி, சின்ன வெங்காயம், பூண்டு, சணப்பை, கொத்தமல்லி, நொச்சி, இழுப்பை, புங்கம், மெக்சிகன் சூரியகாந்தி ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இவற்றின் வேர்ப் பகுதியில் இருந்து வெளிவரும் திரவம், நூற்புழுக்களைக் கொல்லும். பயிர்களின் அருகில் வராமலும் தடுக்கும்.
இதேபோல, வீணாகும் முட்டைக்கோஸ், டர்னிப், முள்ளங்கி, காலிபிளவர் கழிவுகளை மண்ணில் போட்டு உழவு ஓட்டினால், அதில் இருந்து வெளிவரும் ஒருவிதமான மணம், நூற்புழுக்களை பயிர்களில் அண்ட விடாமல் விரட்டும்.
வெண்டை, தட்டைப்பயிர் போன்றவை நூற்புழுக்களுக்கு மிகவும் பிடித்த பயிர்கள். நிலத்தில் நூற்புழு பாதிப்பு இருப்பதை அறிந்துகொள்ள, அவற்றை பரிசோதனை முறையில் பயிரிட்டுப் பார்க்கலாம். அவ்வாறு இருந்தால், அந்த வயலில் இவற்றைப் பயிரிட வேண்டும். நூற்புழுக்கள் முழுவதுமாக இந்தப் பயிர்களைத் தாக்கியதும், 35-40 நாட்களில் அப்பயிர்களை வேருடன் பிடுங்கி எடுத்து, எரித்துவிட வேண்டும். அதன்பின்னர் வேறு பயிரைப் பயிரிட வேண்டும்.
இதேபோல, சாகுபடி நிலத்தில் வெப்பமூட்டுதல் முறையிலும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். முதலில் நிலத்தில் தண்ணீர் தெளித்து, 25 மைக்ரான் நெகிழித்தாளைக் கொண்டு மூடாக்கு போட்டு, சூரியஒளியின் மூலம் வெப்பமூட்டினால் நூற்புழுக்களின் முட்டைகள் அழியும். பசுங்குடில்களிலும் இந்த முறையைப் பின்பற்றலாம்.
நாற்றுகளைத் தேர்ந்தெடுத்தல்
சாகுபடிக்கு நாற்றுகளை மொத்தமாக வாங்கக் கூடாது. முதலில் 5 செடிகளை வாங்கி வந்து, அதன் தாய் மண்ணை அகற்றி விட்டு வேர்ப் பகுதிகளில் முடிச்சுகள் உள்ளனவா? என ஆராய வேண்டும். அல்லது துறை அலுவலர்களை நேரில் அணுகியும் விளக்கம்பெறலாம். ஏனெனில், நூற்புழுக்களின் பாதிப்பே வேர்முடிச்சுகள்தான். கொய்யா, வாழை, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றின் வேர்களில் இதுபோன்ற முடிச்சுகள் இருப்பதைக் காண முடியும். எனவே, இடைத்தரகர்கள் மூலம் நாற்றுகள் வாங்குவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். விவசாயிகளே நாற்றங்காலுக்கு நேரடியாகச் சென்று, நாற்றுகளை வாங்குவதே சிறந்தது.
வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நாற்றுகளால், நூற்புழுக்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வரும் முன் காப்பதே சிறந்தது என்பதால், விவசாயிகள் நாற்றுகளைத் தேர்வு செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேற்கண்ட முறைகளைப் பின்பற்றுவதால், குறைந்த முதலீட்டில் இருமடங்கு லாபம் பெறலாம்” என்றார் நூற்புழுவியல் துறைத் தலைவர் கே.பூர்ணிமா.
இயற்கைப் பூஞ்சானம் கிலோ ரூ.100...
நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் இயற்கைப் பூஞ்சானங்கள், வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறையில் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இதை வாங்கி, நூற்புழு பாதிக்கப்பட்டுள்ள வயல்களில் விவசாயிகள் பயன்படுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு 0422-6611264 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago