சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் கால்களை இழந்த பெண்ணுக்கு தன்னார்வலர்களால் கட்டப்பட்ட வீடு அவரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் சோமனூரில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 5 பேர் பலியாகினர். 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க, ஒரு நபர் ஆணையத்தை அரசு நியமித்தது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டாலும், இன்னும் அவர்களில் வாழ்வாதாரத்திற்காக போராடுவோர் உள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த, மங்கலம் பூமலூர் அருகேயுள்ள பள்ளிபாளையத்தைச் சேர்ந்த விஜயா (43)வின் ஒரு கால் எடுக்கப்பட்ட நிலையில், ஒரு கால் செயலிழந்து விட்டது. கணவரை இழந்து வாடும் இவருக்கு, கூலி வேலைக்கு செல்லும் 2 மகன்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். இருவரும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று வருகின்றனர். விஜயாவுக்கு அரசால் இதுவரை ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தனது வாழ்வாதாரத்துக்காக அரசின் உதவியை எதிர்பார்த்து இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், குடியிருக்க வீடு கூட இல்லாமல் சிமெண்ட் சீட்டுகளை சுவரின் ஓரத்தில் சாய்த்து வைத்து வாழ்க்கை நடத்தி வந்த அவருக்கு சோமனூர், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர். விபத்தில் பாதிக்கப்படும் முன்பே பள்ளிபாளையத்தில் விஜயா குடும்பத்தினருக்கு அரசால் பட்டா வழங்கப்பட்ட 2 சென்ட் இடத்தில் வீடு கட்டிக் கொடுக்க திட்டமிடப்பட்டது. அதற்காக நிதி திரட்டப்பட்டு, ரூ.2 லட்சம் செலவில் தற்போது புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வீடு கிரகப்பிரவேஷம் நேற்று காலை நடைபெற்று, வீடு விஜயாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து இப்பணியில் ஈடுபட்டவரும், அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலருமான பிரபாகரன் கூறும் போது, ‘பொதுமக்கள், தன்னார்வலர்கள் சிறிது சிறிதாக பணம் சேர்த்து இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் செலவில் ஓராண்டாக பணிகள் நடைபெற்று தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மிகவும் சிரமமான நிலையில் இருக்கும் அவருக்கு அரசு அளித்துள்ள உதவித்தொகையானது குறைந்தபட்ச உதவியாகக் கூட இல்லை. மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பலரும் ஏழை மக்களே. அவர்களது நிலையும் இதே போன்று தான் உள்ளது. அவர்களது குடும்பங்களும் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றன. எனவே, தமிழக அரசு விஜயா மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணைய அறிக்கை இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது. அதை வெளியிட வேண்டும். இதையே பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் எதிர்பார்த்து வருகின்றனர்’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago