காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ள சின்னத்தம்பி என்கிற காட்டுயானையை வனத்துறையினர் கும்கி யானையாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.
1990-களில் தமிழக மக்கள் நெஞ்சங்களில் சின்னத்தம்பி நீங்கா இடம்பெற்றார். அது பிரபு நடித்த வாசு இயக்கிய சின்னத்தம்பி படம். அந்தப்படத்தில், தன்னைச்சுற்றி நடக்கும் எதைப்பற்றியும் அறியாத ஒரு இளைஞராக பிரபு வலம் வருவார்.
அப்பாவி பிரபுவை குஷ்புவின் அண்ணன்கள் கொடுமைப்படுத்தும் காட்சியை கண்ட மக்கள் அந்த படத்திற்கு பெரும் ஆதரவு தெரிவித்தனர்.
தற்போதும் ஏறத்தாழ 29 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழக மக்களை ஒரு சின்னத்தம்பி கவர்ந்து வருகிறார். அவர் வேறு யாருமல்ல ஒரு காட்டு யானை. வளர்ந்து வரும் நாகரீக சூழல் வனங்களைப்பற்றிய அக்கறையின்மை, ஆக்கிரமிப்பு காரணங்களால் வனப்பகுதியில் விலங்கினங்களின் வாழ்விடம் சுருங்கி வருகிறது.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது யானைகளே. டன் கணக்கில் உணவும் நூற்றுக்கணக்கான லிட்டர் நீரையும் பருகும் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை. யானைகள் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் வாழும் இடங்களை நோக்கி வருகின்றன. அப்படி வருபவை பயிர்களை, சொத்துக்களை சேதப்படுத்துவது, உயிர்சேதத்தை விளைவிப்பது நடக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணகிரி, ஓசூர் வனப்பகுதிகளில் காட்டுயானைகள் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். காட்டுயானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டுவதும் ஒரு காரணம் என்கின்றனர். இவ்வாறு வரும் காட்டு யானைகள் பலநேரம் கிணற்றில் விழுந்து உயிரைவிடுவதும் உண்டு. காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டாலும் அவை மீண்டும் மீண்டும் வருவது தொடர்கதையாகி வருகிறது.
காட்டு யானைகள் என்றாலே அச்சப்படும் மக்களை ஒரு காட்டுயானை மிகவும் கவர்ந்துள்ளது. வித்தியாசமான அந்தக் காட்டுயானை பொதுமக்களுக்கு சிறிதளவும் ஊறுவிளைவிக்காமல் வந்தோமா வேலையை முடித்தோமா சென்றோமா என்று இருக்கும். இதனால் பொதுமக்கள் ஆரம்பத்தில் அச்சப்பட்டவர்கள் பின்னர் அதன்மீது அன்புச்செலுத்த ஆரம்பித்து விட்டனர்.
கடந்த ஆண்டு கோவை அடுத்த கணுவாய், தடாகம், பன்னிமடை, வரப்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 2 காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசப்படுத்தி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தன. அவைகள் தங்களுக்குள் விளையாடிக்கொண்டு அங்கேயே சுற்றி சுற்றி வந்ததால் கிராம மக்களுக்கு பரிச்சயமான காட்டு யானைகளானது.
பொதுமக்களுக்கு எந்த தொல்லையும் தராமல் திரிந்த அந்த காட்டு யானைகளுக்கு விநாயகன், சின்னதம்பி என பொதுமக்கள் பெயரிட்டனர். விநாயகனைவிட சிறியதாக துள்ளலுடன் ஜாலியாக வலம் வந்ததால் சின்னத்தம்பி என பெயரிட்டு அழைத்தனர்.
சின்னத்தம்பி எதைப்பற்றியும் கவலைப்படாத, யாருக்கும் தொல்லை கொடுக்காத ஒரு குறும்பு நிறைந்த காட்டு யானை. ஆனாலும் அவை காட்டு யானைகள், பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை, என்பதால் 2 காட்டு யானைகளை பிடித்து வேறு இடத்தில் விட வனத்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி விநாயகன் என்ற காட்டு யானையை பிடிக்கப்பட்டு அதன் கழுத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது. அது தற்போது கர்நாடக மாநிலம் பந்தலூர் வனப்பகுதியில் சுற்றி வருகிறது.
ஆனால் சின்னத்தம்பி யானை மட்டும் பிடிபடவில்லை காரணம் அது மக்களின் மனங்கவர்ந்த யானையாகி விட்டதால் பொதுமக்களிடமும் பெரிதாக எதிர்ப்பு இல்லை. ஊருக்குள் வரும் சின்னத்தம்பியை திரும்பிப்போ என விரட்டினால் சத்தமில்லாமல் திரும்பிப்போய்விடும்.
யாரிடமும் எவ்வித அச்சத்தையும் தோற்றுவிக்காமல் ஊருக்குள் சகஜமாக உலா வந்த சின்னத்தம்பி அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாகி விட்டது. விநாயகன் பிரிவால் வாடிய சின்னத்தம்பிக்கு புதிய நட்பு கிடைத்தது. தாயும் குட்டியும் சேர்ந்த அந்த புது உறவால் சின்னத்தம்பி மீண்டும் குதூகலமானது. ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநாள் நீடிக்கவில்லை.
சின்னத்தம்பியை தேடி ஊருக்குள் வரும் தாய் மற்றும் குட்டியானையால் பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டது. சின்னத்தம்பியால்தான் அவை ஊருக்குள் வருகின்றன என முடிவு செய்த வனத்துறை அதிகாரிகள் சின்னத்தம்பியை அப்புறப்படுத்த நினைத்தனர்.
கடந்த 24-ம் தேதி சின்னதம்பியை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். ஆனாலும் சின்னத்தம்பி போகாமல் அடம்பிடித்தது. வலுக்கட்டாயமாக அது லாரியில் ஏற்றப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் சின்னத்தம்பி விடப்பட்டது. அதை லாரியில் ஏற்றும்போது சின்னத்தம்பிக்கு காயம் ஏற்பட்டது.
வனப்பகுதியில் விடப்பட்ட 4 நாட்களில் 100 கிலோ மீட்டர் பயணம் செய்த சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் புகுந்தது. பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி, கோட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் சின்னத்தம்பி யானை உலா வந்தது.
சின்னத்தம்பியை மீண்டும் கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்டம் பள்ளபாளையம், தீபாளப்பட்டி பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்துக்குள் சின்னத்தம்பி புகுந்தது. அதைப்பிடிக்க வந்த கும்கி யானைகளையும் சின்னத்தம்பி கண்டுக்கொள்ளவில்லை, அவற்றுடன் ஜாலியாக விளையாடி வருவதாக கூறுகிறார்கள்.
திருப்பூர் உடுமலைப்பேட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் தற்போது சின்னதம்பி தஞ்சமடைந்துள்ளது. அங்குள்ள ஒரு குட்டையில் முகாமிட்டுள்ள யானை, அவ்வப்போது வெளியே வந்து, அருகேயுள்ள கரும்புத் தோட்டத்திற்கு சென்று கரும்புகளை உண்டுவிட்டு மீண்டும் புதர்களுக்கு சென்றுவிடுகிறது.
சின்னத்தம்பி அடிக்கடி ஊருக்குள் வருவதால் அதைப்பிடித்து கும்கி யானையாக மாற்றப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார். வனத்தில் சுதந்திரமாக சுற்றிவரும் சின்னத்தம்பி கும்கி யானையாக மாற்றப்படுவதை பொதுமக்கள், வன ஆர்வலர்கள் விரும்பவில்லை.
மக்களின் மனங்கவர்ந்த சின்னத்தம்பி யாருக்கும் எந்த துன்பமும் தராத யானை. தற்போது ஊருக்குள் வந்த அதற்கு வனத்துறையினர் கரும்புக்கட்டுகளை கொடுத்தபோது பழகிய யானைப்போல் வாங்கித்தின்றது. அனைவர் நெஞ்சத்திலும் நிறைந்த சின்னத்தம்பியை காத்து அதை மீண்டும் வனத்தில் விடவேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.
இதை செயல்படுத்த அப்பகுதி பொதுமக்கள் சின்னத்தம்பியை காக்கும் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். சின்னத்தம்பி யானையை தடாகம் பள்ளத்தாக்கிலே விடக் கோரியும் யானைகளின் வழித் தடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்றக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திலும் சின்னத்தம்பியை கும்கியானையாக மாற்றக்கூடாது என வழக்குத்தொடுக்கப்பட்டுள்ளது. பெருவாரியான தமிழக மக்களின் கவனத்தை கவர்ந்து உள்ளத்தை கொள்ளைக் கொண்டுள்ள சின்னத்தம்பி எதைப்பற்றியும் கவலைப்படாமல் தற்போது புதருக்குள் ஓய்வெடுத்து வருகிறது.
வன உயிரினங்களுக்கு மனிதர்களால் தொல்லை, அதனால் ஊருக்குள் வரும் விலங்கினங்களை தண்டிப்பது நியாயமில்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago