கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அனுபவிக்கும் ராகிங் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. கோவையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என 200-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமின்றி, வெளியூர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர். இவர்களில் தனியார் விடுதிகள், உறவினர்கள் மற்றும் வாடகை வீடுகளில் பயில்வோரைத் தவிர மற்றவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பல விடுதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள், சீனியர்களால் ராகிங் கொடுமைக்கு உள்ளாகின்றனர். சீனியர் மாணவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பது, துணி துவைப்பது, அயர்ன் செய்வது உள்ளிட்ட பணிகளை, முதலாம் ஆண்டு மாணவர்கள்தான் செய்கின்றனர்.
இரவில் ஆடி, பாடி மகிழ்விப்பது, 'ட்ரீட்' என்ற பெயரில், மது, சிகரெட், பிரியாணி வாங்கித் தருவது, சினிமாவுக்கும் அழைத்துச் செல்வதும் என முதலாமாண்டு மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமை பெரியது.
மேலும், பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்லாதவர்களுக்கு அடி, உதையும் உண்டு. இதனால், உடல், மன ரீதியாக பாதிக்கப்படுவதாக முதலாமாண்டு மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவிகள் விடுதிகளிலும் ராகிங் இல்லாமல் இல்லை.எனினும், ராகிங் கொடுமைகள் வெளியில் வருவது குறைவு. விடுதிக் காப்பாளர், கல்லூரி முதல்வர்கள் மட்டத்திலேயே இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடுகிறது. கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
ராகிங் தடுப்புக் குழு
யு.ஜி.சி. உத்தரவுபடி, கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டு, அதில் காவல் துறையினரும் இடம் பெறுகின்றனர். எனினும், பிரச்சினைகளை இந்தக் குழுவின் கவனத்துக்கு, கல்லூரி நிர்வாகம் கொண்டுசெல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது.
கடந்த ஆண்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கல்லூரி விடுதியிலும், பீளமேட்டில் உள்ள கல்லூரி விடுதியிலும் ராகிங் புகாரில் 8-க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில் என்ன வேடிக்கை என்றால், முதலாமாண்டில் ராகிங் கொடுமை அனுபவிக்கும் மாணவர்கள், சீனியர்களானவுடன், அவர்களும் ராகிங் செய்வதுதான்.
“ஜூனியர்களை சகோதரர், நண்பர்களாக சீனியர்கள் கருத வேண்டும். ராகிங் செய்தால் சட்டப்படி கடும் தண்டனை அளிக்கப்படும். மாநகரின் அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் மூலம் ராகிங் விழிப்புணர்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயரதிகாரிகளும் பங்கேற்று, பல்வேறு அறிவுரைகளை வழங்குகின்றனர். எனினும், ராகிங் தொடர்பாக கல்லூரி தரப்பிலிருந்து புகார்கள் வருவதில்லை. ராகிங் தொடர்பாக சில மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராகிங் புகார் வந்தால், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்" என்றார் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண்.
மேலும், "அனைத்து விடுதிகளும், கல்லூரி நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்புக்குள் இருக்க வேண்டும். ராகிங் காரணமாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு, காயமடைதல், தற்கொலை, கொலை போன்ற குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்தவுடன் மட்டும் காவல் துறையிடம் புகார் அளித்தால், கல்லூரி நிர்வாகங்களும் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றார்.
கேள்விக்குறியாகும் எதிர்காலம்!
கோவை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறும்போது, "ராகிங் செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அனைத்துக் கல்லூரிகளிலும் ராகிங் தடுப்புக் குழு அமைக்க வேண்டும்.
ஜூனியர் மாணவர்களை 'சார்' என அழைக்குமாறு சீனியர்கள் வலியுறுத்துவது, மிரட்டுவது, திட்டுவது, தங்களது வேலைகளைச் செய்ய பணிப்பது போன்றவை அனைத்துமே ராகிங்தான். புகார் வந்தால், முதல்வர் தலைமையில், மூத்த பேராசிரியர்களைக் கொண்டு விசாரணை நடத்தி, 72 மணி நேரத்துக்குள் ராகிங் நடந்துள்ளதா என்று கண்டறிய வேண்டும். ராகிங் நடந்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவரை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்வதுடன், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மேலும், பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வித் துறைக்கு கல்லூரி நிர்வாகம் அறிக்கை அனுப்ப வேண்டும். அவ்வாறு புகார் அளிக்காவிட்டால், கல்லூரி முதல்வரையும் தண்டிக்க வாய்ப்புள்ளது. இடைநீக்க காலத்தில் சம்பந்தப்பட்ட மாணவர், தேர்வெழுதோவ, சலுகைகளைப் பெறவோ முடியாது. மேலும், நீதிமன்றத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், கல்லூரியில் இருந்தே டிஸ்மிஸ் செய்யபடுவார்.
மேலும், அந்த மாணவருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். தண்டனைக்குப் பிறகு, வேறெங்கும் படிக்க முடியாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ராகிங்கில் ஈடுபடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago