''தேவை கண்டுபிடிப்புகளின் தாய்'' என்பது புகழ்பெற்ற லத்தீன் பழமொழி. தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடையால் வணிகர்கள், பொதுமக்கள் மாற்றுக் கண்டுபிடிப்புக்குத் தவம் கிடக்கின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழக அரசு தடைவிதித்தது. இதனால் இறைச்சிக் கடைகளில் தாமரை இலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதேபோல் உணவகங்களில் பார்சல் கட்டுவதற்காக அதிக அளவு வாழை இலை வாங்குகின்றனர். இதனால் வாழை விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர். அதேநேரம் கடைகளில் பொருள்களை வாங்க வெறும் கையோடு சென்ற மக்கள் வீட்டில் இருந்தே பை எடுத்துச் செல்லும் சூழலும் எழுந்துள்ளது. இயற்கையை காக்க, அது மிக அவசியம் என்றாலும் பலரும் பையை மறந்து சென்றுவிடுகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக - கேரள எல்லையோரத்தில் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த பாபு(45) என்ற சாமானியர் பிளாஸ்டிக் கேரி பேக்கிற்கு மாற்றாக, சுமார் பத்துமணிநேரம் வரை ஈரத் தன்மையைத் தாங்கும் அற்புதமான காகிதப்பை தயாரித்து அசத்தியுள்ளார். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குமரி மேற்கு மாவட்ட சந்தைகளில் இதை இலவசமாகவும் விநியோகித்து வருகிறார். வீட்டில் இருந்தே பை எடுத்துச் செல்லத் தவறியவர்கள் பொருள்கள் வாங்கும் போது கடையில் 5 ரூபாய் கொடுத்துப் பை வாங்கும் நிலை இப்போது உள்ளது. இவரது கண்டுபிடிப்பு பரவலானால் இனி அந்த நிலை இல்லை. ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே இந்த காகிதப் பையைக் கொடுக்க முடியும் என்கிறார் பாபு.
காகிதத்தில் தண்ணீர் பட்டாலே நைந்துவிடும் நிலையில், பத்து மணி நேரம் ஈரத்தன்மையை தாங்கும் இந்த பேப்பர்பேக் எப்படி சாத்தியம்? பாபுவிடமே பேசினோம். ''நான் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சுருக்கேன். பக்கத்தில் ஒரு ரப்பர் எஸ்டேட்ல வேலை செய்றேன். சின்ன வயசுல இருந்தே கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் அதிகம்.
நான் இதுக்கு முன்ன தென்னை மரம் ஏறும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்திருந்தேன். அது சிறந்த படைப்புன்னு இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் பாராட்டி விருது கொடுத்தார். பிளாஸ்டிக் தடைன்னு சொன்னதும் கேரிபேக் இல்லாம மக்கள் திண்டாடுவாங்கன்னு தெரியும். உடனே இந்த கண்டுபிடிப்பில் மூழ்கிட்டேன். இதுக்கு பழைய செய்தித்தாள், மஞ்சள் பொடி, மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவை தான் மூலதனம்.
மஞ்சள்தூளை ஒரு பெரிய பாட்டிலில் கொட்டி, அதில் சரிக்கு சமமாக கோலிக்குண்டுகளைப் போட்டு ஒருநாள் முழுவதும் குலுக்கணும். இப்போ அந்த மஞ்சள் தூள், பேஸ்ட் போல் ஆகிவிடும். அதையும் கிழங்கு மாவையும் பேப்பரை சுற்றி தடவுவோம். அது ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால ஈரமான பொருள்களைக் கூட இதில் வைத்துக் கொண்டு போகலாம். குறிப்பா பெண்கள் மீன் வாங்கும் போதும் கூட பயன்படுத்த முடியும். என்கூட எஸ்டேட்டில் வேலை செய்யும் நம்பூதிரி எனக்கு ஊக்கமளித்தார்.
இதேமாதிரி தண்ணீர் சேமிப்பு கருவி, எனர்ஜி சேமிப்பு கருவியெல்லாம் கண்டுபிடிச்சுருக்கேன். அரசு என்னை கூப்பிட்டா அதையெல்லாம் அவங்களுக்கு விளக்கி செஞ்சுகாட்ட முடியும். நம்ம பொருளாதாரத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும் கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்'' என்கிறார் பாபு.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago