மார்க்சிஸ்ட்கள் போட்டியிடுவதால் விலைபோகாத பாஜக வேட்பாளர்கள்: மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பேச்சு

By செய்திப்பிரிவு

கோவை மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் போட்டியிடுவதால் வேறு வழியின்றி பாஜக போட்டி யிடுகிறது. இல்லையென்றால் அவர்களும் விலைபோயிருப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவை மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்பாளர் பத்மநாபனை ஆதரித்து கோவையில் கணபதி பகுதியில் உள்ள காமராஜபுரத்தில் பி.சம்பத் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் போட்டியிடும் என் கிற நிலை சமீபகாலமாக தமிழகத் தில் உருவாகி வருகிறது. தங்கள் கட்சி வெற்றிபெற வேண்டும் என்ப தற்காக ஆளும் கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்று எண்ணுகின்றனர்.

கோவையில் நடைபெறும் மேயர் இடைத்தேர்தல் பொதுமக் கள் மீது திணிக்கப்பட்ட தேர்தலாகும். மூன்றாண்டுகளுக்கு முன்பு மேயராக இருந்தவர் என்ன ஆனார். ஏன் இந்த தேர்தல் என்று கோவையில் முகாமிட்டுள்ள 20 அமைச்சர்களோ, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோ, அதிமுகவினரோ மக்களிடம் சொல்வார்களா?.

மூன்றாண்டுகள் தமிழக மக்களுக்கு இந்தந்தத் திட்டங்களை நிறைவேற்றினோம் என்று அரசின் சாதனையை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். ஆனால், கோவை யில் முகாமிட்டுள்ள அதிமுகவின ருக்கு இது குறித்து சிந்திக்க நேரம் இல்லை. தேர்தலில் வெற்றி பெறவேண்டும் அதற்கு என்ன விலையாகும் என்கிற கணக்குதான் இவர்கள் முன் நிற்கிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் எதிர்க் கட்சிகள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை, நெல்லையில் பாஜக உள்ளிட்ட சில இடங்களில் வேட்பாளர்களை விலை கொடுத்து வாங்கி விட்டார்கள். தேர்தல் நடக்காமலே அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டார்கள்.

ஆனால் விலை பேசமுடியாத வேட்பாளர்களாக கம்யூனிஸ்ட்கள் இருப்பதால் கோவையில் தேர்தல் நடக்கிறது. கோவை மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் போட்டியிடுவதால் வேறு வழியின்றி பாஜக போட்டியிடுகிறது. இல்லையென்றால் அவர்களும் விலைபோயிருப்பார்கள்.

அதிகாரத்துக்கும், பணத்துக்கும் விலைபோகாத மக்கள் ஏராளமானோர் இருப்பதால் அவர்களின் நம்பிக்கையாய் கம்யூனிஸ்ட்கள் தேர்தல் களத்தை சந்திக்கிறோம் என்றார்.

இக்கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், வடக்கு நகரக் குழுச் செயலாளர் என்.ஆர்.முருகேசன் உள்பட பலர் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் சௌந்திரராஜன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE