தமிழ்நாட்டில் பல்லாயிரம் கோடி மதிப்பில் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் தினமும் 40 ஆயிரம் லாரி லோடு ஆற்று மணல் தேவைப்படுகிறது. ஆனால், அந்த அளவுக்கு மாநிலத்தில் ஆற்று மணல் கிடைப்பதில்லை. நீதிமன்றமும் ஆற்று மணல் அள்ளுவதற்கு பல இடங்களில் தடை விதித்து உள்ளது.
அதனால் எம்-சாண்ட் (நொறுக்கப்பட்ட கல்மணல்) பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தமிழக அரசு, தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் மலேசிய ஆற்று மணலை வாங்கி, பரிசோதனை செய்து விற்று வருகிறது. தற்போது தூத்துக்குடியிலும், சென்னை எண்ணூரிலும் மலேசிய ஆற்று மணல் விற்கப்படுகிறது. இதனால் மணல் தட்டுப்பாடு நீங்கியிருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், விலை அதிகமாக இருப்பதால் வெளிநாட்டு ஆற்று மணலைவிட எம்-சாண்ட் அதிகம் விற்கப்படுவதாக கட்டுனர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத் தலைவர் எல்.வெங்கடேசன் கூறியதாவது:தமிழ்நாட்டிற்கு தினமும் 40 ஆயிரம் லாரி லோடு ஆற்று மணல் தேவைப்படுகிறது. சென்னைக்கு மட்டும் 10 ஆயிரம் லாரி லோடு வேண்டும். ஆனால், ஆற்று மணல் 5 ஆயிரம் லாரி லோடு மட்டுமே கிடைக்கிறது.
வெளிநாட்டு ஆற்று மணல் துறைமுகத்தில் ஒரு கனஅடி ரூ.110-க்கு விற்கின்றனர். போக்குவரத்துச் செலவு சேர்த்தால் ஒரு கனஅடி ரூ.160-க்கு கிடைக்கிறது. ஆனால், எம்.சாண்ட் ஒரு கனஅடி ரூ.65-க்கு விற்கப்படுகிறது. அதனால், எங்கள் சங்க உறுப்பினர்கள் 2 ஆயிரம் பேரும் அரசு அங்கீகரித்துள்ள 71 எம்-சாண்ட் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து எம்-சாண்ட் வாங்கி அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் விற்கப்படும் மலேசிய ஆற்று மணலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் 300 லாரி லோடு மணல் விற்கப்படுக்கிறது. அதனால் தைப்பொங்கலுக்குப் பிறகு 20-ம் தேதிவாக்கில் 4-வது கப்பலில் 52 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் வருகிறது.
சென்னையில் ஒரு யூனிட் (4.5 மெட்ரிக் டன்) ரூ.10,350-க்கு விற்கிறோம். தூத்துக்குடிக்கு வந்த முதல் கப்பல் லோடில் இதுவரை 20 சதவீதம் மட்டுமே விற்றுள்ளது. அதனால் அங்கு மீண்டும் மணல் இறக்குமதி செய்யப் போவதில்லை. திருச்சியில் இருந்து சென்னைக்கு காவிரி ஆற்று மணல் 3 யூனிட் கொண்ட ஒரு லாரி லோடு ரூ.42 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்றது. ஆனால், மலேசிய ஆற்று மணல் ரூ.31,000-க்குத்தான் விற்கப்படுகிறது. லாரி வாடகையை சேர்த்தாலும், ரூ.8 ஆயிரம் வரை மிச்சமாகும். அத்துடன் மலேசிய மணலை நாங்கள் நன்கு கழுவி, சலித்து விற்பதால் மணலை 100 சதவீதம் பயன்படுத்தலாம். விரயம் இருக்காது.
இப்போது துறைமுகத்தில் இருந்து லாரி உரிமையாளர்களே ஆன்-லைனில் பதிவு செய்து மலேசிய மணலை எடுத்துச் செல்கிறார்கள். அதுபோல மக்களும் ஆன்-லைனில் பதிவு செய்தால், அவர்களது வீடுகளில் நேரடி விநியோகம் செய்ய ‘இல்லம் தேடி மணல்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்-லைனில் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
உடனே, தானியங்கி முறையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வீட்டுக்கும் எண்ணூர் துறைமுகத்துக்கும் இடைப்பட்ட தூரம், அதற்கான லாரி வாடகையைச் சேர்த்து உரிய கட்டணம் நிர்ணயித்து தெரிவிக்கப்படும். அத்தொகையை செலுத்தியதும், நான்கு நாளில், உங்கள் லாரி லோடு மணல் தயார் நிலையில் இருக்கிறது என்று செல்போனில் குறுஞ்செய்தி வரும்.
துறைமுகத்தில் இருந்து மணல் ஏற்றி லாரி புறப்பட்டதும், வாடிக்கையாளர் தனது செல்போனில் லாரி வருவதை அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளருக்கு ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ (ஓடிபி) தரப்படும். வீட்டுக்கு லாரி லோடு வந்து இறக்கிய பிறகு அந்த ஓட்டுநரிடம் அந்த ஓடிபி-ஐ சொல்ல வேண்டும். அவர் தனது செல்போனில் அதைப் பதிவிட்ட பிறகுதான் அந்த ‘டிரிப்’ நிறைவடையும்.
இந்த லாரி லோடைக் கொண்டு போய் சேர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டால் அந்த லாரிக்கு மீண்டும் லோடு தரப்படமாட்டாது. அத்துடன் அரசு சார்பில் லாரியுடன் ஒரு நபரை அனுப்பும் மற்றொரு திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது.
‘இல்லம் தேடி மணல்’ என்ற புதிய திட்டத்தை அடுத்த மாதம் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago