உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றப் பணிகள் தொடங்குவதற்கு சற்று முன்பு, மர்ம நபர் ஒருவர் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பணியில் இருந்த ஊழியர் ஒருவர் தொலைபேசியை எடுத்துள்ளார். அப்போது பேசிய நபர் ‘இன்னும் சற்று நேரத்தில் உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிக்கும்’ என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

இதேபோல் காவல்துறை கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

இந்த மர்ம தொலைபேசி அழைப்புகளை அடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் 2 மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். தலைமை நீதிபதி வழக்குகளை விசாரிக்கும் முதல் அமர்வு உட்பட அனைத்து நீதிமன்ற அறைகளிலும் மோப்ப நாயுடன் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பிறகு இது வெறும் புரளி எனத் தெரியவந்தது.

தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு சோதனையினால் நீதிமன்றப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

நீதிபதிகள் வழக்கம் போல் வழக்குகளை விசாரித்தனர்.​

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE