திருவாரூர் இடைத்தேர்தல் மற்ற கட்சிகளைவிட திமுகவுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும் தேர்தலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், அவர் என்னென்ன நெருக்கடிகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன?
திருவாரூர் திமுகவின் கோட்டை. 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு தேர்தல் வரை திமுக ஆதிக்கம் செலுத்தி வரும் தொகுதி. இந்திரா காந்தி மரணம், எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1984-ம் ஆண்டு தேர்தலில்கூட இங்கே திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோல 1991-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அலையிலும்கூட திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக 1980-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே இங்கே தோல்வியடைந்தது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவை 1,528 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.
நீண்ட நாட்களாகத் தனித்தொகுதியாக இருந்த திருவாரூர், 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் பொதுத் தொகுதியாக மாறியது. இந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது கருணாநிதியின் நீண்ட நாள் கனவு. தொகுதி மறுசீரமைப்புக்கு அது நனவானது. 2011-ம் ஆண்டில் இங்கே போட்டியிட்ட கருணாநிதி, 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றார். இதேபோல 2016 திருவாரூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் கருணாநிதி 1,21,473 வாக்குகளைப் பெற்றார். அதிமுக 53,107 வாக்குகள் மட்டுமே பெற்றது. கருணாநிதி 68, 366 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமாக வெற்றிபெற்றார்.
இப்படி பாரம்பரியமாக திருவாரூர் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்துவருகிறது. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், அனுதாப அலை திமுகவுக்கு சாதகமாக வீச வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்ல, எம்ஜிஆர், ஜெயலலிதா என அதிமுகவின் இரு பெரும் தலைவர்கள் இருந்த காலத்திலேயே அவர்களால் திமுகவை இங்கே அசைத்து பார்க்க முடியவில்லை. ஆனால், தமிழகத்தில் நிலவும் மாறுபட்ட இடைத்தேர்தல் அணுகுமுறையால், முந்தைய காலத்தைப்போல திருவாரூர் தொகுதி திமுகவுக்கு மிக சாதகமான தொகுதியாக இருக்குமா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. அதிமுக, அமமுகவைவிட திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதே நிதர்சனம். அதற்கு பல காரணங்கள் உண்டு.
திமுகவின் சிட்டிங் தொகுதி என்பதால், மற்ற கட்சிகளைவிட திமுகவுக்குத்தான் இந்த இடைத்தேர்தல் ஆசிட் டெஸ்ட்டாக இருக்கக்கூடும். திமுகவை 50 ஆண்டு காலம் கட்டிக் காத்த கருணாநிதியின் தொகுதியைத் தக்கவைக்க வேண்டும் என்ற நெருக்கடி திமுகவுக்கு இயல்பாகவே ஏற்படக்கூடும்.
2017-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது. அந்தத் தொகுதி அதிமுகவின் கோட்டை என்றாலும், அதிமுகவும் தினகரனும் முட்டிக்கொண்ட போதிலும், அந்தத் தேர்தலில் திமுகவின் பாரம்பரிய வாக்குகள் காணாமல் போயிருந்தன. இது ஸ்டாலின் தலைமைக்கு சோதனையை ஏற்படுத்தியது. அப்போது முதலே ஆர்.கே. நகரில் திமுக டெபாசிட் இழந்ததைக் குறிப்பிட்டு பேசுவதை திமுகவை விமர்சிப்போர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் அந்தக் கறையைப் போக்க வேண்டிய பெரும் பொறுப்பு திமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இந்தத் தேர்தல் அவருடைய தலைமையை மதிப்பிடும் தேர்தலாகவும் அமைய வாய்ப்புகள் உள்ளன. அதையும் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி இயல்பாகவே திமுகவுக்கு தொற்றிக்கொள்ளக்கூடும். ஒருவேளை ஸ்டாலினின் சகோதரர் அழகிரி திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அந்த இடையூறையும் திமுக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வழக்கமாகவே பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் உள்ள அணுகுமுறை மாற்றம் திருவாரூரிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் உண்டு. ஆட்சி, அதிகாரத்தோடு தேர்தலை எதிர்கொள்வதற்கும் ஆட்சியில் இல்லாதபோது தேர்தலை எதிர்கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை திமுக நன்றாகவே உணர்ந்திருக்கும். அதையும் இந்த இடைத்தேர்தலின்போது திமுக சமாளிக்க வேண்டியதிருக்கும்.
அதிமுக, அமமுகவைப் பொறுத்தவரை அவர்களுக்குள் யார் அதிகமாக வாக்குகள் வாங்குகிறார்கள்; தொண்டர்களும் மக்களும் யாரை ஆதிரிக்கிறார்கள் என்ற போட்டியோட மட்டுமே இங்கே தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புகள் உண்டு. இந்த இரு கட்சிகளும் தோல்வியடைந்தால், அது அவர்களைப் பெரிய அளவில் பாதிக்காது. யார் அதிகமாக வாக்குகள் பெற்றார்களோ, அதை வைத்து அவர்களுக்குள் அரசியல் நகர்வுகள் மட்டுமே மாறுபடும். ஆனால், திமுகவுக்கு சறுக்கல் ஏற்பட்டால், ஸ்டாலினின் தலைமை பற்றிய விவாதம் சூடுபிடிக்கும். அது அடுத்த மூன்று மாதங்களில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சிக்கு அவநம்பிக்கையைக் கொடுத்துவிடும்.
அதனால்தான் இந்த இடைத்தேர்தல் பலவகையில் மற்ற கட்சிகளைவிட திமுகவுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago